பெயர்க் குழப்பம்: குழந்தைகள்: நூலகங்கள்

சீனி என்னை அழைத்து ஔரங்ஸேப் விழா பற்றி எழுதியதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய முடியுமா என்று சிவபாலன் கேட்கிறார் என்றார். சிவபாலனா, ”திருப்பூர்க்காரர்தானே? ஒரு லட்சம் கொடுத்தாரே?” என்றேன்.

அதில்தான் பிரச்சினையே…

என்ன பிரச்சினை?

அவர் திருப்பூர் இல்லை, பொள்ளாச்சி.

ஓ, மாற்றி விடுகிறேன்.

அது மட்டுமல்ல.

பின்னே?

அவரைப் பற்றி நீங்கள் எழுதியதைத் தன் நண்பர்களிடமும் குடும்பத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் பெயரும் தப்பாக உள்ளது, ஊரும் தப்பாக உள்ளது. கொஞ்சம் சாருவிடம் சொல்லி மாற்ற முடியுமா என்று கேட்கிறார்.

அடடா, அவரே என்னை அழைத்திருக்கலாமே சீனி? அது இருக்கட்டும், அவர் பெயர் சிவபாலன் தானே?

சிவபால கணேசன்.

சே. ரொம்ப வருத்தமாக இருக்கிறது சீனி. ஒருத்தர் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறார். அவர் பெயரையும் ஊரையும் கூடத் தப்பாக எழுதுகிறேன்.

அதெல்லாம் நாங்கள் புரிந்து கொள்வோம். கலைஞர்கள் அப்படித்தானே இருப்பார்கள்?

பொள்ளாச்சி சிவபால கணேசனும் நானும்

அதேபோல் நேற்று ஒரு பிழை. ப்ரியா அனுப்பியிருந்த சிறார் நூலகம் பற்றிய செய்தியையும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தேன். அதில் ப்ரியதர்ஷினியும் அவர் கணவர் செல்வராஜும் என்று இரண்டு முறை எழுதி வாழ்த்து சொல்லியிருந்தேன். அதில் ப்ரியாவுக்கு ரொம்பவும் சந்தோஷம் போல. ஆர்வத்துடன் கொண்டு போய் கணவரிடம் காண்பித்திருக்கிறார். உன் பெயர் சரி, என் பெயர் தப்பா இருக்கே என்று சொல்லியிருக்கிறார். விஷயம் என்னவென்றால், செல்வராஜ் என்பது ப்ரியாவின் தந்தை. பெண்களின் பெயரின் பின்னே வரும் பெயர்களைக் குறிப்பிடுவதில் நான் அதிகவனமாக இருப்பவன். நேற்று ஏதோ பிசகி விட்டேன். கணவர் பெயர் யுவராஜ். ப்ரியாவுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தில் இதை அவரும் கவனிக்கவில்லை போல. தவறுக்கு வருந்துகிறேன் திரு யுவராஜ்.

ப்ரியாவும் அவர் கணவர் யுவராஜும் புகைப்படத்தில்…

இதையெல்லாம் நான் ஏன் இவ்வளவு விரிவாக எழுதுகிறேன் என்றால், நூலகங்களின் முக்கியத்துவம் பற்றி நாம் அனைவருமே உணர வேண்டும் என்பதனால்தான். என் தலைமுறை எழுத்தாளர்கள் அத்தனை பேருமே நூலகங்களால் உருவானவர்கள்தான். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் மயிலாப்பூர் டவுன் பஸ்ஸில் பார்த்த ஒரு காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க இயலாது.

அப்போது நான் மயிலாப்பூர் பாபா கோவிலுக்குப் பின்னே வசித்து வந்தேன். தினமும் லஸ்ஸில் பஸ் பிடித்து மவுண்ட் ரோடில் உள்ள அஞ்சல் தலைமையகத்துக்குச் செல்வேன். அப்போது ஒரு ஆறு வயது சிறுமி சீருடை இல்லாமல் ஏதாவது ஒரு கதைப் புத்தகம் (ஆங்கிலம்) படித்துக் கொண்டிருப்பாள். எனக்குக் குழந்தைகள் என்றால் பிடிக்காது என்பதால் பொதுவாகவே நான் குழந்தைகளின் பக்கம் திரும்புவதில்லை. குழந்தைகளைப் பார்த்து அசட்டுத்தனமாக இளிப்பதும் இல்லை. குழந்தைகளும் நுண்ணுணர்வு உள்ளவை என்பதால் என் பக்கம் திரும்புவதில்லை. எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்பது என் புத்தகத்தின் ஒரு தலைப்பு. குழந்தை என்றால் தெய்வம். நம் மனிதர்களின் நினைப்பு. ஆனால் இப்படிச் சொல்லிக் கொண்டே குழந்தைகளை ஒடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அதிகமாக ஒடுக்கப்படும் கூட்டத்தில் குழந்தைகளுக்குத்தான் முதல் இடம். காரணம், பெற்றோரும் சமூகமும். இப்படி சமூகத்தாலும் பெற்றோராலும் ஒடுக்கப்பட்டு வாழும் குழந்தைகளை எனக்கு எப்படிப் பிடிக்கும்? தொலைக்காட்சியின் இடம் என்ன? சினிமாவின் நீட்சி அது. அதேபோல் குழந்தைகள் பெற்றோரின் நீட்சியாக இருக்கிறார்கள். அப்படித்தான் உருவாக்கப்படுகிறார்கள். இப்படி உருவாக்கப்படும் இளம் பிரஜைகளை எனக்கு எப்படிப் பிடிக்கும்?

பேராசை, அடித்துப் பிடுங்குதல், அடுத்தவனை மிதித்து ஏறி முன்னேறுதல், பெற்றோரின் ரத்தத்தைக் குடித்தல், பண வெறி ஆகியவற்றைத்தானே பெற்றோர் தன் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்? ஒரு பெண் சொன்னாள், என் உடம்பு பூராவுமே யோனித் துவாரமாக மாறி குருதி கொட்டிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. வலியால் துடிக்கிறேன். ஆனாலும் என் மகனை நான் தான் பள்ளியில் கொண்டு போய் விட வேண்டும்.

மகன் ஆறு அடி உயரம் இருப்பான். பதினேழு வயது. ஆனாலும் வீட்டிலிருந்து ஒரு ஃபர்லாங் தூரத்தில் உள்ள – அதாவது பக்கத்துத் தெரு – பள்ளிக்கு சைக்கிளில் போய் வர முடியாது. அம்மாதான் ஸ்கூட்டரில் கொண்டு போய் விட்டு விட்டு வர வேண்டும். அம்மாவுக்கு மாத விடாயில் உடம்பே ரணமாய் வலிக்கிறது என்று மகனுக்குத் தெரியாது.

குழந்தைகளை எனக்கு எப்படிப் பிடிக்கும்?

சரி, ஆறு வயதுக் குழந்தையையும் பிடிக்காது என்றால் என்ன அராஜகம் என்று கேட்கிறார்கள். ஐயா, உங்களைப் பிடிக்காததால்தான் உங்கள் வாரிசுகளைப் பிடிக்கவில்லை. ஏனென்றால், குழந்தைகளை நீங்கள் உங்களுடைய நிழல்களாக உங்களுடைய நீட்சிகளாக வளர்க்கிறீர்கள்.

ஆறு வயதுச் சிறுமி. என் நண்பரின் பேத்தி. இளநீர் வாங்க இருவரும் சென்றிருக்கிறார்கள். பேத்தி இளநீர்க்காரரிடம் சொல்கிறாள். இளநி இனிப்பா இருக்கணும், நிறையா இருக்கணும், காசு கம்மியா இருக்கணும். ஆறு வயது என்று தயவு செய்து நம்புங்கள். இதை என் நண்பர் ஆச்சரியமாகச் சொன்னார். எனக்கோ அருவருப்பாக இருந்தது. ஆறு வயதிலேயே குழந்தையை பணப் பிசாசாக வளர்க்கிறோம். அந்தக் குழந்தையா பேசுகிறது? நாம் பேசுகிறோம். நம்மை நம் குழந்தைகள் பிரதி செய்கின்றன.

நான் தென்னமெரிக்கா செல்வதற்காக பணம் சேர்க்கிறேன். பத்து லட்சம் வேண்டும். பெரிய பயணம். பல நாடுகள். அதில் ஐந்து லட்சத்தைக் கடனாகக் கேட்டார் என் நண்பர். அவர் வேறு நான் வேறு அல்ல என நினைப்பவன் நான். எப்போது பயணமோ சொல்லுங்கள், தந்து விடுகிறேன் என்றார். உடன் அவரே, உத்தேசமாக எப்போது இருக்கும் என்றும் கேட்டார். ”அது எப்போது வேண்டுமானாலும் இருக்கட்டும். பணம் தருகிறேன். ஆனால் திருப்பித் தர வேண்டாம்” என்றேன்.

ஞானம் அடைந்து விட்டதால் சொல்லவில்லை. இருபது வயதிலும் நான் இப்படித்தான் இருந்தேன். காரணம், இலக்கியம்.

அப்படிப்பட்ட இலக்கிய நூலைப் படித்துக் கொண்டிருந்தாள் சிறுமி. சீருடை இல்லாத சிறுமி. பிக்விக் பேப்பர்ஸின் சுருக்கிய வடிவம், கவுண்ட் ஆஃப் மாண்டெ க்றிஸ்டோ இப்படி. நான் பல நாட்களாகக் கவனித்து விட்டு, எந்தப் பள்ளியில் படிக்கிறாய் என்றேன். வித்யா மந்திர் என்றாள். ஹோம் ஒர்க் தருவதில்லையா என்றேன். ஏனென்றால், அவள் வயதுக் குழந்தைகள் ஹோம் ஒர்க் செய்துதான் பார்த்திருக்கிறேன். எங்கள் பள்ளியில் ஹோம் ஒர்க் தருவதில்லை என்றாள்.

அவளைப் போன்ற ஒருவர்தான் என் வாசகியும் தோழியுமான ப்ரியதர்ஷிணி என்று நினைக்கிறேன். இப்படியான குழந்தைகளை உருவாக்க நூலகங்கள் அவசியம்.

நூலகங்களே ஆரோக்கியமான குழந்தைகளையும் இளைஞர்களையும் உருவாக்கும். அப்போது சொல்லுவேன், எனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும் என்று…