the outsider – 4

இந்த ஜூன் தொடக்கத்திலிருந்தே நம் இணைய தளத்தில் எதுவும் எழுதவில்லை.  காரணம், ஆவணப் படத்தின் படப்பிடிப்பு.  இரண்டு ஷெட்யூல்கள் முடிந்தன.  முதல் ஷெட்யூல் சென்னை.  இரண்டாவது ஷெட்யூல் நாகூர், தஞ்சாவூர்.  நாகூர் நான்கு நாட்கள்.  தஞ்சாவூர் ஒருநாள்.  முதல் ஷெட்யூல் ரஷ் நான்கு மணி நேரம்.  அதைத் தமிழ் சினிமாவின் லெஜண்ட் ஒருவர் நேற்று பார்த்தார்.  நான் செல்ல முடியவில்லை.  நாகூரிலும் – குறிப்பாக தஞ்சாவூரிலும் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்ததால் வேர்த்துக் கொட்டி வேர்த்துக் கொட்டி ஜலதோஷம் பிடித்து விட்டது.  வேர்த்துக் கொட்டியதோடு போயிருந்தால் ஒன்றும் ஆகியிருக்காது.  ஒவ்வொரு ஷாட் முடிந்த கையோடு காரில் முன் இருக்கையில் அமர்ந்து ஏசி காற்றை வாங்கிக் கொண்டது ஒத்துக் கொள்ளவில்லை.  குறைந்த பட்சம் முகக் கவசமாவது அணிந்திருக்கலாம்.  முந்தாநாள் வரை மூக்கு ஜலதாரையாக ஊற்றியது.  அதனால் நேற்றைய ஸ்க்ரீனிங்குக்குப் போகவில்லை.  லெஜண்ட் என் நெருங்கிய நண்பர் என்பதால் தவறாக நினைக்கவில்லை.  எனக்கு வேறு ஒரு பயம் இருந்தது.  ரஷ் எப்படி இருக்குமோ என்று.  நான்கு மணி நேரமும் பதற்றத்திலேயே இருந்தேன். 

பார்த்து முடித்த கையோடு போன் செய்தார்.  அவர் சொன்னது:

ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தின் ப்ரிவியூவின் போது ஒரு முக்கியஸ்தர் ஜேகேவிடம் “என்ன ஜேகே, படத்துல எல்லாரும் வராங்க, போறாங்க, பேசுறாங்க, சாப்ட்றாங்க, வேற ஒண்ணுமே நடக்கலியே?” என்றாராம்.  அதற்கு ஜேகே, ஆட்டம் பாட்டமெல்லாம்தான் மற்ற படத்துல வருதே, நாம என்னா பண்றமோ அதானே நம்ம படத்துல வரும்?” என்று பதில் அளித்தாராம்.

இதை எதற்கு சொல்கிறேன், தெரிகிறதா என்றார் லெஜண்ட்.

உண்மையிலேயே எனக்கு பதில் தெரியவில்லை.  ஆனாலும் லெஜண்டின் உற்சாகமான குரல் எனக்கு மகிழ்ச்சி அளித்த்து.

லெஜண்டே பதில் சொன்னார்.  “ஏன் அதைச் சொன்னேன்னா, நீங்களும் ஜேகே படத்தில் வர்றா மாதிரி சாப்பிட்டுக்கிட்டே இருக்கீங்க, இப்போ எனக்கு நாக்கு ஊற ஆரம்பிச்சிடுச்சு, சாப்பிடப் போறேன்.”

சிலர் தங்கள் மகிழ்ச்சியை இப்படித்தான் வெளிப்படுத்துவார்கள்.  அதற்குப் பிறகு படத்தைப் பற்றி நிறையவே பேசினார்.  படு உற்சாகமாகப் பேசினார்.  அவர் பேசியதையெல்லாம் சொன்னால் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்து விடும்.  படம் வெளிவந்த பிறகு அவர் சொன்னதையெல்லாம் எழுதுகிறேன்.

இன்று இரண்டாவது ஷெட்யூலின் ஸ்க்ரீனிங்.  இன்றும் என்னால் செல்ல முடியவில்லை.  இது அநேகமாக ஆறு மணி நேரத்துக்கு மேல் இருக்கும்.  சீலே எல்லாம் முடிந்தால் மொத்தம் 24 மணி நேரம் வரும்.  அதிலிருந்துதான் இரண்டு மணி நேரத்தை எடுக்க வேண்டும், அல்லது, சுருக்க வேண்டும்.  வேண்டுமானால் நம்முடைய பிரத்தியேகமான பிரதி என்று நான்கு ஐந்து மணி நேரப் படமாகவும் சுருக்கி வைத்துக் கொள்ளலாம்.

படம் நாகூர் சுடுகாடு. எங்கள் வீட்டுக்குப் பின்னால் உள்ளது. ஊரில் நான் படித்த இடங்கள் இரண்டு. ஒன்று, தர்ஹாவின் குளுந்த மண்டபம். இரண்டு, இந்த சுடுகாடு.
ஒளிப்பதிவு: அன்பு சத்தியன், புகைப்படம்: ஒளி முருகவேல்

படத்துக்கான பட்ஜெட்டை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற விஷயம்தான் மன உறுதியைக் குலைப்பதாக உள்ளது. எங்கிருந்தும் உதவி கிடைக்கவில்லை.  ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே பண உதவி செய்தனர்.  ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் கிடைத்தால் கூடப் போதும்.  தங்குமிடம், உணவு, பெட்ரோல் போன்றவைகளுக்கே செலவு இழுத்துக் கொண்டு போகிறது.  இத்தனைக்கும் இதில் பங்கு பெறும் அனைவரும் ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார்கள்.