தனியாக வாழ்தல்…

அவந்திகா ஒரு வாரம் மும்பை செல்கிறாள்.  இதுவரை அவள் எந்தப் பயணமும் செய்ததில்லை.  ஊருக்கும் போனதில்லை.  ஏதாவது ஆன்மீகக் கூட்டம் என்று போனாலும் மறுநாளே வந்து விடுவாள்.  இப்போதுதான் முதல் முறை.  அதனால் எனக்கு வீட்டில் தனியாக வாழ்வது எப்படியிருக்கும் என்று தெரியாது.  வாஷிங் மெஷின் போடுவதற்கு சொல்லிக் கொடு என்றேன்.  உனக்கு வராது, நீ கெடுத்து விடுவாய் என்றாள்.  இதுவரை மாப் போட்டதில்லை.  பணிப்பெண் கிடையாது.  பாத்திரம் தேய்ப்பது சுலபம்.  தினந்தோறுமே 75 சதவிகிதம் நான் தான் செய்கிறேன்.  மாப் போடுவதற்குத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். 

பணிப்பெண்களின் கதைதான் பெருங்கதையாக உள்ளது.  மூன்று ஆண்டுகளாக பணிப்பெண் இல்லை.  கடைசி கடைசியாக சென்ற மாதம் ஒரு பெண் கிடைத்தார்.  பார்க்க 20 போல் இருப்பார்.  ஆனால் முப்பது.  முதல் பையன் ப்ளஸ் டூ.  அவன் ஆறரை அடி இருக்கிறான்.  மொத்தம் மூன்று குழந்தைகள்.  ஒரு வாரமாக ஆள் வரவில்லை.  இனிமேல் வர மாட்டாராம்.  கணவன் வேறு பெண்ணைத் தேடிப் போக, இந்தப் பெண் சுவரில் தலையை முட்டிக் கொண்டு, பெரிய கலாட்டா. அது ரொம்பப் பெரிய கதை.  எங்கள் வீட்டில் எப்போதும்போல் பழைய குருடி கதவைத் திறடி கதையாக நானே பாத்திரம் தேய்க்கிறேன். 

மனைவி வீட்டில் இல்லாவிட்டால் எல்லா கணவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.  எனக்கு நடைமுறை ரீதியாக ஒரு பலன் இருந்திருக்கும்.  ஏதாவது வெளிநாட்டுக்கு அல்லது ஊருக்குப் போய் வந்திருக்கலாம்.  ஆனால் இப்போது முடியாது.  வீட்டில் பத்து பூனைகள் உள்ளன.  வளர்க்க வேண்டும்.  அதனால் அம்மணி ஊருக்குப் போயும் எனக்கு எந்த நன்மையும் இல்லை. 

அந்த ஒரு வாரமும் சமைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன்.   இந்த மாதம் 14-ஆம் தேதி போய் 21-ஆம் தேதி வருகிறாள்.  வெளிச்சாப்பாடுதான்.  முடிந்தவர்கள் கொடுத்து அனுப்பலாம்.  டன்ஸோ பண்ணலாம்.  அன்னபூரணி பிரமாதமாக மீன் குழம்பு செய்வார் எனக் கேள்வி.  சாப்பிட்டதில்லை.  மற்றவர்கள் வத்தக் குழம்பு கொடுத்தனுப்பலாம்.  கருவாட்டுக் குழம்பு அனுப்பினால் சொர்க்கம்.  ஆனால் என்னை சோதனை எலியாக ஆக்கக் கூடாது.  இல்லாவிட்டால் அன்னபூரணர் இருக்கிறார்.  அவரோடு மதிய உணவு உண்டு விடுவேன்.  அவரும் என்னைப் போலவே ஒரு gastronomist.  அவருக்கு இன்னொரு பெயரும் உண்டு.  ராம்ஜி. 

என்னைப் பற்றிய ஆவணப் பட இயக்குனரிடம் கொதாரின் ப்ரெத்லெஸ் படத்தையும் சோடர்பர்கின் சே படத்தையும் பார்த்து விட்டு வருமாறு சொல்லியிருக்கிறேன்.  சே படத்தின் பட்ஜெட் 50 கோடி ஆயிற்றே என்றார் டார்ச்சர் கோவிந்தன்.  50 கோடி படைப்பை 50 லட்சத்தில் கொடுப்பவனே கலைஞன் என்றேன்.