ஔரங்ஸேப் – ஓர் அறிமுகம்

நான்தான் ஔரங்ஸேப்.,. நாவலை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  அது ஒரு பெரும்பணி.  இன்னும் கொஞ்சம் எழுதிச் சேர்க்கிறேன்.  நிச்சயமாக இது பிஞ்ஜில் வந்ததை விட வேறு விதமாக இருக்கும். அடிப்படை அமைப்பு மாறாது.  எக்ஸைல் முன்பு 350 பக்கமாகவும், பிறகு 1000 பக்கமாகவும் விரிந்தது போல.  இதெல்லாம் திட்டமிட்டுச் செய்ததல்ல.  அரபி, அறபி – எப்படி எழுதுவது என்று கொள்ளு நதீமிடம் கேட்டேன்.  அதேபோல், Master of the Jinn என்ற நாவலை ஆங்கிலத்திலும் கூடவே தமிழிலும் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இர்விங் கர்ஷ்மார் எழுதியது.  இதை ஜின்களின் ஆசான் என்று ரமீஸ் பிலாலி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  அழகான மொழிபெயர்ப்பு.  சீர்மை பதிப்பக வெளியீடு.  இந்த நாவலில் ஸீரோ டிகிரி நாவலில் வரும் ஒரு கதை அப்படியே வருகிறது.  அது ஒரு புராணிகக் கதை.  எல்லா மதங்களிலும் புராணிகக் கதைகளும் அவற்றின் செய்திகளும் ஒன்றே போல் இருக்கின்றன.  இந்தியக் கதையில் எமன்.  மூஸா நபியின் கதையில் இஸ்ராயீல்.  அதுதான் வித்தியாசம்.  கதையும் செய்தியும் ஒன்றுதான்.  இந்த செப்பனிடும் வேலை இன்னும் ஒரு மாதம் எடுக்கலாம்.

இனி கொள்ளு நதீமின் கடிதம்:

வணக்கம் சாரு!

பேராசிரியர் ரமீஸ் பிலாலியிடம் பேசினீர்களா?

அவர் அடிப்படையில் தமிழ்ப் பேராசிரியர், சூஃபிய தரீக்காவிலுள்ள முஸ்லிம். அவருக்கு ஆங்கிலமும், தமிழும் சரளமாக வருகிறது. அதுபோக அரபு, உருது, பார்சியில் ஓரளவு பயிற்சி இருக்கிறது. அரபு, அரபி என்பதை அறபு, அறபி என்று வல்லின ‘ற’ பயன்படுத்துவதை சீர்மை பதிப்பகம் ஒரு வழிகாட்டு நெறிமுறையை கைக்கொள்ளவும், படிப்படியாக அதை தமிழ்ச் சூழலில் அறிமுக்கப்படுத்தவும் விரும்பியது.

அதை விளக்க தங்களுக்கு சில பின்னணி விஷயங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. அரபு – அறபு என்று எழுதுவதில் அரபு, அரபி என்று எழுதிக் கொண்டிருப்பது பொதுப் போக்காக உள்ளது. பாளையங்கோட்டை சதக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் நியமத்துல்லா, தற்போது திருச்சியில் வசித்து வருகிறார். அடுத்து சுந்தர்ராசு என்பவரும் பேராசிரியர், டில்லி ஜெ.என்.யு.வில் பணிபுரிகிறார். சுந்தரராசு ‘தொல்காப்பியமும் அல்-கிதாபும்’ என்றொரு நூலை எழுதியவர். நியமத்துல்லா திருக்குர்ஆன் ஆங்கில /தமிழ் மொழிபெயர்ப்புகள் குறித்த இரண்டு பிஹெடி ஆய்வைச் செய்தவர். அதே போல அரபு இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற ஒரே நாவலாசிரியர் நாகிப் மஃபூஸ். அந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் அங்கு (JNU) அப்பொழுது இருந்த பேராசிரியர் பஷீர் ஜமாலி, தமிழில் “நம் சேரிப் பிள்ளைகள்” – ஆங்கிலத்தில் ‘Children of Alley’ – இதில் நியமத்துல்லாவும், சுந்தரராசும் தமது நூலில் சொல்லக் கூடிய விஷயம். அரபு நபர்களின், இடங்களின், பொருட்களின் பெயர் எப்படி எழுதுவது என்பதில் வரைமுறையற்று இருப்பது பெரும் குழப்பத்தை தருகிறது. ஆங்கிலத்தில் இதை ஓரளவு தரப்படுத்தியுள்ளனர், தமிழ் போன்ற ஆசிய மொழிகளில் அந்தப் பெயர்கள் தாறுமாறாக உள்ளன. இதைத் தவிர்க்க அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைக்கின்றனர். Unified codification வகையில் இப்போதைக்கு அவர்களின் கருத்துக்களே முதன்மையாகவும், முன்னோடியானதாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ‘சீர்மை பதிப்பகத்தின்’ முக்கியச் செயல்பாடு அரபு இலக்கியத்தை நவீன தமிழில் தருவது என்பதே, அதனால் ‘சீர்மை பதிப்பகம்’ இதே முறையில் பெயர்களை முறைப்படுத்தி வெளியிட்டு வருகிறது. சுந்தரராசு எழுதிய இரண்டு நூல்கள்: 1) அறபும் தமிழும் 2) தொல்காப்பியமும் அல்கிதாபும் (காலச்சுவடு பதிப்பக வெளியீடு). இவற்றை படித்தீர்களென்றால் இதெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆகவே Philologist மொழியியல் நிபுணர்களின் துறை சார்ந்த ஆலோசனைகளுடனே சீர்மை பதிப்புகள் வெளியாகின்றன.

ஔரங்கசேப் – படிக்கும்போதே எனக்குத் தோன்றிய யோசனை. இதற்கொரு Epilogue-ன் தேவை இருக்கிறது, ஒரே பெயர் பல்வேறு விதமான உச்சரிப்பில் வெவ்வேறு அத்தியாயங்களில் வருவது குழப்பதைத் தரக்கூடும். நான் ஆங்கிலத்தில் இதில் வரக்கூடிய பாத்திரங்களின் பெயர்களை Excell spread sheet-ல் போட்டுக் கொண்டு வருகிறேன், பொதுவாகவே சற்று பெரிய சைஸில் வரக்கூடிய நாவல், வரலாற்று நூல்களை அப்படியே குறித்துக் கொண்டு படிப்பது என் வழக்கம். அந்த வகையில் – இதிலுள்ள சிரமம் என்பது செல்போனில் Bynge-ல் படிக்கும்போது லேப்டாப்பில் அதை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இது முதலில் முழுமையாக எழுதி முடிக்கப்படவில்லை, அதனால் நூலாகவும் கிடைக்கவில்லை, எனவே இப்போதைக்கு சற்று காத்திருக்கிறேன், 

நாகூர் ரூமியின் நூல் – திராட்சைகளின் இதயம் இங்கு சென்னையில் புத்தகக் கடைகளில் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைத்தவுடன் அதையும் சூஃபியின் தடம், வேறு ஒன்றிரண்டு நூல்கள் தங்களுக்கு அனேகமாக திங்கட் கிழமை அனுப்பி வைக்கிறேன். முன்பு ‘எதிர் வெளியீடு’ பதிப்பக நூல் கட்டு பார்சலை திறக்க சிரமப்பட்டு போனதை எழுதியிருந்தீர்கள். இதற்கும் அவ்வளவு கஷ்டப்பட்டீர்களா என்று தெரியவில்லை, கூரியரில் புத்தகங்கள் சேதமடைகின்றன, இல்லையெனில் இவ்வளவு மெனக்கெடத் தேவையில்லை. எனினும் தொந்தரவு ஏற்பட்டிருந்தால் பொறுத்தருள்க! ஔரங்கசேப் நாவல் படிக்கக் கூடிய வாசகர்களில் சற்று தீவிரமானவர்கள் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் முகலாயர்களை வாங்குவதால் விற்பனை கூடியிருப்பதாக முகில், மருதன் ஆகியோர் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளனர். தாங்கள் இதற்கு நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்திருப்பதாக சொல்லியுள்ளதால் அவற்றை முழுமையாகவோ, அல்லது முக்கியமான சில டஜன் நூல்களையோ இதன் முடிவுரை பக்கத்தில் இணைக்கவும். இதொரு நாவல் மட்டுமல்ல, மகத்தான ஆய்வு நூலும் என்பதால் அதன் நம்பகத்தன்மையை மறுஉறுதி செய்ய விரும்பக் கூடிய (என்னைப் போன்ற)வர்களுக்கு அந்த வாய்ப்பை தாங்கள் அளிக்கலாம்.

நன்றி, தொடர்பில் இருப்போம்.

கொள்ளு நதீம்.

ஆம் நதீம், பார்சலைப் பிரிப்பதற்குள் கத்தி உடைந்து விடும் போல் இருந்தது.  உடைந்து விட்டால் யாருக்கும் தெரியாமல் கத்தியைப் பதுக்கி விடுவது என்று நினைத்திருந்தேன்.  நல்லவேளை, உடையவில்லை.  புத்தகங்களைப் பழுதாகாமல் எப்படி அனுப்புவது என்பதில் ஸீரோ டிகிரி பதிப்பகத்தினர் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  எந்த சிக்கலும் இல்லாமல்  பிரிக்க முடிகிறது. 

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நண்பர்களிடம் பேசுகிறேன்.  உதவியாகத்தான் இருக்கும்.  ரமீஸ் பிலாலியும் நல்ல பல ஆலோசனைகளை நல்கினார். 

சாரு