25 விருப்பக் குறிகள் (சிறுகதை)

மேற்கத்திய எழுத்தாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.  உதாரணமாக, மாரியோ பர்கஸ் யோசா.  சுமார் 25 நாவல்கள் எழுதியிருப்பார்.  அதில் பதினஞ்சு நாவல்கள் ஆயிரம் பக்கம் இருக்கும்.  என்ன ஆச்சரியகரமான விஷயம் என்றால், அந்த இருபத்தஞ்சையும் ஒரே ஆள்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பார்.  அப்படியானால் அவர் தன் வாழ்க்கையையே யோசாவுக்காக அர்ப்பணித்திருக்க வேண்டும்.  இதைப் போலவேதான் காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ், போர்ஹெஸ் என்று எல்லோரும்.  ஒரே ஒரு ஆள்தான் மொழிபெயர்ப்பாளர்.  ஒரு ஆள் ஒரு எழுத்தாளருக்கு.  வாழ்நாள் பூராவும்.  இது ஏன் எனக்கு நடக்கவில்லை என்று யோசிப்பேன்.  நிச்சயமாக, அந்த மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும்.  இங்கே இல்லை.  ஆனால் நானும் சுமாராக பதினைந்து லட்சம் ரூபாய் மொழிபெயர்ப்புக்கு இதுவரை செலவழித்திருக்கிறேன்.  சிலது வெற்றி.  சிலது தோல்வி.  ஸீரோ டிகிரிக்கு மட்டுமே என் காசு போகவில்லை.  ஸீரோ டிகிரி வந்ததும் உலக அளவில் ஒரு கவனிப்பு விழுந்தது.  உடனடியாக ராஸ லீலா மொழிபெயர்ப்பு நடந்திருக்க வேண்டும்.  15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.  உலகம் மறந்து விட்டது. சமீபத்தில் மொழிபெயர்ப்பு கிடைத்தது.  ஆனால் எனக்கு அத்தனை திருப்தி இல்லை.  எனக்கு மட்டுமே.  தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் போகும் தொண்ணூறு சதவிகித படைப்புகளுக்கு அந்த மொழிபெயர்ப்பு பரவாயில்லை.  ஆனாலும் எனக்கு ஒரு கணக்கு உள்ளது.  மொழிபெயர்ப்பு என்றால் அது மார்ஜினல் மேன் மாதிரி இருக்க வேண்டும்.  மொழிபெயர்ப்பு மாதிரியே தெரியவில்லை என்றார் ஆர்ட்ரெவ்யூ ஏஷியா எடிட்டர் மார்க் ரேப்போல்ட். 

மொழிபெயர்ப்பையெல்லாம் விடுங்கள்.  நான் ஒரு சின்ன விஷயம் ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தேன்.  புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா, க.நா.சு., கோபி கிருஷ்ணன், நகுலன், ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி பேருரை ஆற்றியிருந்தேன்.  கொரோனா தீவிரமாக இருந்த காலத்தில்.  ஒவ்வொரு உரையும் காலை ஆறு மணிக்குத் தொடங்கும்.  பொதுவாக நான் நான்கு மணிக்கு எழுந்து கொள்ளும் ஆள்.  நிகழ்ச்சி என்பதால் அலாரம் வைத்துக் கொண்டே படுப்பேன்.  ஆனால் மூன்றரைக்கே எழுந்து விடுவேன்.  ஆறு மணிக்குள் ஒரு காஃபி மட்டும் குடித்திருப்பேன்.  அதிகாலையில் சாப்பிட முடியுமா என்ன?

நான் தொழில்முறைப் பேச்சாளன் அல்ல என்பதால் பேச்சின் இடையே தண்ணீர் கூடக் குடிப்பதில்லை.  ஆரம்பித்தால் ஒன்பதேகால் அல்லது ஒன்பதரை வரை போகும்.  இடையில் எந்தத் தடங்கலும் இராது.  தண்ணீர் குடித்தால் குடிப்பதற்கு முன் எங்கே விட்டேன் என்ற நூல் போய் விடும்.  அதனால் ஒன்பதே காலுக்கு பேசி முடித்து விட்டு கேள்வி நேரம் வரும்போதுதான் தண்ணீர் குடிப்பேன்.  பத்து மணிக்கு எல்லாம் முடியும் போது பசியில் மயக்கம் வருவது போல் இருக்கும்.  நான் இரவில் உண்பதில்லை என்பதால் நான் சாப்பிட்டு ஒரு இருபது மணி நேரம் ஆகியிருக்கும்.  போய்ப் பார்த்தால் சமையலறை துடைத்து விட்டுப் பளபளவென்று மின்னும்.  அவந்திகா.  காலை டிஃபன் என் வேலை. அவள் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, வீடு பெருக்கித் துடைப்பது எட்செட்ரா வேலையில் இருப்பாள். கொலைப் பசியுடன் தோசை போட்டு சாப்பிட்டு விட்டு அவளுக்கும் போட்டு வைப்பேன்.   

புதுமைப்பித்தன் பற்றிப் பேசும் போது நாலு மணி நேரம் பேசியும் இன்னும் பித்தனுக்குள்ளே போகாதது போல் தோன்றியதால் அவருக்கு மேலும் நான்கு மணி நேரம்.  வேறொரு நாள்.  இப்போது முதல் பாதி கிடைக்கவில்லை.  யாரிடமாவது பதிவு இருக்கிறதா என்று ஃபேஸ்புக்கில் கேட்டால் இருபத்தைந்து விருப்பக் குறி கிடைத்துள்ளது. 

ஆனால் நீங்கள் என் தந்தை, நீங்கள் என் ஆசான், நீங்களே கடவுள்… எனக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்த்தால் நெகிழ்ந்து நெக்குருகி விடுவீர்கள்.  எந்த வார்த்தையும் பொய்யில்லை.  உணர்ந்தே எழுதுகிறார்கள்.  செயல் என்று வரும்போதுதான் சுணங்கி விடுகிறது. 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நம் மரபு.  மேற்கத்தியர்களுக்கு அதெல்லாம் இல்லை.  ஆனால் சொல்லாமல் செய்கிறார்கள்.  மேலே ஆரம்பத்திலிருந்து மீண்டும் படியுங்கள்.  இங்கே சொல்கிறார்கள்.  உணர்கிறார்கள்.  செயலில் காணோம். 

எனக்காக ஒருவர் உண்டு.  ஸ்ரீராம்.  அவரிடமும் புதுமைப்பித்தன் பதிவு இல்லை.

இங்கே டார்ச்சர் கோவிந்தன் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.  என் தற்கொலைப் படை.  அவரிடம் போய் நீங்கள் என்னைப் பற்றி விமர்சனம் பண்ணி விட்டு சேதாரம் இல்லாமல் வெளியே வர முடியாது.  இந்த விஷயம் தெரியாமல் சிலர் போய் மாட்டிக் கொள்வதையும் கேள்விப்படுகிறேன். 

ஆனால் டீஜி கடந்த ஐந்து ஆண்டுகளாக என் ப்ளாக் படிப்பதில்லை.  பிஸி.  என் காலை நேரத்துப் பேருரைகள் எதையும் கேட்டதில்லை. பிஸி.  காலையில் அப்படி என்ன பிஸி என்று ஒருநாள் கேட்டேன்.  குழந்தைக்கு சாதம் ஊட்டினேன் என்றார்.  அடப்பாவி, உம் மகனுக்கு எப்போது கல்யாணம் நடந்தது?  அதற்குள் குழந்தையும் பிறந்து விட்டதா?  சொல்லவே இல்லையே?

என்ன நக்கலா?  எப்போது இருந்தாலும் என் பையன் எனக்குக் குழந்தைதானே?

எது, இருபத்தஞ்சு வயசு தடிமாடு குழந்தையா?  வெட்கமாக இல்லையா?

இதோ பாருங்கள் சாரு, இதெல்லாம் உங்களுக்குப் புரியாது.  வேறு பேச்சு பேசுவோம்.

ஆக, மொத்தம் என் பேருரை எதையும் டீஜி கேட்டதில்லை.  எப்படியோ தொலையும் என்று விட்டு விட்டேன்.  ஆனால் தினமும் என் நடைப் பயிற்சியின் போது ஒரு மணி நேரம் ஃபோனில் பேசுகிறோம் இல்லையா?  அப்போது அவர் கேட்கும் பல விஷயங்களுக்கு என் புதுமைப்பித்தன் எட்டு மணி நேரப் பேச்சில் பதில் இருக்கும். 

கேட்டு விடுங்கள் என்பேன்.

ஒரு வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  கேட்டு விடுங்கள்.  கேட்டு விடுங்கள்.  கேட்டு விடுங்கள். 

ம்ஹும்.  நேரம் இல்லை.

நான் ஒரு உபாயம் சொன்னேன்.  நீங்கள் ஆஃபீஸுக்குப் போகும்போது நீங்கள் கார் ஓட்டுவதில்லை.  டிரைவர்தான் ஓட்டுகிறார்.  நீங்கள் சும்மாதான் இருக்கிறீர்கள்.  அப்போது ஒரு பதினைந்து நிமிடம் கேளுங்கள்.  அந்தக் கணக்கில் 32 நாட்களில் கேட்டு விடலாம். 

நல்ல ஐடியா.  லிங்க் கொடுங்கள்.

காணொலியை அனுப்பி வைத்தேன்.  ஆறு மாதம் ஆயிற்று.  கேட்கவில்லை.

மீண்டும் பழையபடி. 

இனி அது பற்றிப் பேச வேண்டாம். எனக்குக் குற்ற உணர்ச்சி மேலிடுகிறது என்றார் டீஜி.  ஆனால் கேட்டு விடுவேன் என்று உறுதி கூறினார்.

காணொலி இருக்கிறதா?

இல்லை, அனுப்பி வையுங்கள்.

ஏன், முன்பு அனுப்பினேனே?

போன் மாற்றினேன்.  போய் விட்டது.

கதை முடிவுக்கு வந்து விட்டேன்.  என் கிடங்கில் புதுமைப்பித்தன் பற்றிய என் பேச்சின் முதல் பாதி இல்லை.  உங்களிடம் இருக்கிறதா என்று கண்மணிகளிடம் கேட்டேன்.  25 விருப்பக் குறிகள் கிடைத்தன.