காலையில் என்ன ப்ரேக்ஃபாஸ்ட்?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை.  எக்ஸ் என் நெருங்கிய நண்பர்.  தினமும் சந்தித்துக் கொள்வோம்.  பல மணி நேரம் பேசுவோம்.  அப்போது ஒரு இலக்கியப் பத்திரிகையில் சினிமா பாடல்கள் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது.  அக்கட்டுரையை மறுத்துச் சொல்வதற்கு சில விஷயங்கள் இருந்தன.  அதை ஒரு கட்டுரையாக எழுதி பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன்.  பிரசுரம் ஆனது.  விவாதம் நல்ல விஷயம்தான் இல்லையா?  ஆனால் எக்ஸ் அப்படிப் பார்க்கவில்லை.  என் கட்டுரைக்கு எக்ஸ் ஒரு மறுப்பு எழுதினார்.  அவர் எழுதிய கட்டுரை உண்மையில் மறுப்பே இல்லை. அது ஒரு வசை.  உனக்கு இசை பற்றி என்ன தெரியும் என்பதே அக்கட்டுரையின் சாரம்.  

எனக்குக் கடும் கோபம் ஆகி விட்டது.  இப்போது என்றால் போடா சரிதான் என்று உதறி விட்டுப் போயிருப்பேன்.  ஆனால் அப்போதைய சாரு அப்படி இல்லை.  அவர் என்னை இடுப்புக்குக் கீழே அதர்மமாகத் தாக்கியதால், நானும் அதையே அவருக்குச் செய்தேன்.  ஏன், உம்மைப் போன்ற உயர்சாதிக்காரன்தான் இசை பற்றி எழுத வேண்டுமா என்பது என் வசை கட்டுரையின் சாரம். சாதியையும் குறிப்பிட்டே எழுதினேன்.  இப்போதும் அது பற்றி நான் வருந்தவில்லை.  இப்போது நான் அப்படி எழுத மாட்டேனே தவிர அப்போது அவருடைய வசையால் பெரிதும் காயமடைந்தேன்.  இத்தனைக்கும் அவரை நான் தினமும் சந்தித்துக் கொண்டிருந்தேன்.  மட்டுமல்லாமல், தர்க்கரீதியாக என் கருத்து மறுக்கப்பட்டால் உடனடியாக நான் உங்கள் கட்சிக்கு வந்து விடுவேன்.  அதுவும் அவர் கட்டுரையில் இல்லை.  உண்மையிலேயே அவர் எழுதியது ஒரு சாதீயக் கட்டுரைதான். இசை பற்றி எழுத உனக்கு என்ன தகுதி இருக்கிறது? 

இது பற்றி சீனியிடம் சொல்லி, இப்படி என் பழைய வாழ்க்கையில் சில நண்பர்களை இடுப்புக்குக் கீழே அதர்ம்மாகத் தாக்கியிருக்கிறேன் என்றேன்.

சீனிக்கு ஞாபக சக்தி அதிகம்.  நேற்று மொரீஷியஸிலிருந்து அழைத்தார்.  இப்போது நான் உங்களை இடுப்புக்குக் கீழே தாக்கப் போகிறேன் என்றார்.  சொல்லுங்கள் என்றேன் சிரித்துக் கொண்டே.

ஒரு நண்பரைக் குறிப்பிட்டு “அவர் பிராமணர் என்பதால்தான் அவரோடு பழகுகிறீர்களா?” என்று கேட்டார். 

சேசே, அப்படியெல்லாம் இல்லை சீனி. 

பிறகு என்ன காரணம்?  அவரோடு நீங்கள் பழகுவதற்கு என்னால் எந்த தர்க்கத்தையும் நியாயத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லையே?

ஹிஹிஹி… நான் கொஞ்சம் ஜெயலலிதா மாதிரி.  எனக்கு என்னைப் புகழ்ந்தால் பிடிக்கும்.   புகழ்பவர்களோடு ஒட்டிக் கொள்வேன்.  நீங்கள் குறிப்பிடும் நண்பரைப் போல் என்னைப் புகழ்ந்தவர் யாரும் இல்லை. 

ஓ, நல்லா இருங்க.

இன்று காலையில் வழக்கம் போல் டார்ச்சர் கோவிந்தன் அழைத்தார்.  டார்ச்சரின் ஃபோன் வந்தால் எனக்குக் குதூகலம் ஆகி விடும்.  காரணம், இந்தியப் பெண்களைப் போல் நானும் ஒரு மஸாக்கிஸ்ட். 

டார்ச்சர் ஆரம்பித்தார்.  ஏம்ப்பா உங்களுக்குக் கொஞ்சம் கூட நாணமோ லஜ்ஜையோ இல்லையா?  இப்படியா உங்களைப் பற்றிய புகழ்ச்சிக் கட்டுரைகளை உங்கள் ப்ளாகிலேயே போட்டுக் கொள்வீர்கள்?

நான் அதற்குப் பதிலாக நேற்று சீனியுடன் நடந்த உரையாடலைச் சொன்னேன். 

ம்ம்ம்… சரி, வேற என்ன விசேஷம்?  காலைல என்ன ப்ரேக்ஃபாஸ்ட்?

***

ஒரு அரை மணி நேரம் கழித்து கோவிந்தனிடமிருந்து மீண்டும் ஃபோன். இன்னிக்கு என் ஆத்துக்காரி மோர்க்குழம்பு பண்ணப் போறாளாம். உங்களுக்கு மோர்க்குழம்புன்னா பிடிக்குமே? டன்ஸோ பண்ணி விடவா?

ஆஹா, இன்னிக்கு வினித் வந்திருக்கான். அவனும் நானும் மத்யானம் புஹாரிக்குப் போலாம்னு திட்டம்.

இப்டியே சின்னப் பசங்களோட சேந்து சுத்திக்கிட்டு இருங்க. ஐயோ, நமக்கு எதுக்கு வம்பு? அப்றம் இதுக்கும் ப்ளாகில என்னைத் திட்டி எழுதுவீங்க… சரி, வைக்கிறேன்…