விஷ்ணுபுரம் விருது 2022: இராயகிரி சங்கர்

தேய்வழக்கானது என்றாலும் சொல்லியாக வேண்டியுள்ளது. முகநூலின் மோசமான பின் விளைவுகளில் அதுவும் ஒன்று. கும்பல் மனோபாவம். என்ன ஏது என்கிற சுய அனுபவம் இல்லாமலேயே எல்லாம் அறிந்த தோரணை யில் அடித்து விடுவது. அறியாமையே அந்த துணிவைத் தருகிறது.

பெரும்பான்மையோடு ஜல்லி அடிப்பதன் மூலம் தன்னுடைய அறிவுஜீவி பிம்பத்திற்கு ஏதும் சேதாரம் ஆகாது என்ற உறுதிப்பாடு வேறு.

இன்றும் சாரு நிவேதிதாவின் தீவிர வாசகர்களில் நானும் ஒருவன்.அவருடைய எந்த நூல் வெளிவந்தாலும் உடனே வாங்கி வாசித்துவிடுகிறேன். உண்மையில் ஜெ.வை விட சாருவையே முழுதாக வாசித்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் தான் இதை எழுதுகிறேன்.

சமகால தமிழ் வாழ்வில் சாதாரணமாக இன்று எதிர்கொள்ள நேரிடுகிற பாலியல் சமன்குலைவை சாருவின் வாசகர் ஒரு தலைமுறைக்கு முன்னரே வாசிப்பின் மூலம் அறிந்திருப்பார். அதைக்கடந்தும் வந்திருப்பார். அந்த வகையில் பேசாப் பொருளைப் பேசத் துணிந்தவர் அவர்.

கோணங்கியைப் போன்றே மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டவர் சாரு. ஓஷோவை செக்ஸ் சாமியார் என முத்திரை குத்திய அதே பாமரத்தனம். அல்லது போலிப் பெருமித விழைவின் பாவனைத்தனம். கோணங்கியின் படைப்பு மொழி எளிதில் செரிக்க முடியாததுஎனில் சாருவின் மொழி அதற்கு எதிர்நிலையில் உள்ளது. எளிமையும் நீரோடை ஒழுக்கும். இரண்டையும் பெரும்பான்மையினர் தவறவிடுகின்றனர்.

இவ்விருது சாருவை மேலும் தயக்கம் இன்றி வாசிக்கத் தூண்டும். இதுவரை முன்முடிவுகளை நம்பி ஊர் விலக்கம் செய்திருந்தவர்களைத் திரும்பி பார்க்கச் செய்யும்.

உடனே அவர் புனைவில் இருந்து பாலியல் பதிவுகளைத் தூக்கிப் போட்டு என்னை நல்வழிப்படுத்த மெனக்கெட வேண்டாம். முடிந்தால் நாற்பது ஆண்டுகளை இலக்கியத்திற்காய் அர்ப்பணித்து வரும் அவரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

பாலியல் எழுத்து, நீர்த்துப்போன படைப்பு மொழி என அவரின் தனித்தன்மைகளையே அவருக்கு எதிராக வீச வேண்டாம்.

மற்றொன்று சாருவின் அத்தனை வரிகளையும் நான் வாசித்து விட்டேன்.எனவே எனக்கு எண்ணெய் போட்டு விளக்கவும் வேண்டாம். இது ஒரு கார்னிவல். ஜாலியோ ஜிம்கானா மனநிலை.முடிந்தால் சார்ந்து சியர்ஸ் சொல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் பக்கத்தில் பொங்கித் தள்ளுங்கள்.

(இராயகிரி சங்கரின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து…)