இன்றைய வெனிஸ் மாநாடு

இன்று வெனிஸில் நடக்க இருக்கும் அறிவியல் – கலை மாநாடு பற்றி நேற்று எழுதியிருந்தேன். இந்தியாவிலிருந்து இரண்டு நரம்பியல் நிபுணர்கள் அங்கே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸில் பணி புரிபவர்கள். இலக்கியத்தில் நான். போயிருக்கலாமோ என்று நேற்றிலிருந்து யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஸல்மான் ருஷ்டி மீது பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் அலெக்ஸாந்தர் க்லூஜை சந்தித்து அளவளாவியிருக்கலாம். பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன். ஔரங்ஸேப் முக்கியம். முடிக்க வேண்டும். முடிக்க வேண்டும். முடிக்க வேண்டும். எழுதுவதை விட எழுதியதை செப்பனிடுவது சிரமமாக இருக்கிறது.

இன்றைய வெனிஸ் அறிவியல் – கலை மாநாடு பற்றி ஃபொந்தாஸியோனே ப்ராதாவிலிருந்து (Fondazione Prada) ஒரு கையேடு வந்திருந்தது. அந்தக் கையேட்டைப் படித்துப் புரிந்து கொள்ளவே எனக்கு ரெண்டு நாள் ஆகும். டாக்டர் ஸ்ரீராம் அதைப் படித்து விட்டு இப்படி எழுதிருந்தார்:

முழுவதும் பார்த்தேன், சாரு. மூளை மற்றும் நரம்பு மண்டலம் பற்றிய ஒரு அறிவியல் மாநாட்டில், உலகளவில் சமகாலத்தில் உள்ள சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை வீடியோவாக கண்காட்சிக்கு வைப்பதை இந்தியாவில் யோசித்துக் கூட பார்க்க முடியாது.
டா விஞ்ச்சியில் இருந்து சாரு நிவேதிதா சல்மான் ருஷ்டி வரை அறிவியலுக்கு அப்பால் கலைகளில் விடைகள் தேடுவது மிகவும் பாராட்டுக்குரியது.

ஸ்ரீராம்

ஆயிரம் வார்த்தைகளுக்குள் கதையை எழுதச் சொல்லியிருந்தார்கள். மூளை – நரம்பு மண்டலம் மையம். என் கதை 1600 வார்த்தைகள். எதையும் நீக்க முடியாமல் பின்னிக் கிடக்கிறது என்று அப்படியே வைத்துக் கொண்டார்கள். இத்தாலியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் நந்தினி கிருஷ்ணன்.

தமிழில் கதையின் தலைப்பு: தாரக தாண்டவம். கதையின் உரிமை ஃபொந்தாஸியோனே ப்ராதாவுக்கு உரியது என்பதால் இங்கே என்னால் பகிர இயலவில்லை.