பாரிஸும் சீலேயும்…

ஆவணப்படத்துக்கான நிதி திரட்டல் தொடர்பாக இன்னும் ஒரு விஷயம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ராம் என் துருக்கி பயணத்துக்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டார்.  அதனால்தான் நிலவு தேயாத தேசம் என்ற என் பயணக் கட்டுரை நூல் கிடைத்தது.  அது போல, இப்போதைய சீலே பயணத்துக்கு நீங்கள் பணம் தர முடியாது போனால் சீலேவுக்கான என் டிக்கட் செலவை ஏற்கலாம்.  நானும் இயக்குனரும் செல்வோம். 

சாத்தியம்தான்.  தமிழில் உள்ள எல்லா பதிப்பகங்களும் என் புத்தகத்தை வெளியிட மறுத்து விட்ட போது கோணல் பக்கங்கள் தொகுதியை நான் பின்கண்டவாறு வெளியிட்டேன்.   பல வாசகர்களிடமிருந்து 5000 ரூ. மாதாமாதம் வசூலிப்பேன்.  அதை பதிப்பகத்திடம் கொடுத்தால் ஒரு வருடத்தில் 60000 ரூ. சேரும். அப்படித்தான் கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதி வந்தது.  அதேபோல் சீலே பயணத்தையும் இந்த ஆவணப் படத்தையும் சாத்தியமாக்க முடியும். 

என் எழுத்தை கவனமாக வாசிப்பவர்களுக்குப் புரியும்.  இடம் என்பது என் எழுத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.  உதாரணமாக, நாகூர் தர்காவின் குளுந்த மண்டபம்.  அதுதான் இருபது வயது வரை என் வாசிப்புக்கான இடமாக இருந்தது.  வீட்டில் சிம்னி விளக்குதான்.  சிம்னி விளக்கில் படித்தால் தூக்க மாத்திரை போட்டது போல் தூக்கம் வரும்.  நானோ ராப்பகலாகப் படிக்கும் வழக்கம் உடையவன்.  இது சம்பந்தமாக என் தங்கை சுமதியின் மகள் நிவேதிதா சொன்ன ஒரு விஷயம் சுவாரசியமாக இருந்தது.  என்னுடைய ஞாபக மறதி காரணமாக கடந்த காலம் என்பதில் பெருமளவு மறந்து விட்டேன்.   அதனால் நிவேதிதா சொல்லும் சம்பவங்களைக் கேட்க ரசமாக இருக்கும்.  சுமதி என்னைப் பற்றித் தன் மகள் நிவேதிதாவிடம் சொல்லும் பல சம்பவங்களில் இது ஒன்று: ”உன் ரவி மாமா (நான்) நான் (சுமதி) தூங்கும் போதும் படித்துக் கொண்டிருப்பார்கள், காலையில் எழுந்து கொள்ளும்போதும் படித்துக் கொண்டிருப்பார்கள்.”  தூங்கச் செல்வது பத்தரை.  எழுந்து கொள்வது ஐந்து.  நான் நள்ளிரவு வரை படிப்பேன்.  தூக்க நேரம் நாலு அல்லது நாலரை மணி நேரம்தான்.  பகலில் தூங்குவதில்லை. 

இரவில் சிம்னி விளக்கில் படித்தால் தூக்கம் வருகிறது என்பதால் அரிக்கன் லைட் கொடுத்தார்கள்.  அது சிம்னியை விடக் கொஞ்சம் பெரிசு.  ஆனால் மண்ணெண்ணெய் நிறைய எடுக்கும்.  ஒரு கட்டத்தில் மண்ணெண்ணெய்க்கு நிறைய செலவு ஆனதாலும் தூக்கக் கலக்கத்தினாலும் தர்காவின் குளுந்த மண்டபமே எனக்கான வாசிப்பிடமாக மாறியது.  தர்காவில் இரவு முழுதும் பளீர் என்று டியூப் லைட்டுகள் எரிந்து கொண்டிருக்கும்.  ஒன்றிரண்டு பைத்தியங்களையும் கட்டிப் போட்டிருப்பதால் என்னைப் போன்ற படிக்கும் பைத்தியங்களுக்கும் பாந்தமாக இருக்கும். 

இந்தக் குளுந்த மண்டபம் இல்லாமல் என் ஆவணப்படம் இல்லை என்பது போலவே விக்தொர் ஹாரா ஸ்டேடியம் இல்லாமல் என் வாழ்க்கைப் பதிவு முழுமை பெற முடியாது.  என் வாழ்வைப் புரிந்து கொள்ள நீங்கள் பத்ரீஸியோ குஸ்மான் (Patricio Guzman) எடுத்த Battle of Chile என்ற படத்தைப் பாருங்கள்.  நான்கரை மணி நேர ஆவணப் படம்.  இந்தப் படத்தை நான் 1980 வாக்கில் தில்லியில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் நடந்த லத்தீன் அமெரிக்க சினிமா பிரிவில் பார்த்தேன்.   இந்தப் படத்தைப் பார்த்ததால்தான் சாந்த்தியாகோவின் லா மொனேதா அரண்மனையில் டாக்டர் அயெந்தேவின் இறுதி உரையைக் கேட்ட போது மயங்கி விழுந்தேன். 

நான் யார் என்று உங்களில் சிலருக்காவது தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.  இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஷர்மிஸ்தா மொஹந்த்தி.  எழுத்தாளர்களின் எழுத்தாளராகக் கருதப்படுபவர்.  அருந்ததி ராய் போன்ற போலி அல்ல.  இவர் ஆஷிஷ் நந்தியை சமீபத்தில் சந்தித்த போது ஆஷிஷ் என்னைப் பற்றி நீண்ட நேரம் பேசியதாக ஷர்மிஸ்தா சொன்னார்.  ஷர்மிஸ்தாவின் almost island என்ற இணையப் பத்திரிகை உலகப் புகழ் பெற்ற ஒன்று.  ஒருமுறை என் கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அனுப்பியபோது அல்மோஸ்ட் ஐலண்டுக்கு ஒத்து வராது என்று பிரசுரரிக்கவில்லை.  அந்த அளவுக்குத் தீவிரமான இலக்கியக் கொள்கைகளைக் கொண்டவர்  ஷர்மிஸ்தா.  ஆனால் என் எழுத்துக்களின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.  இரண்டு முறை அல்மோஸ்ட் ஐலண்டின் சர்வதேசக் கருத்தரங்கில் உரையாற்ற நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.  ஷர்மிஸ்தாவின் நியூ லைஃப் என்ற நாவல் பற்றி ஆங்கிலத்தில் மதிப்புரை எழுதியிருக்கிறேன்.  என் நாவல் ஒன்றை இவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன். 

என்னைப் பற்றிய ஆவணப்படத்தில் அறையில் நடக்கும் பேச்சு அல்லது உரையாடலை விட இடங்கள்தான் முக்கிய இடத்தைப் பெறும்.  குறிப்பாக, லாவோஸுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் ஓடும் மேக்காங் நதியோரம். 

உங்களுக்குக் காசி மாதிரி எனக்கு பாரிஸ்.  இந்திய ஆன்மீகத்தை விட என்னை ஐரோப்பியத் தத்துவமும் சினிமாவும் அதிகமாக பாதித்திருக்கிறது.  உங்கள் ரசனையை நான் குறைத்து மதிப்பிட மாட்டேன்.  அதேபோல் என் ரசனையும் குறைந்தது அல்ல என்கிறேன்.  அவ்வளவுதான். 

மேலும், என்னுடைய 45 ஆண்டுக் கால எழுத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்களால் மட்டுமே நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியும்.  உங்கள் வயது இருபத்தைந்தே ஆனாலும் என் எழுத்து எல்லாவற்றையும் படித்தால் என் எழுத்தின் சாரம் உங்கள் உள்ளங்கையில் வந்து விடும். 

இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன்.   நான் சாந்த்தியாகோவில் இருந்த போது ஆறு லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டேன்.  ஒரே வாரத்தில் கிடைத்தது என்றால் அதன் காரணம், அதை நான் சென்னையிலிருந்து எழுதவில்லை.  சாந்த்தியாகோவிலிருந்து எழுதினேன்.  அந்த அவசரத்தை வாசகர்கள் உணர்ந்தார்கள்.  பயணமும் மிகச் சிறப்பாக அமைந்தது.  இப்போது அப்படி இல்லை.  நான் ஒவ்வொருவருக்காக, தனித்தனியாக எழுத வேண்டும்.  மேலும், இந்த ஆவணப்படம் எதற்கு என்ற கேள்வி வரும்.  இதன் முக்கியத்துவம் யாருக்கும் புரியாது. புரியவும் இல்லை.   

புரிய வைக்க முயல்கிறேன்.

1.நவம்பர் இறுதி.  2000.  என் முதல் விமானப் பயணம்.  அதற்கு முன்னால் விமானத்திலேயே ஏறியதில்லை.  இரண்டு மூன்று இடங்களில் நின்று, வேறு வேறு விமானங்களைப் பிடித்து பாரிஸ் போய் இறங்க வேண்டும்.  ஒருமுறை எல்லோரும் விமானத்திலிருந்து இறங்கி விட, நாம் இறங்க வேண்டிய இடம் பாரிஸ் ஆயிற்றே, இது வேறு ஊர் அல்லவா என்று விமானத்திலேயே தங்கி விட்டேன்.  பிறகு ஒரு விமானச் சிப்பந்திதான் என்னை இழுத்துக் கொண்டு இன்னொரு விமானத்துக்கு ஓடினார்.

பாரிஸில் இறங்கி நண்பரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.  ஷோபா சக்தி என்னை அழைத்துச் செல்கிறார்.  மொந்த்பர்னாஸ் மெத்ரோ நிலையம்.  மாலை.  வேலை நாள் என்று ஞாபகம்.  எல்லோரும் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.  மொந்த்பர்னாஸ் ஐரோப்பாவின் மிக முக்கியமான மெத்ரோ நிலையம்.  மிகவும் பெரியது கூட.  நாங்கள் பூமிக்கடியில் ஐந்தாவது அடுக்கில் இருந்தோம்.  ஒரு இளம் பெண் தன் ஜீன்ஸையும் உள்ளாடையையும் இறக்கி விட்டுக் கொண்டு, குத்துக்காலிட்டு அமர்ந்து தரையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தாள்.  ஓரமான இடம் கூட அல்ல அது.  சிறுநீர் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது.  எல்லோரும் அதைத் தாண்டித் தாண்டிப் போய்க் கொண்டிருந்தார்கள்.  யாருக்கும் அந்தச் சம்பவம் ஆச்சரியமாக இல்லை. 

பக்கத்தில் வந்து கொண்டிருந்த ஷோபா சக்தியிடம் “இந்த மூத்திரத்தை நான் முத்தமிட விரும்புகிறேன், இது சுதந்திரத்தின் குறியீடு” என்றேன்.  வேறு நாடாக இருந்திருந்தால் – உ-ம், இந்தியா – அவளை பொது அமைதியைக் கெடுப்பதாகச் சொல்லி போலீஸ் பிடித்திருக்கும்.  பைத்தியம் என்று சொல்லி உள்ளே போடுவார்கள்.  தெரிகிறதா என்று ஒரு கூட்டம் பார்க்கும்.  அடிதடி நடக்கும்.  அந்த இடத்தின் அமைதி நாசமாகும்.  பிறகு ஷோபா சொன்னார், இங்கே எதுவும் நடக்காது.  காரணம், இவர் கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றைச் சேர்ந்த புலம் பெயர்ந்த பெண்ணாக இருக்கலாம்.  இங்கேயிருந்து மேலே சாலைக்குச் செல்லவே ஐந்து நிமிடம் ஆகும்.  நாம் இருப்பது ஐந்தாவது தளம்.  மேலே போனாலும் கழிப்பறை செல்ல ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கலாம்.  அப்படியே போனாலும் கையில் ரெண்டு ஃப்ராங்க் வேண்டும்.  இவ்வளவு சிரமத்துக்கு இங்கேயே போய் விடலாம் என்பது அப்பெண்ணின் எண்ணம்.  மேலும், இந்த அசுத்தத்தை ஐந்தே நிமிடத்தில் துப்புரவுப் பணியாளர்கள் வந்து சுத்தப்படுத்தி விடுவார்கள்.

நான் ஊர் திரும்புவதற்குள் அதேபோல் இன்னும் இரண்டு சம்பவங்களைப் பார்த்தேன்.  இந்த மொந்த்பர்னாஸ் மெத்ரோ என் வாழ்வோடு கலந்ததா, இல்லையா?

2. நான் இப்போது போல் அப்போது நம்பிக்கையாளனாக இல்லை.  Agnostic ரகம்.  2006.  திரும்பவும் அதே குளிர், அதே டிசம்பர்.  23-ஆம் தேதி. பாரிஸ் சாம்ஸ் லீஸே (Champs-Élysées) தெருவில் ஒரு இளைஞனுடன் நடந்து கொண்டிருந்தேன்.  லூர்த் மாதாவைப் போய்ப் பாருங்கள் என்றான்.  பாரிஸிலிருந்து லூர்த் 830 கி.மீ. எங்களுக்கு சென்னை திரும்ப 25ஆம் தேதி டிக்கட்.  ஆனால் மாதா கூப்பிட்டால்தான் செல்ல முடியும் என்று மேலும் சொன்னான்.  அன்று லா சப்பலில் உள்ள அறிவாலயம் என்ற புத்தகக் கடையில் இளங்கோவன் என்ற நண்பரைப் பார்த்தேன்.  முன்பின் தெரியாதவர்.  என் வீட்டில் ஒரு வாரம் தங்க விருப்பம் உண்டா என்றார். இரண்டு நாளில் ஊருக்குக் கிளம்புகிறோம் என்றேன்.  ஒரு வாரம் பயணத்தை ஒத்திப் போடச் சொன்னார்.  அவருக்குத் தெரிந்த பயண முகவர் மூலமே அந்தக் காரியம் நடந்தது.  உங்கள் வீடு எங்கே என்று கேட்டேன்.  தூலூஸ் என்றார்.  தூலூஸிலிருந்து லூர்த் 170 கி.மீ. 

25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று நான் லூர்த் மாதாவின் முன்னே தன்னந்தனியாக நின்றேன்.  தேவாலயத்தில் ஆட்கள் இல்லை.  மாதாவிடம் மீண்டும் வருவேன் என்று சொல்லி விட்டு வந்தேன்.

அங்கே போகாமல் என் வாழ்க்கைச் சரிதம் முற்றுப் பெறுமா, சொல்லுங்கள்?

ஹெர்ஸாகிடம் ஒருமுறை கேட்கப்பட்டது.  திரைப்படம் எடுக்க என்ன தேவை?

பணம் இல்லாவிட்டால் கேமராவைத் திருடுங்கள்.

நமக்கு அப்படியெல்லாம் நேராது.  ஆவணப் படம் வரும்.  உங்கள் உதவியால்…