27, சொற்கடிகை பற்றி ஒரு கேள்வி

கார்ல் மார்க்ஸ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். இத்தாலி இந்தியாவை விட ஏழை நாடு என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா?

இதற்கு நான் ஒரு அம்பது பக்கமாவது பதில் எழுத வேண்டும். ஔரங்ஸேபில் மூழ்கிக் கிடக்கிறேன். அப்படி அம்பது பக்க பதிலை எழுதினால் கடைசி வரியாக இத்தாலியை விட இந்தியா ஏழை நாடு என்று முடிப்பேன். இத்தாலியின் ஏழ்மை பற்றி அத்தனை கதைகள் – பஸோலினி காலத்திய கதைகள் அல்ல – இன்றைய கதைகள் – உண்மைக் கதைகள் என்னிடம் குவிந்து கிடக்கின்றன.

சீலே பார்ப்பதற்கு ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டைப் போல் இருக்கிறது. ஆனால் ஸீரோ டிகிரி செல்ஷியஸில் போர்த்திக் கொள்ள வெறும் போர்வைதான், அதனாலேயே குடிக்க வேண்டியிருக்கிறது என்று சொன்னவர்கள் ஏராளம். இன்றைய சீலே.

இத்தாலியின் ஏழ்மை வேறு விதமானது. வேலையில்லாத் திண்டாட்டம், இளைஞர்களின் மனநிலை, பொதுவான அதிருப்தி – இந்த மூன்றிலும் இத்தாலி இந்தியாவை விட மிகவும் மோசம். அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன். என் கருத்து தவறு என்றால் முதல் ஆளாக சந்தோஷப்படுபவன் நானாகத்தான் இருப்பேன்.