எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர்…

அமிர்தம் சூர்யா என் மீது அன்பு மிகக் கொண்டவர்.  என் இளவல்.  அதை விட முக்கியமாக, என்னைப் போலவே அல்லது அதை விட அதிகமாகவே வெகுளி.  சமீபத்தில் அவர் இப்படி எழுதியிருந்தார்.

”சாரு நிவேதிதாவின் எழுத்தாற்றலை புகழ்ந்து இன்னும் எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர் என்று ஆதங்கம்.காட்டினார்…”

சூர்யா ஒரு நண்பரைச் சந்திக்கிறார்.  இலக்கியவாதிகளின் சந்திப்பில் எத்தனையோ பேசுவோம்.  அதையெல்லாம் நாம் நம்முடைய சொந்தக் கருத்தாக வெளியே முன்வைப்போம் என்று சொல்வதற்கு இல்லை.  பல விஷயங்கள், பல அபிப்பிராயங்கள் அப்படியே பேச்சுப் போக்கில் வருபவை.  We don’t own them always.  அதையெல்லாம் பொதுவெளியில் நாம் ரிப்போர்ட் பண்ணி விடக் கூடாது.  அது மற்றவர்களின் கருத்து கூட அல்ல.  பேச்சுப் போக்கில் சொல்வது. அதற்கு ஏகப்பட்ட அர்த்தங்கள் இருக்கும்.  எனவே மேற்கண்ட அபிப்பிராயத்தில் எனக்குப் பிரச்சினை இல்லை.  இதை எடுத்து வெளியே எழுதி, இதையும் பாராட்டு என்று நினைத்து ஃபேஸ்புக்கில் என்னையும் இணைத்து வெளியிட்டதால்தான் சூர்யா மீது வருத்தம்.

நான் என்ன செத்தா போய் விட்டேன் சூர்யா?  எழுபது வயது ஒரு அதிக பட்ச வயதுதான் இந்தியாவில்.  ஆனாலும் இதே வயதில்தானே ஆறே மாதத்தில் 2000 பக்கங்களில் ஔரங்ஸேப் நாவலை எழுதியிருக்கிறேன்?  ஆறே மாதம்.  2000 பக்கம்.  இப்போது பிஞ்ஜில் வந்திருக்கிறது இல்லையா, அதில் ஒரு பாதி வெளியிடாமல் கையில் இருக்கிறது.  பிஞ்ஜில் போதும் என்று சொல்லி விட்டார்கள். 

அதிலும் ஔரங்ஸேப் நாவலை ஒருவர் மனதிலிருந்து எழுதி விட முடியாது.  இதற்காக நான் வாசித்த புத்தகங்கள் கணக்கில் அடங்காதவை.  நூறு பக்கங்கள் நான் படித்த நூற்பட்டியலைப் போட வேண்டியிருக்கும்.  என் வாசிப்பு வேகம் கம்மிதான்.  ஆனாலும் நேற்று மட்டுமே ஒரு 200 பக்க நூலைப் படித்து முடித்தேன்.  அதிலிருந்து ஒரு முக்கியமான தகவல் எனக்குக் கிடைத்தது.  அதை நாவலில் சேர்த்தேன்.  என்னவென்றால், ஔரங்ஸேப் தன் கதையில் அக்பரை கிழி கிழி என்று கிழிக்கிறார்.  நேற்றைய புத்தகத்தில் ஒரு தகவல்.  அக்பருக்கு முன்பு வரை ஹிந்தாவி என்ற மொழியே அரசு மொழியாக இருந்தது. ஹிந்தியின் பழைய வடிவம்.  அக்பர்தான் அதை மாற்றி ஃபார்ஸியே அரசு மொழி என்று கொண்டு வந்தார்.  அதன் பிறகுதான் அரசு அலுவலகங்களில் ஈரானியர்களின் ஆதிக்கம் அதிகரித்தது.  பிராமணர்கள் ஹிந்தியை விட்டு விட்டு ஃபார்ஸி கற்க ஆரம்பித்தனர்.  மதறஸாக்களில் முஸ்லிம்களை விட பிராமணர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.  இதை வைத்துக் கொண்டு சிலம்பம் ஆடுகிறார் ஔரங்ஸேப்.  இது நேற்று எழுதியது.  200 பக்க நூலை ஒரே நாளில் படித்து எடுத்து முத்து இது.  புத்தகம் சஞ்சய் சுப்ரமணியம் என்ற அறிஞர் எழுதியது.  இவர்தான் மொகலாய சரித்திரத்துக்கு அத்தாரிட்டி. 

இது போல் ஆறு மாதம் உழைத்தேன்.  மனைவியிடம் பேசவில்லை.  திருமணத்துக்குப் போகவில்லை. சாவுக்குப் போகவில்லை.  என் நண்பர்களின் படங்களைப் பார்க்கவில்லை.  பல நட்புகளை இழந்திருக்கிறேன்.  ஆரோவில் விழாவுக்கு ஃபாத்திமா பாபு வந்தார்.  இரண்டு நாட்கள் எங்களோடு தங்கினார்.  ஒரு ஃபோன் செய்து நன்றி ஃபாத்திமா சொல்லவில்லை.  ஆறு மாதமாக நான் தவம் செய்பவனைப் போல் வாழ்கிறேன்.  எதுவுமே என் கண்ணுக்குத் தெரியவில்லை.  குறி மட்டுமே தெரிகிறது.  எது?  ஔரங்ஸேப். 

2000 பக்கம். 

இன்னும் நான் என்ன எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் சூர்யா?  அல்லது, எதிர்பார்க்கிறீர்கள் நண்பர்களே? 

நானும் எத்தனை காலத்துக்குத்தான் என் பயோடேட்டாவையே தூக்கிக் கொண்டு அலைவது, சொல்லுங்கள்?  எனக்கும் அலுப்பாக இருக்காதா?  உலகத்தில் அவன் அவன் ஒரே ஒரு நாவலை எழுதி விட்டு வாழ்நாள் பூராவும் மஜா பண்ணிக் கொண்டு திரிகிறான்.  நான் அ-புனைவில் நூறு நூல்கள் எழுதியிருக்கிறேன். நாவல்கள் ஆறு.  அதில் எக்ஸைலும், ராஸ லீலாவும் மட்டுமே நாலைந்து நாவல்களுக்கு சமம்.  இப்போது ஔரங்ஸேப் 2000 பக்கம்.  அருந்ததி ராய் ஒரே ஒரு நாவலை எழுதி விட்டு உலகம் பூராவும் சுற்றிக் கொண்டு இல்லையா?  தமிழ் எழுத்தாளன் மட்டும் வாழ்நாள் பூராவும் செக்கு இழுத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? 

எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர்… என்ன வார்த்தை இது?  மரணப் படுக்கையில் கிடப்பவரைப் பார்த்து அல்லவா இப்படிச் சொல்ல வேண்டும்?  அப்படிச் சொன்னால் அடுத்த நொடியே உயிர் பிரிந்து விடும்.  கருணைக் கொலை மாதிரி.  ஏன் சாமிகளா, எழுதிக் குவித்தவனைப் பார்த்தா இப்படிச் சொல்வீர்கள்?  அதிலும் நீங்கள் குறிப்பிடும் நண்பர் இதுவரை எந்த விவகாரத்திலும் சர்ச்சையிலும் மாட்டிக் கொள்ள விரும்பாதவர்.  அவர் அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.  அப்படியென்றால் நீங்கள் இட்டுக் கட்டினீர்களா?  சத்தியமாக இல்லை.  அப்படியானால் எது உண்மை?  ரெண்டுக்கும் இடையில் இருக்கிறது.  நீங்கள் என் மீது அன்பைப் பொழிபவர்.  அவரோ அதற்கும் மேல்.  ”நீங்கள் எழுதியிருக்கும் எழுத்துக்கு குறைந்த பட்சம் ஆசிய அளவிலாவது தெரிந்திருக்க வேண்டாமா?” என்று என்னிடம் ஒருமுறை கேட்டார். 

மீண்டும் சொல்கிறேன் சூர்யா.  எல்லோரும் தினந்தோறும் 100 பக்கம் எழுத வேண்டிய அவசியம் இல்லை.  ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸ்தான் உலக நாவல் இலக்கியத்தின் உச்சம்.  நூறு சிறுகதைகள் எழுதின (அவ்வளவு கூட இருக்காது என்று நினைக்கிறேன்) போர்ஹேஸ்தான் சிறுகதையின் உச்சம். இங்கே மௌனி என்கிறார்கள்.  எழுதியது இருபத்தாறு கதைகளோ என்னவோ.  புயலிலே ஒரு தோணி என்று ஒரே ஒரு நாவலை எழுதி விட்டு வாழ்நாள் பூராவும் சும்மா உட்கார்ந்திருந்த ப. சிங்காரம் இங்கே நாவல் கலையின் உச்சம்.  எஸ். சம்பத் ஒரே ஒரு குறுநாவல்தான் எழுதினான்.  இடைவெளி.  நூறு பக்கம்.  அப்படி ஒரு நாவல் உலக இலக்கியத்திலேயே இல்லை.

எல்லாவற்றையும் விடுங்கள்.  ஹொசூரில் ஒருத்தர்.  நெற்றியில் குங்குமப் பொட்டு எல்லாம் வைத்துக் கொண்டு சாதுவாக இருக்கிறார்.  பா. வெங்கடேசன் என்று பெயர்.  அவர் எழுதிய பாகீரதியின் மதியம் என்ற நாவலைக் கடந்து உலக அளவில் ஒரு நாவல் இல்லை.  அவர் எழுதிய நாவல்களும் மூன்றோ நான்கோதான். 

ஆனால் நான் நிறைய எழுதிப் பழகியவன்.   தியாகராஜா பாதி முடித்து விட்டேன்.  அசோகா, 1857 ஆகியவற்றையும் முடிப்பேன்.  நீங்கள் வணங்கும் ஆதி பராசக்தி அதற்கான ஆயுளை எனக்குத் தர வேண்டும் என்று எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்…

இன்னொன்று சூர்யா, அப்படி வேண்டிக் கொள்ளும் போது என் அண்ணன் சாரு சமீபத்தில்தான் ஆரோவில் கிராமத்தில் இரவு ஒன்பது மணியிலிருந்து மூன்று மணி வரை டான்ஸ் ஆடினான், அதற்கு உனக்கு நன்றி சொல்லச் சொன்னான் பராசக்தி என்றும் சொல்லி விடுங்கள். நான் இன்னும் சொல்லவில்லை. கோபித்துக் கொள்ளப் போகிறாள்…