விமர்சிப்பவர்களுக்கு அராத்துவின் விளக்கம்

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பை விமர்சிக்கலாம். அது அவரவர் விருப்பம். “ஏற்கனவே சாருவைப்பற்றி ஜெயமோகன் இப்படி எழுதியிருக்கிறார்” என்று பழைய வரலாறை தூக்கிக் காட்டுபவர்களுக்கு மட்டும் சிறிய விளக்கம்.

சாருவை ஜெயமோகன் கன்னாபின்னாவென விமர்சித்து இருக்கிறார். நக்கலடித்து இருக்கிறார்.

சாரு ஜெயமோகனை அதைவிட அதிகமாக விமர்சனம் செய்திருக்கிறார். கொடூரமாக வசை மழை பொழிந்திருக்கிறார். கலாப்ரியா நடத்தும் குற்றாலம் கவிதைப்பட்டறைக்கு சாரு அவந்திகாவுடன் சென்றிருந்த போது , ஜெயமோகன் சாருவைப் பார்த்து – நீங்க வாரமலர்ல கிசு கிசு எழுதும் கிசு கிசு எழுத்தாளர்தானே ? இங்கே என்ன உங்களுக்கு வேலை என கேட்டிருக்கிறார். சாரு அடிக்கப்பாய்ந்திருக்கிறார். சாரு ஒரு இலக்கிய எழுத்தாளரே இல்லை என ஜெமோ எழுதியிருக்கிறார். சாரு ஜெயமோகனை உத்தம தமிழ் எழுத்தாளர் என ஓட்டு ஓட்டென ஓட்டியிருக்கிறார். மம்மி ரிட்டர்ன்ஸ் எழுதியிருக்கிறார்.

சாரு ஜெமோ புத்தகத்தை மேடையிலேயே (மனுஷ் விவகாரத்தை முன்வைத்து) கிழித்து எறிந்திருக்கிறார். இதைப்போல பல வரலாறுகளை சொல்ல முடியும். அவை எல்லாம் இப்போதும் பொதுவெளியில் அப்படியே உள்ளன. இதை என்னமோ துப்பறிவாளர் போல தூக்கிக்கொண்டு வந்து காட்டுவதுதான் வியப்பாக உள்ளது.

இதை எல்லாம் தாண்டித்தான் ஜெயமோகன் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருதைத் தருகிறார். சாருவும் அதை மறுக்காமல் பெற்றுக்கொள்கிறார்.

இதிலிருந்து கற்றுக்கொள்ள உங்களுக்கு ஒன்றுமே இல்லையா ? இதில் இருந்து புரிந்து கொள்ளவும் உங்களுக்கு ஒன்றுமே இல்லையா ? என்ன இலக்கிய வாசகர்கள் நீங்கள் ?

இலக்கியம் என்ன திமுக அதிமுக மாதிரி கட்சியா ? அந்தக் கட்சி அபிமானிகள்தான் தங்கள் பரம்பரையையே கட்சிக்கு அடிமை சாசனம் எழுதிவைத்து விட்டு , காலம் முழுக்க அந்த கட்சித் தலைமையின் மகன் , பேரன் , பேத்தி என காலை நக்கிகொண்டு கிடப்பார்கள். மாறவே மாட்டார்கள். வளர மாட்டார்கள் , சிந்திக்க மாட்டார்கள் , மாற்றுக்கருத்தை காது கொடுத்து கேட்க மாட்டார்கள் , விரோதம் பாராட்டுவார்கள் , வன்மமாக இருப்பார்கள்.

சாருவும் ஜெமோவும் கடந்த காலத்தில் மோதிக்கொண்டது தனிப்பட்ட வாழ்வை முன்வைத்தா ? இருவருக்கும் ஏதேனும் முன்விரோதம் இருந்ததா ? இருவரும் கடுமையாக விமர்சித்திக்கொண்டு , மோதிக்கொண்டது அவரவர் இலக்கிய கொள்கை , இலக்கிய போக்கு , இலக்கிய நிலைப்பாட்டை முன்வைத்து.

அது அப்படித்தான் இருக்க வேண்டும். எந்தப் பாசாங்கும் இல்லாமல் மோதி வந்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பெல்ட்டுக்குக் கீழே அடித்திருக்கிறார்கள். ஆனால் இருவருக்கும் ஒருவர் மேல் இன்னொருவருக்கு பரஸ்பர மரியாதை இருந்திருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் சாருவுடன் அதிக நாட்கள் பழகி வருவதால் இதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். அதே போல என் புத்தக விழாவுக்கு ஜெயமோகனை அழைத்த போதும் , ஜெமோ சாரு மீது வைத்திருக்கும் மரியாதையை உணர்ந்து கொண்டேன்.

இருவரும் வேறு வேறு பள்ளிகளைச் சார்ந்தவர்கள். எதிரெதிர் துருவங்கள். இலக்கியச் செயல்பாட்டில் இருவரும் தங்களளவில் மிகவும் உண்மையாக நடந்துகொண்டார்கள்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரவர் வழிகளில் இருவரும் பெரும் சாதனைகளை செய்ததும் , நிரூபித்ததும் , ஒருவர் மேல் ஒருவருக்கு மரியாதை அதிகமாகிறது. அதை இருவரும் அங்கீகரிக்கிறார்கள்.

விஸ்வாமித்திரரா , அகத்தியரா என்று தெரியவில்லை, மறந்து விட்டேன். அவர் சார்வாகனுக்கு மரியாதை கொடுத்ததை புராணத்தில் படித்த ஞாபகம். இருவரும் எதிரெதிர் கருத்து கொண்டவர்கள். இறை நம்பிக்கை வெர்ஸஸ் நாத்திகம். எப்படி மோதிக்கொண்டிருப்பார்கள் ? ஆனால் பொது சபை என வரும்போது அவர் செயல்பாடுகளுக்கான மரியாதை.

இதேபோல் ஷோபா சக்தி எப்போதோ சாருவைப்பற்றி எழுதியிருந்ததை அனோஜன் பாலகிருஷ்ணன் என்பவர் நோண்டி எடுத்து ஷோபாவிடம் கேட்டிருந்தார். சிறு பிள்ளை விளையாட்டு போல இருந்தது. மிஸ் என்ன அவன் அக்குள்ள கிள்ளிட்டான் என்பது போல சிரிப்பாக வந்தது.

ஷோபா அப்போது எழுதியது உண்மைதான். இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கலாம். ஷோபா சக்தி வளருவதற்கு அவருக்கு உரிமை இல்லையா என்ன ? நீங்கள் தேங்கிய குட்டையாக உறைந்து கிடப்பது போல எல்லோரும் இருக்க வேண்டும் என நினைக்கலாமா ?

சரவணகார்த்திகேயன் எழுதிய குறிப்பைப் படித்தேன். நிறுவனம் ஆகும்போது அனைவரையும் அணைத்துச் செல்வது என்பது போல எழுதியிருந்தார். இதுதான் ஜெயமோகனை அதிகம் அவமானப்படுத்தும். நான் நிச்சயம் அபடி நினைக்கவில்லை. அவர் என்ன கட்சியா நடத்துகிறார்? அனைவரையும் அரவணைத்துச் செல்ல ?

அதே போல வயதைக் குறிப்பிட்டு கனிந்து விடுதல் என்பது போல எழுத்யிருந்ததை ஏற்கிறேன். அது ஒன்றும் தவறல்ல. வயது ஏற ஏற கனிவது என்பது இயற்கையானதுதான். பலர் அழுகிப் போய்விடுவார்கள். அழுகிபோவதை விட கனிவது சிறந்தது. ஜெயமோகன் கனிவது என்பது – கண்டவர்களையும் அனுசரித்துப் போவது அல்ல . எதிர் பள்ளியில் இருந்தாலும் அவர்களின் சாதனைகளையும் இலக்கிய செயல்பாட்டையும் அங்கீகரிப்பது என எடுத்துக்கொள்கிறேன்.

அதே போல இன்னொரு உண்மையையும் சொல்லி விடுகிறேன். சாருவின் சில நண்பர்கள் , இந்த விருதை ஏற்றுக்கொள்ள வேண்டாம், அது உங்களுக்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என்று சொன்னார்கள். இப்போ , ஜீரோ டிகிரி விருது அல்லது ராஸலீலா விருது என்று ஆரம்பித்து நீங்கள் கொடுத்தால் ஜெமோ ஏற்றுக்கொள்வாரா என்றெல்லாம் சொன்னார்கள்.

சாரு நிவேதிதா அதை எல்லாம் மறுத்தார். ஜெயமோகனின் இலக்கிய இடத்தின் மீதிருந்த மரியாதையால் அதை ஏற்றுக்கொள்வதில் எந்த சிறு சலனமும் இல்லாமல் உறுதியாக இருந்தார்.

நான் கூட இந்த வருட விஷ்ணுபுரம் விருது விழாவைப் புறக்கணிக்கிறேன் என்று விளையாட்டாகக் கூறினேன். அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு , பல விளக்கங்கள் கொடுத்து என்னை மாற்ற முயற்சி செய்தார்.

பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன் ஜெமோ , எஸ் ரா , சாரு நிவேதிதா – இலக்கிய மும்மூர்த்திகள் என்பார்கள். இப்போது எஸ்.ரா விளையாட்டிலேயே இல்லை. நடுவாந்திரமாக இருந்தால் இப்படித்தான் , சமகாலத்தில் கல்லா கட்டலாம் , ஆனால் வரலாற்றில் தொலைந்து போக வேண்டியதுதான்.

எதிர்கால தமிழிலக்கிய வரலாறில் தற்போது நடந்துகொண்டிரும் காலகட்டத்தைக் குறிப்பிடும் போது ஜெயமோகன் – சாரு நிவேதிதா பெயர்கள்தான் முதன்மையாக இருக்கும்.

-அராத்து