27. சொற்கடிகை

”நாளை நானே அரசு மீன் கடைக்குச் சென்று நண்டு வாங்கி வரலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.” 

இருபத்தாறாவது அத்தியாயத்தை மேற்கண்டபடி முடித்திருந்தேன்.  எழுதின தினம் ஏப்ரல் 13.  ஆனால் திட்டமிட்டபடி மறுநாள் நண்டு வாங்கப் போகவில்லை.  காலண்டரில் அன்று சிவப்பு மை அடித்திருந்தது.  ஏன் என்று பார்த்தால் சித்திரை ஒன்று.  வருடப் பிறப்பு அன்று எப்படி அசைவம்?  இதோ ஏப்ரல் 23 ஆகி விட்டது.  இன்னும் நண்டு வாங்கப் போகவில்லை.  ஒருநாள் கைமணம் என்ற கடையிலிருந்து வரவழைத்தேன்.  பசியெல்லாம் அடங்கின பிறகு வந்தது.  ஆனால் சுவையாகத்தான் இருந்தது.

நேற்று முழுவதும் கொஞ்சம் மனக் குழப்பத்தில் இருந்தேன்.  வெனிஸ் போக வேண்டாம் என்று முடிவெடுத்தது சரியில்லையோ என்ற குழப்பம்.  ஏன் பழசை நினைத்துக் குழப்பம் என்றால், இனிமேலும் தவறு செய்யக் கூடாது என்பதற்காகத்தான்.  சீனி வராவிட்டாலும் வேறு யாருடனாவது சென்றிருக்க வேண்டும்.  இனி இப்படியொரு வாய்ப்பு வருமா, தெரியவில்லை. 

ஐரோப்பா, அமெரிக்கா எல்லாம் சுற்றுலாவாகச் செல்வது வேறு.  ஒரு மாதம் அமெரிக்கா செல்கிறேன் என்றால், அஸ்வினி (ஸாக்ரமாண்ட்டோ), விநோத், ப்ரஸன்னா, வித்யா, வளன் என்று ஏராளமான நண்பர்கள் உண்டு.  அவர்களோடு ஊர் சுற்றிப் பார்த்து விட்டு, தமிழ்ச் சங்கங்களில் பேசி விட்டு வரலாம்.  அமெரிக்காவில் எனக்குப் பார்ப்பதற்கு ஒரு ஆண்டு அளவுக்கு இடங்கள் உள்ளன.  ஐரோப்பாவும் அப்படியே.

ஆனால் ஃபொந்தாச்சியோனே ப்ராதா (Fondazione Prada) போன்ற ஒரு அமைப்பின் பெருவிழாவில் விருந்தினராகக் கலந்து கொள்வது என்பது முற்றிலும் வேறு.  இதைத் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு புரிந்து கொள்வது கூடக் கடினம். 

கொஞ்சம் விளக்குகிறேன்.  இந்தக் கண்காட்சி நேற்று விழாவாக நடந்தது.  இன்றிலிருந்து நவம்பர் வரை கண்காட்சி மட்டும் உண்டு.  இதைக் காண்பதற்கு ஒருவருக்குக் கட்டணம் 12 யூரோ.  பதினெட்டு வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மட்டும் இலவசம்.  மற்றபடி 18 இலிருந்து 26 வரையிலான மாணவர்களுக்கு 9 யூரோ.  உடல் குறைபாடு உள்ளவர்கள், அவர்களுக்குத் துணையாக வருபவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு 9 யூரோ.  அதிலும் நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே உள்ளே போய் விட முடியாது.  கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நேர அட்டவணை உண்டு.  மாலையில் செல்ல ஒதுக்கப்பட்டவர்கள் காலையில் செல்ல முடியாது. 

சுருக்கமாகச் சொன்னால், ரஜினியின் எந்திரன் வந்தால் எப்படி காலை ஐந்து மணி ஷோவுக்கு 2000 ரூ. டிக்கட் வைக்கிறார்களோ அப்படித்தான் அங்கே கலை இலக்கியத்தின் இடம். 

இது ஒரு கலை விழா.  அதிலும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சினைகளை கலையின் மூலமாகத் தாண்ட முடியுமா அல்லது புரிந்து கொள்ள முடியுமா என்பதற்கான சந்திப்பு.  அதற்கு ஏன் இத்தனை கூட்டம்?  இத்தனைக்கும் இத்தாலி இந்தியாவை விட ஏழை நாடு. அப்படியும் எப்படி இதுபோல் நடக்கிறது? 

புத்திஜீவிகள், கலைஞர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், மேட்டுக்குடியினர் – இவர்கள்தான் முழுக் காரணம்.  தமிழ்நாட்டிலும் இந்த அஞ்சு வகையினரும் உண்டு.  புத்திஜீவி –உதாரணமாக, என்.ராம், ஏ.எஸ். பன்னீர்செல்வம், சுப்ரமணியம் சுவாமி – இவர்களுக்கெல்லாம் எந்தத் தமிழ் எழுத்தாளர் பெயரும் தெரியாது.  இவர்கள் இலக்கிய விழாவுக்கு வர மாட்டார்கள்.  கலைஞர்கள் – வருவார்கள், ஆனால் அவர்கள்தான் அங்கே நாயகர்களாக இருக்க வேண்டும்.  முழுக்க முழுக்க நாம் அவர்களின் அடிமையாக நடந்து கொள்ள வேண்டும்.  மாணவர்கள் – முழுமையாக இலக்கியம் தெரியாத கூட்டம்.  பேராசிரியர்கள் – அஃதே.  மேட்டுக்குடி – எழுத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை.  இப்படி ஒரு ஃபிலிஸ்டைன் கூட்டத்தில் ப்ராதா போன்ற ஒரு தமிழ்க் கோடீஸ்வரர் ஒரு இலக்கிய விழா நடத்தினால் அங்கே யார் யார் பிரதானமாக இருப்பார்கள்? 

கமல்ஹாசன், வைரமுத்து கோஷ்டியைத் தவிர நம்மைப் போன்றவர்களால் அங்கே உள்ளே நுழைய முடியுமா?  முதலில் அப்படி ஒரு கூட்டத்தைத்தான் ஒரு தமிழ்க் கோடீஸ்வரர் நடத்தி விடுவாரா?  கனவில் கூட சாத்தியம் இல்லை.    

ஆனால் வெனிஸில் ப்ராதா என்ற கோடீஸ்வரப் பெண்மணி ஒரு கலை – அறிவியல் கண்காட்சி/விழா நடத்தினால் அதைக் காண்பதற்கு அப்படி ஒரு கூட்டம் கூடுகிறது.  அந்த விழா பற்றி ஐரோப்பா முழுக்கவும் பேசப்படுகிறது. பேராசிரியர்கள், கலைஞர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் ஆகிய பிரிவினர்தான் இம்மாதிரி விழாக்களை மேற்கத்திய நாடுகளில் பெரும் வெற்றியடையச் செய்கிறார்கள். 

அலெக்ஸாந்தர் க்ளூஜ் என்ற பெயரை உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.  ஜெர்மனியில் அதன் அதிபரை விடப் பிரபலமானவர் க்ளூஜ். வயது 90.  ஜெர்மனியில் ஒரு சூப்பர் ஸ்டார் அளவில் இருப்பவர்.  இவரை ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  ஜெர்மனியில் வசிக்கும் – இதைப் படிக்கும் – ஒரு தமிழர் “இப்படித்தான் சாரு ஒண்ணுமே தெரியாமல் விட்டு அடித்துக் கொண்டே இருக்கிறார், நான் இங்கே ஜேர்மனியில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன், க்ளூஜை எல்லாம் இங்கே ஒருத்தருக்கும் தெரியாது” என்று உளறக் கூடும்.  அவர் சொல்வதில் தப்பு இல்லை.  அலெக்ஸாந்தர் க்ளூஜ் நினைத்தால் அந்த நாட்டு அதிபரை போனில் அழைக்கலாம்.  அதிபரை விட க்ளூஜ் ஜெர்மனியில் பெரிய ஆள்.  ஆனால் விளிம்புநிலை ஜெர்மானியருக்கும் அவர்களை ஒத்த தமிழர்களுக்கும் க்ளூஜ் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.  ஆனால் ஜெர்மனியில் வசிக்கும் உங்கள் மகனோ மகளோ மாணவர் என்றால் அவருக்கு அலெக்ஸாந்தர் க்ளூஜ் பற்றித் தெரியாமல் இருக்கவே வாய்ப்பு இல்லை.    

அலெக்ஸாந்தர் க்ளூஜ் அடிப்படையில் ஒரு எழுத்தாளர்.  படங்களும் இயக்கியிருக்கிறார்.  யூட்யூபில் கிடைக்கின்றன.  பாருங்கள்.  Alexander Kluge.  தமிழ்நாட்டில் இயக்குனர் என்றாலே வேறு அர்த்தம்.  இங்கே ஷங்கர்தான் இயக்குனர்.  அங்கே இது போன்ற வணிக சினிமா இயக்குனர்களை இந்தக் கலைப் பட்டியலில் கொண்டு வருவதே இல்லை. 

நேற்று வெனிஸ் சென்றிருந்தால் அவரோடு சேர்ந்து வைன் அருந்தியபடி இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்திருக்கலாம். எனக்கு அவரைத் தெரிந்திருப்பது அவருக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கலாம்.  இந்தியத் துணைக் கண்டத்தில் அவரைப் படித்த, அவர் படங்களைப் பார்த்த ஒன்றிரண்டு நபர்களில் நானும் ஒருத்தன் என்ற வகையில். மேலும், என்னுடைய எல்லா பேட்டிகளிலும் தவறாமல் குறிப்பிடும் ஒரு விஷயம், என் தத்துவத்தை வழிவகுத்துக் கொடுத்தது ஃப்ரெஞ்ச் தத்துவவாதிகள்.  (ஃப்ரெஞ்ச் இலக்கியம் அல்ல!)  என் புனைவு உலகத்தை வெகுவாக பாதித்து என்னை உருவாக்கியது, ஜெர்மன் சினிமா. 

ஆர்ஃபியூஸ் என்ற படத்தின் நாயகியும் அலெக்ஸாந்தர் க்ளூஜும்.  படத்தில் கைதான் முக்கியம். 

இப்போது 79 வயது ஆகும் வெர்னர் ஹெர்ஸாகின் சினிமா என் ரத்தத்தோடு கலந்த ஒன்று.  ஹெர்ஸாகுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.  கிட்டத்தட்ட ஐரோப்பிய குரஸவா.  ஆனால் ஹெர்ஸாகை விட என் புனைவுலகின் அடியோட்டமாக விளங்குவது ஜெர்மன் சினிமாவிலேயே அதிகம் அறியப்படாத Reinhard Hauff (வயது 82).  தீவிர சினிமா ஆர்வலர்களுக்கே இவரது பெயர் தெரியாததாக இருக்கிறது.  அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி (வயது 93) இன்று பிரபலம் ஆகி விட்டார்.  30 ஆண்டுகளுக்கு முன்பு ஹொடரோவ்ஸ்கியின் பெயர் யாருக்கும் தெரியாது.  இன்று அவர் ஒரு cult figure. 

(GERMANY OUT) 23.05.1939-Regisseur; DRektor der Film- und FernsehakademieBerlin- 1996 (Photo by Honza Klein/ullstein bild via Getty Images)

Reinhard Hauff

Alejandro Jodorowsky

ஆனால் ரெய்னார்ட் ஹாஃப் இன்றளவும் அறியப்படாதவராகவே இருக்கிறார்.  இவருடைய படங்கள் ஜான் ஜெனேயின் நாவல்களை ஒத்தவை.  இப்போது இவருடைய படங்களைத் திரும்பவும் ஒருமுறை பார்க்கலாம் என்று முயல்கிறேன்.  ஆனால் கிடைப்பதாக இல்லை.  1981இல் பார்த்த இவரது Slow Attack என்ற படத்தின் ஒவ்வொரு காட்சியும் இப்போதும் என் நினைவிலிருந்து அகலவில்லை.  அதற்குப் பிறகு இந்த 41 ஆண்டுகளில் எனக்கு அந்தப் படம் திரும்ப ஒருமுறை பார்க்கக் கிடைக்கவில்லை. 

ரெய்னார்ட் ஹாஃப் மட்டும் அல்ல; உலகப் புகழ் பெற்ற Fassbinder, மற்றும் Volker Schlöndorff, Tom Tykwer (இவரது பெர்ஃப்யூம் என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?  பார்க்கவில்லையானால் நீங்கள் அந்த அனுபவத்தை இழந்தவர்கள் ஆவீர்கள்), Margarethe von Trotta (இந்த இயக்குனரின் பெரும்பாலான படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன்), Helma Sanders-Brahms (இவரை நேரில் சந்தித்திருக்கிறேன்) போன்ற ஜெர்மானிய இயக்குனர்களே என் எழுத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.  ஹெல்பா ஸாண்டர்ஸ் ப்ராம்ஸின் No Mercy, No Future படமும் 1982இல் பார்த்தது.  ஒவ்வொரு காட்சியும் மனதில் ஓடுகிறது.  இரண்டாம் முறை பார்க்கக் கிடைக்கவில்லை. 

தில்லியில் நடந்த Almost Island கருத்தரங்கத்தில் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த கவிஞர் தாமஸ் சாலமன் (Tomaz Solomon) என்னிடம் சொன்னார், ”உங்கள் நாவல்கள் ஃப்ரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ வந்து பயனில்லை, ஜெர்மனில் வந்தால் அங்கே உங்களைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.”  அவர் சொன்ன போது எனக்கு உறைக்கவில்லை.  ஆனால் என்னுடைய ஜெர்மன் சினிமா தொடர்பு ஞாபகம் வந்தது. 

ஆக, வெனிஸ் ஃபொந்தாச்சியோனே ப்ராதா விழாவில் சாரு நிவேதிதா என்ற ஒரு தமிழ் எழுத்தாளனின் கதை வாசிக்கப்படும் போது அந்த எழுத்தாளனும் அங்கே இருந்தால் – அதைத் தமிழ்நாட்டுக்குப் பொருத்திப் பார்த்தால் ஜாக்கி சான் இங்கே ஒரு பல்கலைக்கழகத்துக்கு வருவதைப் போல.  இத்தாலிய வாசகர்களுக்கு என்னைத் தெரியாமல் இருக்கலாம்.  ஆனால் எழுத்தாளர்கள் அங்கே ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு ஒப்பானவர்கள்.  அங்கே நின்றால் போதும்.  ஒரு கூட்டம் வந்து அப்பும்.  இப்போது கூகிள் வேறு இருப்பதால் கேட்கவே வேண்டியதில்லை. 

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் என்னைச் சுற்றியிருந்தோர் (சக பேச்சாளர்கள்) அனைவரும் ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களாக இருந்தார்கள்.  எல்லோரும் எழுத்தாளர்கள்.  நானோ பியூசி ஃபெயில்.  ஸ்கூல் ட்ராப் அவ்ட் மாதிரி.  இந்த பயத்தை, இதனால் ஏற்பட்ட தயக்கத்தை மேடையில் சொன்னேன்.  உடனே பார்வையாளர்களிலிருந்து ஒரு வட இந்தியப் பெண் சத்தமாக, that’s why we love you charu என்று கத்தினாள். 

***

இந்த அத்தியாயத்தில் ஒவ்வொரு கலைஞனின் வயதையும் குறிப்பிட்டிருப்பதை கவனியுங்கள்.  ரெய்னார்ட் ஹாஃப் 82, ஹொடரோவ்ஸ்கி 93, அலெக்ஸாந்தர் க்ளூஜ் 90.  எல்லோரும் இன்னமும் வைன் அருந்திக் கொண்டு, நீள நீளமான சுருட்டுப் பிடித்தபடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  இன்னமும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  படம் எடுத்துக் கொண்டும், ஊர் ஊராகப் போய் விழாக்களில் கலந்து கொண்டும் இருக்கிறார்கள்.  இங்கே இந்தியாவில் அம்பது வயதில் ஹார்ட் அட்டாக்.  என் நண்பரின் தாயாருக்கு நேற்று அட்டாக்.  மது, மாமிசம், புகை எதுவும் இல்லை.  முதுமையின் காரணமாக இதய வால்வு சுருங்கி விட்டதாம்.  வயது 60.