சொல்

எறும்பின் காலம் வேறு மனிதனின் காலம் வேறு

பட்சிகளின், நட்சத்திரங்களின்

காலம் வேறு.
இது யார் சொன்னது எனக் கேட்டது

பக்கத்து வீட்டுப் பலவர்ணக் கிளி.

காலத்தைப் பேசியவரின் பேர் சொன்னேன்
அதற்கும் எனக்குமிடையே

சொற்களின் வழியே

ஒரு சிநேகிதம் மலர்ந்தது

வளர்ந்தது

மலர்வதற்கு நட்பு என்ன மலரா

வளர அதுவொரு கொடியா

என்றது பஞ்சவர்ணம்

பேரை மாற்றாதே

அடையாளமிழந்து என்னால் வாழ முடியாது

என்று கத்தியது கிளி 

முன்பு வாழ்ந்த பேருக்கு

இது பரவாயில்லை எனத் தலையசைத்தது.
ஒருநாள் எங்கள் தத்துவ உரையாடலின் இடையே

கிளி கேட்டது.
மனிதர்களேன் நாயிடமும் பூனையிம் நட்பு பாராட்டுகிறார்கள் தெரியுமா?

தெரியாதே என்றேன்

“சொல்லற்றிருப்பதுவே காரணம்

சொற்கள் ஆபத்தானவை அனுபவத்தில்

சொல்கிறேன்”என்றது

இதற்கு முன்பு நான்

வேறோர் வாழ்வில் இருந்தேன்

ரஞ்ஜனி ஊருக்குப் போயிருந்தபோது

என் காதில் விழுந்த சொற்களை ரஞ்ஜனி

வந்த பிறகு பேசிக் காட்டினேன்

உடனே அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் ரஞ்ஜனி

எஜமானன் என்னைக் கொல்லச் சொல்லித் தந்துவிட்டான்

எடுத்துப் போனவன் என்னை நல்ல விலைக்கு

விற்று விட்டான்.

அப்படித்தான் இங்கே வந்து சேர்ந்தேன் என்றது.

என்ன சொன்னாய் அப்படி என்றேன்.

ஆங்கிலம் தெரியாத போதிலும்

சொற்களை மனப்பாடம் செய்வது

ஒன்றும் பெரிய காரியம் இல்லை

அப்படியே சொல்கிறேன்

“Ranjani is a dirty bitch…  

Anu, you are my angel…”