லும்ப்பன் மாஸ்டர்பீஸ்

இடைவேளை வரை எதுவுமே புரியவில்லை.  ஆள் ஆளுக்கு வருகிறார்கள்.  துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்.  ஏதேதோ பேசுகிறார்கள்.   ஒரே ஆள் – பார்க்க நன்றாக இருக்கிறார் – எல்லோரையும் அடித்துத் துவம்சம் செய்கிறார்.  அவர்தான் ஹீரோவாம்.  ஆனால் அஞ்சே நிமிடத்தில் இடைவேளை வந்து விட்டது போல் இருந்ததுதான் அதிசயம்.  இந்த அதிசயம் தமிழ்ப் படத்தில் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நடக்கவே இல்லை.  பாட்சாவில்தான் நடந்தது.  இப்போதெல்லாம் ரெண்டு நிமிடம் கூட பார்க்க முடியாதபடி கொடூரமான அறுவைகளாக உழுது தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.  காரணம், 120 கோடி பட்ஜெட்டில் நூறு கோடியை சம்பளம் என்று பிடுங்கிக் கொள்கிறார் ஹீரோ.  மீதி இருபது லட்சத்தில் படம் எடுத்தால் படமா வரும்?  நம் தலையில் தானாக வளர்கிறதே, அதுதானே வரும்?  இப்படி தமிழ் சினிமா உருப்படாமல் போனதற்கு விஜய்யும் அஜீத்தும்தான் காரணம். 

கேஜிஎஃப்பில் இடைவேளை வரை ஒன்றும் புரியவில்லை.  ஆனால் படம் ஆரம்பித்ததும் ஒன்றரை மணி நேரம் சென்றதும் தெரியவில்லை.  அவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள்.  எல்லா வசனமுமே பஞ்ச் டயலாக்தான்.  ஆட்டை சும்மா கொன்னா பிரியாணி, கடவுளுக்கு நேந்து விட்டு கொன்னா குர்பானிடா.

படம் எங்கோ செவ்வாய் கிரகத்தில் நடப்பது போல் இருக்கிறது.  அப்படிப்பட்ட செட் அமைப்புகள்.  படத்தில் வரும் அனைத்து ஆடவர்களும் ஒசாமா பின் லாடன் மாதிரியே தொப்புள் வரை தொங்கும் தாடியுடன் வலம் வருகிறார்கள்.  ஹீரோவுமே அப்படித்தான் தாடி வைத்திருக்கிறார்.  படம் பூராவும் அவர் கையில் சிகரெட் புகைகிறது.  காதல் காட்சியைக் கூட சண்டைக் காட்சி போல் எடுத்திருக்கிறார் இயக்குனர்.  ஆனால் காதல் காட்சியில் கூட ஹீரோ சிகரெட்டும் கையுமாகவே இருக்கிறார்.  ஹீரோயினைத் தவிர எல்லா தாடிக்காரர்களும் சிகரெட்டைப் புகைத்தபடியே இருக்கிறார்கள்.  சிகரெட்டுக்கே பெரும் செலவு ஆகியிருக்கும் போல.  அது போதாமல் ஹீரோ எந்நேரமும் மது பாட்டிலை வைத்து ஏதோ கோக் குடிப்பது போல் குடித்துக் கொண்டே இருக்கிறார். 

எல்லாவற்றையும் விட அட்டகாசம், ஹீரோ பாராளுமன்றத்துக்கு உள்ளேயே போய் யூனியன் மினிஸ்டரை பிரைம் மினிஸ்டர் எதிரிலேயே போட்டுத் தள்ளுவதுதான்.  நல்லவேளை, அவர் புல்டோசரால் பாராளுமன்றத்தையே எதோ பண்ணப் போகிறார் என்று பார்த்தேன்.  அப்படிச் செய்திருந்தால் அங்கேயே எழுந்து தேச பக்தி கோஷம் எழுப்பலாம் என்று இருந்தேன்.  லாஜிக் இல்லை லாஜிக் இல்லை என்கிறார்கள்.  லாஜிக்கோடு வரும் தமிழ்ப் படங்களை ரெண்டு நிமிடம் பார்க்க முடியவில்லையே? 

சஞ்சய் தத் வாங்கின காசுக்குத் தொண்டை கிழியக் கிழியக் கத்தியிருக்கிறார்.  ஹீரோயின் பெயர் என்னவென்று தெரியவில்லை.  ரொம்ப அழகாக இருக்கிறார்.  நம்முடைய ஆவணப் படத்திலும் இப்படி ஒரு பெண்ணை அங்கேயும் இங்கேயுமாக நடமாட விடலாமா என்று சீனியைக் கேட்டேன்.  இந்த வயதிலும் ஏன் இப்படி இருக்கிறீர்கள் சாரு என்று டார்ச்சர் கோவிந்தனின் மைண்ட் வாய்ஸ் கேட்டது. 

லவ் என்ற வார்த்தை எப்படி இன்று தேய்ந்த தகரமாகக் கிடக்கிறது… அதைப் போலவேதான் நம் கலாச்சாரம், நம் சிந்தனை, பேச்சு, மொழி எல்லாமே தேய்ந்த தகரமாகி விட்டன.  எல்லோருமே லும்ப்பனாக மாறி விட்டார்கள்.  எல்லோருக்குமே தட்டையாக இருந்தால்தான் பிடிக்கிறது.  பாட்சா போன்ற படங்களில் இருந்த நுணுக்கங்கள் கூட கேஜிஎஃப்பில் இல்லை.  எல்லாமே தட்டை.  அப்படிப்பட்ட தட்டை மனிதர்களைத்தான் இன்றைய சமூகம் உருவாக்கியிருக்கிறது. அவர்களால்தான் இப்படிப்பட்ட படங்கள் ரசிக்கப்படுகின்றன.  நான் படம் பார்த்த நகரில் உள்ள பத்து தியேட்டர்களிலும் கேஜிஎஃப் என்ற ஒரே படம் அது வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.  இன்னும் இரண்டு வாரங்களுக்கு பத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்லாகத்தான் ஓடும்.  அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார்கள்.  ஆனால் இஞ்ச் அளவு நுணுக்கம் கிடையாது.  லும்ப்பன்களின் மாஸ்டர்பீஸ்.