சாரு நிவேதிதா – வாழ்ந்து வரும் ஷோர்பா: இராயகிரி சங்கர்

நம் நீண்ட ஞானமரபில் சித்தர்களின் பங்களிப்பை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. தொலைந்து போன ஞானச் செல்வம் அம்மரபு.

புதுமைப் பித்தனுக்கு வெள்ளாள பிறப்பின் மூலம் சைவப் பின்புலம் இயல்பாக சாத்தியப்பட்டாலும் சித்தர்களைப் பற்றிய புனைவுகளையும் அதிகம் எழுதியிருக்கிறார். பாரதியை சித்தர்களில் ஒருவர் என்றே மதிப்பிடலாம். ந.பிச்சமூர்த்தி, மெளனி, பிரமிள், மு.தளையசிங்கம் என்று அம்மரபு நம்மிடையே அறுபடாமல் இருந்து கொண்டுதான் உள்ளது.

சமகாலத்தில் போகன்சங்கர் அத்தகைய புனைவு வெளியை படைப்பாக்கும் வாழ்வியல் அனுபவங்கள் உள்ளவர். ஜெ.நிறைய எழுதி இருக்கிறார். ஈறாறுகால் கொண்டெழும்புரவி அந்நோக்கில் குறிப்பிடத் தகுந்த ஆக்கம். யுவன் சந்திரசேகர் எழுதுவதே சித்தர்களைப் பற்றியும், சித்தர்களாக ஆக ஏங்கியவர்களைப் பற்றியுந்தான்.

ஆச்சரியமாக நவீனத்துவர்களில் சித்தர்களைப் பற்றி அதிகம் எழுதியவர்களில் ஒருவர் அசோகமித்திரன். இன்னும் சிலநாட்கள் குறுநாவல், மானசரோவர் நாவல் போன்றவை அவ்வுலகத்திற்கானவை. ஜெயகாந்தனையும் சேர்த்துக்கொள்ளலாம். ஒன்றுமே எழுதாத படைப்பாளிகள் என சு.ரா.வையும், ஜி.நாகராஜனையும் தனித்து அடையாளப்படுத்த வேண்டும். இவர்கள் இருவரும் மார்க்சியர்கள் என்பது ஒரு ஒற்றுமை.

மார்க்சிய தத்துவத்தின் போதாமைகளில் ஒன்று அதன் அகவுலக வறுமை. அதைப் பின்பற்றுபவர்களிடமும் அதைக் காணலாம். இன்று சித்தர்மரபு குறித்தோ,ஆழ்வார்கள் நாயன்மார்களின் தமிழ்த்தொண்டு குறித்தோ சிலாகித்தோம் என்றால் இந்துத்துவ முத்திரை உடனே வந்து விழும். அதற்கு அஞ்சியே அநேகம் பேர் வாளாக இருந்து விடுகிறார்கள்.

நாம் இழந்த ஞானமரபு அது. அம்மரபின் தீயூழ் அது உலகை மாயம் என்றதும், பெண்களை வெறும் உடலாக சிறுத்து வரையறை செய்ததும். பிரபலமான பல பாடல்கள் சட்டென்று நினைவில் எழுகின்றன. சாரு சித்தர்களைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடைய அன்றாடங்களில் சித்தர்களைப் போன்றவர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் சாரு அம்மரபில் இருந்து வேறுபடும் முக்கிய அம்சம் என்பது பெண்ணுடலை கொண்டாட்ட வெளியாக கண்டடைந்திருப்பதுதான். சட்டென்று ஓஷோ சுட்டிய ஷோர்பாவில் இருந்து புத்தா தான் நினைவிற்கு வருகிறார். சாரு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஷோர்பா. இந்து ஞானமரபில் சாருவை சார்வாக மரபோடு ஒப்பிட்டுப் பேசலாம். திசைகளின் நடுவே சிறுகதையில்வரும் சார்வாகனை நமக்கு உடனே அடையாளம் கண்டு கொள்ளக் கூடும்.

இலக்கியத்தை நல்வழிப்படுத்தும் மார்க்கமாக பெரும் பாலோர் எண்ணிக் கொள்கிறார்கள். நற்கருத்துக்களை பேசுவது மட்டுமே இலக்கியம் என்போரால் மீறல்களை எழுத்தில் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது. தி.ஜா.வின் அம்மா வந்தாளில் இருந்து ஜே.பி.சாணக்யா வரை மீறல்கள் தமிழ் புனைவில் சதா நிகழ்ந்து கொண்டேதான் உள்ளன. சாரு அதை மிக விரிவாக கையாண்டவர். அவ்வுலகம் மீதான ஒவ்வாமை அதை எதிர்கொள்ள இயலாமல் புறக்கணிக்கச் சொல்கிறது.

ஷோர்பாவின் கண்களால் இவ்வுலகத்தைப் பார்க்க விரும்பும் ஒருவருக்கு சாருவின் புனைவுகள் மட்டுமே ஒரே வாய்ப்பு.

(இராயகிரி சங்கரின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து. நன்றி சங்கர்)