விக்ரம் : அராத்து

விக்ரம் இந்தப் பதிவு முதன்மையாக விக்ரம் படம் பற்றிய விமர்சனம் அல்ல. ஏனென்றால் , இந்தப் படத்தை விமர்சிக்கப் பெரிதாக ஒன்றுமில்லை. இவ்வளவு ஒழுங்கீனமாக எடுக்கப்பட்ட படத்தை நான் சமீபத்தில் பார்த்த நினைவில்லை. தோன்றியதை எல்லாம் இஷ்டத்துக்கு அடித்து விட்டிருக்கிறார்கள். கதையில் , திரைக்கதையில் , காட்சிகளில் ஒரு தெளிவும் இல்லை. இது கிடக்கட்டும் , இந்தப் படம் எப்படி கமல் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு இமாலய வெற்றி பெற்றது என்பதை புரிந்து கொள்ள முயல்கிறேன். ஹாலிவுட் படங்கள் முன்பு தியேட்டரில் வரும். வெகு சில மக்கள் மட்டுமே பார்ப்பார்கள். ஓடிடி , ஜியோ வருகையால் அனைவருக்கும் ஹாலிவுட் பாணி பிரம்மாண்டமான படங்கள் பரிச்சியமாகின. அதைப் பார்த்துப் பார்த்து பழகிய கண்களுக்கு குறைந்த பட்ஜட் தமிழ் படங்களின் ஃபிரேம்கள் எரிச்சலூட்டின. இந்த வகைத் தமிழ்ப்படங்களில் அவர்கள் கிளர்ச்சியடைய ஒன்றுமே இல்லை. இதுதான் முக்கியமானது. இந்தக் கூட்டத்திற்கு சினிமா என்பது கலையைத் தாண்டி , கேளிக்கையைத் தாண்டி , கிளர்ச்சியடைய வைக்கும் ஒரு பண்டமாகவும் , அந்த நேரத்தில் ஓஓஓ வென கத்தி உற்சாகமாக இருக்க வைக்கும் ஒரு கருவியாகவும் மாறிப்போனது. இந்த வகைக் கூட்டதினருக்கான படத்திற்கான விதை பாகுபலியில் போடப்பட்டது என நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து கேஜிஎஃப் அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. இரண்டுமே கேளிக்கை சினிமா என்ற அளவிலேயே குப்பை படங்கள். கேளிக்கை சினிமாவுக்குத் தேவையான சிறிய அளவு புத்திசாலித்தனமோ , தேவைப்படும் குறைந்த பட்ச அறிவும் கூட பயன்படுத்தப்படாமல் எடுக்கப்பட்ட படங்கள். இந்த “அடி முட்டாள்” வகை சினிமா உருவாக்கத்தில் கே ஜி எஃப் , பாகுபலியை முந்தியது . விக்ரம் கே ஜி எஃபை முந்தி வீறு நடை போட்டுக்கொண்டு இருக்கிறது. இந்தப் போட்டியில் விக்ரமை முந்தி முட்டாள்த்தனத்தின் உச்சத்தைத் தொட நெல்சனுக்கு உதவியாக இருக்க கே எஸ் ரவிக்குமாரை தலைவர் அனுப்பியிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு நல்ல விஷயம் என்றால் வளர்ச்சியடைந்துகொண்டே போகும். ஒரு மட்டமான விஷயம் வீழ்ச்சியடைந்துகொண்டேதானே போகும்? அதனால் தான் பாகுபலியை விட தரம் தாழ்ந்து , காதலிக்கு ஹெலிகாப்டர் மூலம் காத்து , பார்லிமெண்டுக்குள் நுழைந்து இந்திரா காந்தி முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டு விட்டு சாவதானமாகப் போதல் என்ற கண்றாவியைத் தொடர்ந்து , விக்ரம் இன்னும் கணக்கு வழக்கில்லாமல் தரம் தாழ்ந்து , பீரங்கி குண்டு பாய்ந்து வெடிக்கிறது. கார்கள் எல்லாம் பறக்க , எத்தனை பேர் செத்தான் எனத் தெரியவில்லை. ஏனென்றால் எவ்வளவு சுட்டு எத்தனை பிணங்கள் விழுந்தாலும் , மீண்டும் மீண்டும் சண்டை போடவும் மாரில் குண்டு வாங்கிக்கொள்ளவும் ஆட்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். ஏண்டா ஒரு நாளில் எத்தனை பொணம்தாண்டா விழும் ? போலீஸ் சூம்பிகிட்டு இருக்குமா என்றால் லோகேஷின் மல்டிவெர்ஸ் என்பார்கள். உங்க மல்டி வெர்ஸில் பேரரசு பீச்சாங்கைய வைக்க …..இந்த வகை கும்பல் மனோபாவ , கிஞ்சித்தும் அறிவற்ற , பிரம்மாண்டமான மொண்ணைப் படங்கள் இனி தொடர்ந்து வரும் என நினைக்கிறேன். இந்த வகைப் படங்களைத் தாங்கிப் பிடிக்கும் அடித்தளமாக, மொண்ணைக் கூட்டத் தளபதிகளாக இருப்பவர்கள் 2 கே கிட்ஸ் ஆவர். இவர்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. படம் முடிந்து வெளி வருகையில் இவர்கள் சொல்லும் ரிவ்யூக்களை கவனித்து இருக்கிறீர்களா ? “வேற லெவல் “இந்த ஒரு வார்த்தையைத் தவிர வேறு வார்த்தையே தெரியாது. தொடர்ந்து பத்து நபர்கள் இந்த ஒரு வார்த்தையையே வரிசையில் வந்து சொல்லிச் செல்வார்கள். இதே வார்த்தையை வேறு வேறு மாடுலேஷனில் சொல்வார்கள். இந்த ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு மொத்த வாழ்வையும் ஓட்டிக்கொண்டு இருப்பவர்கள். அவர்களை “ வேற லெவல் “ என்று சொல்லவைக்க படம் எடுத்தால் இப்படித்தான் பிரம்மாண்ட குப்பைகள் வந்து விழும். நான் சவால் விடுகிறேன். இந்த 2கே கிட்ஸ் கோஷ்டிகளிடம் சென்று விக்ரம் படத்தின் கதையைக் கேளுங்களேன் , ஒரு மயிரும் தெரியாது. அவர்கள் இந்தப் படத்தை வெகு எளிமையாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். அல்லது புரிந்து கொண்டே இருக்கமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஹீரோ வில்லன் வித்தியாசம் கூடத் தேவையில்லை. விஜய் சேதுபதிக்கு சில மாஸ் சீன், அதற்கும் கத்து … ஃபகத் ஃபாசிலுக்கு சில மாஸ் சீன், அதுக்கும் கத்து …கமலுக்கு சில மாஸ் சீன், அதுக்கு கத்தி களேபரம் பண்ணு. கொசுறாக ஏஜண்ட் டீனாவுக்கு ஒரு மாஸ் சீன், அதுக்கும் கத்து . இவ்வளவு இருந்தும் இயக்குநருக்கு பயம்….புடி சூர்யாவ ….இந்தா புடி சூர்யாவுக்கு ஒரு மாஸ் சீன்…கடைசியா கத்திகிட்டே தியேட்டரை விட்டு ஓடு ….மேட்டர் ஓவர். சரி , இந்த 2 கே மந்தைகள் தான் இப்படி. இவர்கள் மட்டும் பார்த்தால் படம் எப்படி ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகும் ? எல்லோரும் பார்த்தால்தானே படம் ஹிட் ஆகும் ?எல்லோரும் எப்படி இந்த மந்தை மனநிலைக்குத் தள்ளப்பட்டனர் ? அதுதான் ஆச்சரியம் . மனிதர்கள் அந்த அளவுக்கு மனவலிமை இல்லாதவர்களாகவும் , தன்னம்பிக்கையும் , தன் ரசனை மற்றும் மதிப்பீட்டின் மீது நம்பிக்கை இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

மட்டுமல்லாமல் ஒரு வெளி அழுத்தம் மெல்ல படக்குழுவினர் மற்றும் ப்ரோமோ ஏஜன்ஸிகளால் உருவாக்கப்பட்டு , அதன் மூலம் இந்த மொண்ணைக் கூட்டம் முதலில் முண்டியடித்துப் பார்த்து , அது உருவாக்கும் இரைச்சல் மிகுந்த பொதுக் கருத்தின் அழுத்தத்திற்கு ஆட்பட்டு , இந்தத் தலையற்ற மனிதக்கூட்ட முரட்டு முட்டாள் திருவிழாவில் தாங்களும் கலந்துகொள்ளவிலையென்றால் , தனியனாகிப் போய்விடுவோம் என்ற ஆழ்மன பயத்தில் பலிகடா ஆகி விக்ரம் வேற லெவல் என அங்கிள் ஆண்டி , தாத்தா பாட்டிகளும் 2 கே கிட்ஸ் குரலிலேயே கத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த நிலைமை நாடு முழுக்க பரவி இருப்பதால் தான் தொடர்ந்து மோடி பிரதமராக இருக்கிறார் என்றும் அனுமானிக்கிறேன். இதுவரை விமர்சனமே எழுதாத பலரும் விக்ரம் படத்துக்கு 4 வரி விமர்சனமாவது எழுதியதைப் பார்த்தேன். கவனித்துப் பாருங்கள் , எந்த ஒரு விமர்சனத்திலும் கடுகளவு கூட விமர்சனப் பார்வை இருக்காது. விரிவான தெளிவான விமர்சனமே விக்ரமுக்கு வந்திருக்காது. ஏனென்றால் இதைப்போன்று இலக்கற்று எடுக்கப்பட்டு வெட்டி ஒட்டப்பட்டு எடிட்டிங்க் டேபிளில் உருவான ஒரு படத்துக்கு விரிவான தெளிவான விமர்சனம் சாத்தியம் இல்லை. நான் முதலில் ரிலீஸ் அன்றே சென்னையில் படம் பார்த்தேன். வெறி வந்தது போல கத்திக்கொண்டு இருந்தனர். எனக்கு உண்மையில் படம் புரியவில்லை. புரியாமல் இருப்பதற்கு இது என்ன கிம் கி டுக் படமா ? மீண்டும் ஆழமாகப் பார்த்து டீ கோட் செய்து கொள்ள. புரியவில்லை என்று சொல்வது இங்கே விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அலட்சியமாக எடுக்கப்பட்டு தான் தோன்றித்தனமாகக் கோர்க்கப்பட்ட படத்தில் நமக்கு புரிய ஒன்றும் இல்லை. படத்தில் இருப்பவர்களுக்கும் , படத்தை எடுத்தவர்களுக்குமே புரியாமல் படம் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. சரி இடைவெளி விட்டு ஆராவாரம் ஓய்ந்த பின் இன்னொரு முறை பார்க்கலாம் என இந்த வீக் என் பாண்டியில் நண்பர்களுடன் பார்த்தேன். அதே கூட்டம் , ஹவுஸ்ஃபுல். புரியாமல் இருப்பதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை. படத்தின் மையக்கரு என்ன ? பெரும் மதிப்புள்ள போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. அது இருக்குமிடம் கமல் மகனுக்கு மட்டுமே தெரியும். அவன் அதை சொல்லாமல் செத்து விட்டான். வேறு யாருக்கும் தெரியாது. அவ்ளோதானே மேட்டர். மேஜர் மகன் என்னமோ ப்ளூ பிரிண்ட் என்கிறார்…அவருடன் இருக்கும் இன்னொரு ஆசாமிக்கும் அதை சொல்லியிருக்கிறாராம். மேஜருக்கு எப்படித் தெரியும் ? ம்ம்….கற்பனையில் கணித்து வைத்திருக்கிறார். இதெ போலத்தான் எந்த ஒரு முக்கியமான காட்சிக்கும் டீட்டெயிலிங்கே இல்லை. ஆனால் படத்துக்குத் தேவையில்லாத பல காட்சிகள் , பொறுமையை சோதிக்கும் வண்ணம் நீளமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கமல் மகனுக்கு கமல் விக்ரம் எனத் தெரியும். ஆனால் கமலிடமே கமல் மகன் இந்த போதை பொருள் மேட்டரை சொல்லாமலே பரலோகம் போய் விடுவார். வா , வந்து குழந்தையைக் கடத்து என குழந்தையை அந்த வீட்டிலேயே விட்டு வைத்திருப்பார் ஏஜண்ட் கமல். ஏஜெண்ட் டீனா ….பதட்டமாக கமலுக்கு அடியாட்கள் வந்ததை போனில் சொல்லி விட்டு சீரியஸாக சண்டை போட ஆரம்பிக்க , அடுத்த காட்சியில் கமல் சாவதானமாகப் பேசிக்கொண்டு இருப்பார். டீனா செத்த பின்பு வந்து குழந்தைக்கு பால் காய்ச்சுவார். கார் கதவைச் சாத்தி வைத்து விட்டு விக்ரம் விக்ரம் என உரக்கக் கத்துவார். இதைப்போல பல பைத்தியக்கார சீன்களை நல்ல கேமரா துணை கொண்டும் , நடிக்கத் தெரிந்த நடிகர்களின் துணை கொண்டும் தரமான சீன்கள் போல போலியாகக் காட்டியிருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி அபத்தம் போல இதுவரை நான் கண்டதில்லை. ஃபகத் பாசில் கமல் வைத்திருக்கும் ஒரு மைக்கை எடுத்துக்கொண்டு போக வேண்டும். அதற்கு கமல் டிராப் செட் செய்கிறார். இதற்கு சந்தான பாரதி , ஏஜண்ட் டீனா , டிரைவர் , விபச்சாரி என பல சீன்கள் .ஏன்யா பிளாக் ஸ்குவாடுல எவனாச்சும் ஒருத்தன் அந்த மைக்கை கொண்டு போய் ஃபகத் ஃபாசில் ஆஃபீஸில் வச்சா போச்சி …அதுக்கு கூட துப்பு கெட்டவனுங்களா ப்ளாக் ஸ்குவாட் ஆசாமிகள். அப்படி வைத்திருந்தால் ஒரு சீனோடு முடிந்து போயிருக்கும் அல்லவா ? அதுக்கு பதிலாக இத்தனை இழுவை சீன்கள். முதல் பாதியில் முக்கால் வாசி காட்சிகள் அநாவசியமானவை. ரம்பக் காட்சிகள். இதை ஒரு தரமான திரைக்கதையாக அணுகினால் , ஃபகத் ஃபாசில் கதாபாத்திரமே இந்தக் கதைக்குத் தேவையில்லை. ஃபகத் ஃபாசில் கேரக்டரால் கதையில பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. இதை இன்னும் சுருங்கச் சொன்னால் , படத்தை இடை வேளையில் இருந்து பார்த்தாலே புரியும். அதாவது முதலில் இருந்து பார்த்தால் எந்த அளவுக்கு புரியுமோ அந்த அளவுக்கு.முதல் பாதியில் கேரக்டர்கள் எஸ்டாபிலிஷ்மெண்ட் தவிர அந்த அளவுக்கு ஓபி அடித்திருக்கிறார்கள்.அப்புறம் என்னவோ பிளாக் ஸ்பாட் என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள்.சிக்னலே கிடைக்காத இடத்தில் அமர்ந்து எந்த சிக்னலை வைத்து வேலை செய்வாரோ !எனக்கு நிஜமாகவே ஒன்று புரியவில்லை. இண்டர்வல் பிளாக் வேற லெவல் என்கிறார்கள். சாமி வந்து ஆடுகிறார்கள். டூப் என்றால் ஹீரோ போல இருக்க வேண்டும் அல்லவா ? அப்படி கூட அல்லாமல் ஒரு டூப் இண்டர்வல் பிளாக்கில் சண்டை போடுகிறார். அந்த டூப்பின் முகமூடியைத் திறந்தால் , கமல் முகம். கமல் முகத்தைக் காட்டிக்கொண்டு நாலு பேரை நாலு குத்து குத்தி விட்டு பைக்கில் போகிறார். இதில் என்ன வேறு லெவல் என்றே புரியவில்லை. இது ஒரு சஸ்பென்ஸா ? அது கமல் என யூகிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு முட்டாக்கோதிகளா நிறைய பேர் இருக்கிறார்கள் ? விஸ்வரூபம் டிரான்ஸ்ஃபார்மேஷன் சீன் , வேட்டையாடு விளையாடு இண்ட்ரோ சீனுக்கு எல்லாம் கால் தூசி பெறுமா இந்த சீன் ? அதை விட மாஸ் சீன் என்றால் என்ன தெரியுமா ? கதையோடு ஒட்டி வர வேண்டும். தியேட்டரே தன்னை சம்மந்தப்படுத்திக்கொண்டு அலற வேண்டும். மகாநதி படத்தில் கமல் முதன்முறையாக துலுக்காணத்தை அடிக்கும் போதும் , துலுக்காணம் – வழுக்கி விழுந்துட்டேன் என்னும் சொல்லும் போதும் அப்படி அலறியது தியேட்டர். விக்ரமில் படம் முடிந்து நினைத்துப் பார்க்க ஒன்றுமேயில்லை. அதெல்லாம் இன்றைய ரசிகர்களுக்குத் தேவையில்லை. முன் பின் எல்லாம் வேண்டாம் மொமண்டரி ஜாலி , அந்தக் கண நேர காட்டுக் கத்தல். அதற்கு ஏதேனும் ஒரு கண்றாவி மாஸ் சீன். அது போதும் . எமோஷன் வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட பொம்மைக்கு …சாரி ..குழந்தைக்கு உயிர் கொடுக்கும் சீன். இன்னும் எமோஷனைக் கூட்ட குழ்ந்தைக்கு உயிர் வந்ததும் மீண்டும் பீரங்கி சண்டை நடந்து கொண்டிருக்கும் அதே இடத்துக்கு ஃபகத் குழந்தையை தூக்கி வரும் சீன். எவ்வளவு அபத்தங்களைத்தான் ஒரே படத்தில் தாங்குவது ?நண்பர் சிஸிபஸ் அலியோஸிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார். ஒரு விடியோ கேம் ஃபார்மேட்டில் எடுத்திருக்காங்க. ஏஜெண்ட் என படத்துக்கு நடுவில் பெயர் போடுவ்து கூட அந்த ஃபார்மேட் தன் என்று சொன்னார். பப்ஜி விளையாடும் கோஷ்டிகளுக்கு ஏற்ற வகையில் வித விதமான துப்பாக்கிகள் , வெடிகுண்டுகள் , ஆர் டி எக்ஸ் , கத்தி கபடா , கார் வேன் பறத்தல் , பற்றி எரிய வைத்தல் நல்ல தீனியாக இருக்கிறது. இந்த முட்டாள் சுழலில் கொஞ்சம் சுமாரான மற்றவர்களும் மாட்டிக்கொண்டார்கள். படம் பம்பர் ஹிட். ரெண்டு கும்பல் அடிச்சிக்கணும். ஏன் எதுக்குன்னுலாம் புரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனா சும்மா அடிச்சிக்கக் கூடாது….இருக்கும் எல்லா ஆயுதங்களையும் வைத்து அடித்துக்கொண்டும் , வெட்டிக்கொண்டும் , சுட்டுக்கொண்டும் சாக வேண்டும். ரத்த விளாறு ஆக வேண்டும். ஒரே நாளில் நூறு பிணங்கள் விழ வேண்டும். நூறு சாவு ஊர்வலம் போய் , ஒரே நாளில் நூறு பிணங்களை எரிக்கவோ புதைக்கவோ வேண்டும். ஆனால் ஒரு எஃப் ஐ ஆர் கூட விழக்கூடாது. ஒரு போலீஸ் குறுக்கிடக் கூடாது. இது சினிமாவா , விடியோ கேமா ? இரண்டும் இல்லை , இந்தப் பிண்டைதான் மல்டிவெர்ஸாம். இந்த மல்டிவெர்ஸில் ஒழுகுவதை எல்லோரும் பிடித்து பயபக்தியுடன் தீர்த்தம் என தலையில் தெளித்துக்கொள்வதைப் பார்க்க படு வேடிக்கையாக இருக்கிறது. கமலுக்கே ஸ்கிரிப்ட் புரியவில்லை. அதைத்தான் டீஸண்டா இது உங்க உலகம் (முட்டாள் உலகம்) நீங்களே எடுத்துக்கோங்க என லோகேஷிடம் சொல்லி விட்டார். (லோகேஷ் பேட்டியில் சொன்னதுதான்). கமலுக்கு ஹிட் வேண்டும். எத்தை தின்னா பித்தம் தெளியும் என்றிருந்திருக்கிறார். கே ஜி எஃப் எல்லாம் பார்த்துட்டு , அதன் சக்ஸஸ் பார்த்து குழம்பிப் போய் இருப்பார். எதையாச்சும் பண்ணி ஹிட் பண்ணிக்குடு என லோகேஷிடம் கொடுத்திருப்பார். ஏனென்றால் இப்போதிருக்கும் முரட்டு முட்டாள் கூட்டத்தினிடையே எப்படி படம் எடுத்து ஹிட் செய்வது என கமலுக்கு சத்தியமாகத் தெரியாது. பைத்தியங்கள் வெறி பிடித்து திரியும் ஊரில் , முட்டாள் பைத்தியக்கார மனநிலையில் இருக்கும் இன்னொருவனால்தானே அவர்களுக்குத் தீனி போட முடியும். இந்தக் கூத்துக்கு நடுவே எப்போதுமே சூம்பி சூம்பி இன்பம் அடையும் ஒரு முகபாவனையுடன் பரத்வாஜ் ரங்கத்தனங்கள் . நன்றாக விளங்கும் போங்கள். இவ்வளவு வருடங்கள் தமிழக மக்கள் கமலை சீத்தடித்தனர். ஒரே நாளில் , ஒரே படத்தில் கமல் ஒட்டு மொத்த மக்களையும் அதே சம்பவத்தைத் திரும்ப செய்தார், லோகேஷின் பேருதவியோடு. மக்கள் செய்தபோது கமல் வலி தாங்காமல் பின்னால் பிடித்துக்கொண்டு நடப்பார். ஆனால் கமல் மக்களுக்கு வலியே தெரியாமல் , அப்படி ஒரு சம்பவம் நடப்பதே தெரியாமல் நைஸாக செய்து விட்டார். அல்லது மக்களுக்கு இதுதான் பிடிக்கும் போலிருக்கிறது. அனைவரும் ஆனந்தக்கூத்து ஆடுவதை வைத்து இப்படி நினைக்கத் தோன்றுகிறது. எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவில் நடப்பது சில வருடங்களில் இங்கே நடக்கும். முன்பெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் தனியாக வரும். ஒரு கட்டத்தில் அது ரசிகர்களுக்குப் பத்தாமல் போக , எல்லா சூப்பர் ஹீரோக்களையும் ஒரே படத்தில் போட்டு அவெஞ்சர்ஸ் எடுத்தார்கள். சூப்பர் ஹீரோ வே ஒருவர் பத்தவில்லை என்னும் போது டுபான்ஸ் ஹீரோ எல்லாம் ஒரு படத்துக்கு ஒருவர் பத்துமா ? பத்தாது. அதுதான் பத்தல பத்தல என குறியீடாகப் பாட்டு வைத்து இன்னும் மூன்று ஹீரோக்களை இழுத்துப் போட்டு நான்கு ஹீரோ படமாக வந்திருக்கிறது. இனி இது தொடரும். ஒரு கமல் ,ஒரு ரஜினி , ஒரு அஜீத் , ஒரு விஜய் என்ற பஜனை எல்லாம் இனி வேலைக்காகாது. ஆனால் இந்த மல்டி ஸ்டார் படத்தில் ஒரு மேஜிக் நடக்கும். குறிப்பிட்ட நடிகர் அவர் தனியாக நடிக்கும் படத்தில் தோன்றும் போது ரசிகர்களிடையே கிடைக்கும் ஆரவாரத்தை விட அதே நடிகர் மல்டி ஸ்டார் படத்தில் நடிக்கும் போது அதிகமாகக் கிடைக்கும். வி சே வுக்கு அவர் படத்தில் கிடைப்பதை விட விக்ரமில் அதிகம் கிடைத்ததைப் பார்த்தேன். தன் சொந்தப் படத்தில் ஆரவாரமே கிடைக்காத சூர்யாவுக்கும் இதில் கிடைத்தது. அமெரிக்காவில் இதைப்போன்ற மல்டி ஸ்டார் படங்களை கொஞ்சம் மனசாட்சியுடன் , ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஒழுங்காக எடுப்பார்கள். விக்ரம் போலவோ , கே ஜி எஃப் போலவோ இவ்வளவு பொறுப்பற்றத்தன்மையுடன் , இத்தனை அலட்சியமாக எடுக்க மாட்டார்கள். மக்களை முட்டாப்பூண்டுகள் என மனதார நம்பும் ஒருவன் தன் மூளையைக் கழட்டி தன் அக்குளுக்குள் வைத்துக்கொண்டால் தான் இதைப்போன்ற பிரம்மாண்ட முண்டத் திருவிழா படங்களை எடுக்க முடியும். இது மக்களை முட்டாளாக்கும் சீட்டிங் மூவி.