ஓநாய் குலச் சின்னம் – மதிப்புரை

மீள் பிரசுரம்

அக்டோபர் 14, 2012

ஏசியன் ஏஜ்

(கட்டுரையின் தமிழ் மூலம்)

Jiang Rong எழுதிய Wolf Totem என்ற நாவல், மா சே துங்கின் ரெட் புக்கைப் போல் மில்லியன் கணக்கில் விற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த நாவலை இலக்கியம் என்று சொல்வதை விட ஆந்த்ரபாலஜி என்றே சொல்லுவேன்.  Oscar Lewis இன் La Vida என்ற ஆந்த்ரபாலஜி புத்தகத்தில் இருந்த அதே விறுவிறுப்பு இந்தப் புத்தகத்திலும் இருக்கிறது.  Puerto Ricoவின் San Juan நகரில் உள்ள ஒரு சேரியில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் கதைதான் La Vida.  இந்தக் கதையில் எந்தக் கற்பனையும் கிடையாது.  அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பேட்டியை அப்படியே கேட்டு பதிவு செய்திருக்கிறார் ஆஸ்கார் லீவிஸ். அது ஒரு சமூக மானுடவியல் ஆய்வாக இருந்தாலும் குரூரமும், வன்முறையும், காமமும் மட்டுமே நிரம்பிய அந்தச் சேரி மக்களின் வாழ்வை எல்லோரும் ஒரு நாவலைப் போலவே வாசித்தார்கள். ஆனால் இந்தியாவில் நாவல் என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருப்பவை எல்லாம் சுயசரிதைகள்.  பெரும்பாலும் அவையெல்லாம் அந்த எழுத்தாளரின் தாத்தா, பாட்டி குடும்பக் கதையாகவே இருப்பதால் இந்திய ஆங்கில எழுத்து எனக்கு மிகவும் சலிப்பூட்டுகிறது. இதற்குக் காரணம், ஆங்கிலத்தில் எழுதக் கூடியவர்கள் இங்கே மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுடைய தயிர் வடை கதைகளும் ஒரே அச்சில் வார்த்தெடுத்ததைப் போல் இருக்கின்றன. 

Wolf Totem நாவலில் இந்தப் பிரச்சினை எதுவும் இல்லை.  சீனாவின் கலாச்சாரப் புரட்சி காலகட்டத்தில் பெய்ஜிங் நகரிலிருந்து மங்கோலியாவின் உள்பகுதியில் உள்ள Olon Bulog என்ற சமவெளிக்குச் செல்லும் Chen Shen என்ற இளம் மாணவன்,  அங்கே வசிக்கும் nomadic  இடையர்களுடன் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்து விட்டு  பெய்ஜிங் திரும்புகிறான்.  அந்தப் பதினோரு ஆண்டுகளின் கதைதான் வுல்ஃப் டோட்டம்.

மங்கோலியாவின் செங்கிஸ்கான்தான் உலக வரலாற்றிலேயே அதிக நாடுகளைப் பிடித்தவன்.  செங்கிஸ்கான் நாடோடி இனத்தைச் சேர்ந்தவன்; உலகின் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றைச் சேர்ந்தவன்; அவன் பேசிய மங்கோலிய மொழிக்கு எழுத்து கூட கிடையாது.  Primitive கலாச்சாரத்தை சேர்ந்தவன்.  அப்படிப்பட்ட ஒருவனால் எப்படி உலகம் முழுவதையும் பிடிக்க முடிந்தது?  மங்கோலியர்களின் wolf totem தான் காரணம் என்கிறார் நாவலாசிரியர்.  ஓநாயிடமிருந்துதான் – ஓநாய் மற்ற மிருகங்களை எப்படி வேட்டை ஆடுகிறது என்பதிலிருந்துதான் அவர்கள் அத்தனை ராணுவத் தந்திரங்களையும் கற்றுக் கொண்டார்கள்.  மங்கோலிய இனம் ஓநாய்; சீனர்கள் ஆட்டு மந்தை. ஓநாய் குழு மனப்பான்மை கொண்டது.  ஆடுகள் அப்படி அல்ல; ஒரு ஆட்டை வெட்டினால் மற்ற ஆடுகள் சந்தோஷமாக அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்.  ஏனென்றால், அவன் என்னைக் கொல்லவில்லையே என்ற சுயநலம். பிரம்மாண்டமான பெருஞ்சுவரைக் கட்டினாலும் இந்த ஆட்டுமந்தை மனோபாவத்தினால்தான் சீனர்கள் மங்கோலியர்களிடம் தோற்றார்கள்.  நாடோடிகள் கலாச்சாரம் vs உழவர் கலாச்சாரம் என்று இதை ஒரு binary opposition ஆக வகைப்படுத்துகிறார் Jiang Rong.  

நீங்கள் எந்த விலங்கை வேண்டுமானாலும் பழக்கி விடலாம்; ஆனால் ஓநாயை மட்டும் பழக்கவே முடியாது.  ஓநாய் தன் சுதந்திரத்துக்காக உயிரையே கொடுக்கக் கூடியது.  மங்கோலியர்களும் அப்படியே.  அந்த வகையில் மங்கோலியா ஒரு ஆன்மீக சொர்க்கம்.  சுமார் 700 பக்கங்களில் Jiang Rong வைக்கும் வாதம் இதுதான்.  ஆனால் அவர் சொல்லும் ஆன்மீக சொர்க்கம் எதார்த்தத்தில் எப்படி இருக்கிறது? ரத்த ஆறு ஓடும் ஒரு பூமி அது.  அந்தச் சமவெளியில் வாழும் அத்தனை உயிர்களையும் சாப்பிடுகிறது ஓநாய்; மனிதர்கள் உட்பட.  மனிதனும் அங்கே வாழும் அத்தனை உயிர்களையும் சாப்பிடுகிறான்.  நாவலில் ஓநாய்கள் குதிரைக் குட்டிகளைக் கொன்று தின்னும் இடம் மிகவும் கொடூரமானது.  இப்படி குரூரம், வன்முறை, மிருகவெறி (beastiality) ஆகியவற்றை மட்டுமே கொண்ட ஒரு கலாச்சாரத்தை எப்படி ஒருவர் வியந்து பாராட்ட முடியும்? ஓநாய் சுதந்திரமாக இருக்கிறது என்றால் அந்த சுதந்திரத்திற்காக அந்த பூமியில் உள்ள அத்தனை உயிரினங்களையும் அது கொன்று தின்கிறதே? 

இடையர்களின் தலைமைக் கிழவன், Chen Shen-இடம், “மான்களை ஓநாய் வேட்டையாடவில்லை என்றால் மான்களின் தொகை அளவில்லாமல் பெருகி இந்தச் சமவெளியில் உள்ள எல்லா புல்பூண்டுகளும் முற்றாக அழிந்து இந்த இடமே பாலைவனம் ஆகி விடும்,” என்கிறான்.  இந்த வாதத்தில் ஒரு eco-balancing இருக்கிறது.  ஆனால் ஒரே ஒரு இனம் மற்ற இனத்தையெல்லாம் கொன்று தின்னும் ஃபாஸிஸ்ட் பூமியை விட பாலைவனம் பரவாயில்லை தானே?  குறைந்த பட்சம் பாலைவனத்தில் ரத்த ஆறு ஓடாதே?  

ஜப்பானிய ஜென் பௌத்தத்தில் ம்யூ என்று ஒரு நிலை உள்ளது. மிகப் பெரும் தத்துவார்த்த உண்மைகளைக் கொண்டிருக்கும் இந்த ம்யூவை சுலபமான முறையில் இப்படி விளக்கலாம்.  ”குடித்து விட்டு உன்னை அடித்துக் கொண்டிருந்த உன் கணவன் இப்போது அதை நிறுத்தி விட்டானா?”  இதற்கு நீங்கள் ஆமாம் என்றும் சொல்ல முடியாது;  இல்லை என்றும் சொல்ல முடியாது.  மௌனம்தான் சரியான பதிலாக இருக்க முடியும்.  அதைத்தான் mu concept of emptiness என்று ஜென் சொல்லுகிறது. இது Void of Quantum physics-உடனும் தொடர்புடையது. 

மற்ற உயிர்களை அடித்துத் தின்பதையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் ஓநாய்களையும் மனிதர்களையுமே racial supremacy-யோடு பக்கம் பக்கமாகச் சொல்லும் Wolf Totem-த்தைப் படித்த போது எனக்கு இந்தியாவின் ஞானிகளைப் பற்றியும் சூஃபிகளைப் பற்றியும் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.  காட்டுமிராண்டித்தனமான ஒரு வாழ்க்கையும் கலாச்சாரமும் ஆன்மீக சொர்க்கம் என்றால் எந்த உயிரையும் கொல்லலாகாது என்று சொன்ன மகாவீரரையும் புத்தரையும் உருவாக்கிய இந்திய நிலப்பகுதியை என்னவென்று சொல்வது? தன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக இன்னொரு உயிரைக் கொல்லும் ஓநாயிடமிருந்து போர்த் தந்திரங்களைக் கற்றுக் கொண்டு உலக மக்களையெல்லாம் அடிமைப்படுத்திய ஃபாஸிஸ்ட் செங்கிஸ்கானை ஒரு சூப்பர்மேனாக உருவகப்படுத்தியிருக்கிறார் ஜியாங். அப்படியானால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கொலைக்கருவியை தனது தியாகத்தின் மூலம் தியாகத்தின் குறியீடாகவே மாற்றிய இயேசுவை என்னவென்று சொல்வது?

ஓநாயை குலச் சின்னம் என்று சொன்னால் அந்த ஓநாயையும், சிங்கம் புலி, கரடிகளையும் நாய்க்குட்டிகளைப் போல் தன் பின்னே ஓடி வரச் செய்த ஆதி சங்கரரை என்னவென்று சொல்வது?  எல்லா விலங்குகளும் அந்த மனிதனின் பின்னே ஏன் அப்படி ஓடின? அதன் பின்னால் இருந்த “உண்மை” என்ன? நம்முடைய விஞ்ஞானக் கோட்பாடுகளையெல்லாம் தாண்டிய எத்தனையோ karamat-களினால்தானே சூஃபி ஞானிகள் இந்தியா முழுவதும் இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள்? (கராமத் = அற்புதம்)

உணவுக்காக இன்னொரு உயிரினத்தை அடித்துத் தின்னும் கலாச்சாரத்தை உன்னதமாகப் போற்றும் ஓநாய் குலச்சின்னம் எனக்குள் இது போன்ற ஆயிரக் கணக்கான கேள்விகளை எழுப்பியது.  இந்த உலகிலேயே அதி அற்புதமான, நம்ப முடியாத விஷயம் என்னவென்றால் மற்றவர்களுக்காகத் தன்னை அழித்துக் கொள்வதுதான்.  12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர் அவர். தன் குருவிடம் சென்று பிரம்ம ரகஸ்யத்தைக் கேட்கிறார்.  பல நாட்கள் அலைந்து,  பல தினங்கள் உண்ணா நோன்பு இருந்த பிறகுதான் குரு அவருக்கு அந்த ரகஸ்யத்தைச் சொல்கிறார்.  சொல்லி விட்டு,  “இதை மற்றவர்களுக்குச் சொன்னால் உனக்கு நரகம்தான் கிடைக்கும்,” என்றும் எச்சரிக்கிறார்.  ஆனால் சிஷ்யனோ தான் பெற்ற பிரம்ம ரகஸ்யத்தை கோவில் கோபுரத்தின் மேலே ஏறி ஊர் முழுக்கச் சொல்லுகிறான்.  ”இந்த ரகஸ்யத்தை அறிந்து கொண்டதால் இத்தனை பேருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்றால் என் ஒருத்தனுக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை” என்கிறார் அந்த மனிதர்.  அவர் பெயர் ராமானுஜர். ஸ்ரீவைஷ்ணவத்தின் ஸ்தாபகர்.

இன்னொரு அதிசயம், துறவு.  உலக பந்தத்தைத் துறந்து விட்டு வீடு அற்று, சொந்தம் அற்று காட்டில் திரியும் மனநிலையைப் பற்றி ஒரே ஒருக்கணம் யோசித்துப் பாருங்கள்.  இந்திய வரலாற்றில் எத்தனையோ அரசர்கள் துறவு பூண்டிருக்கலாம். ஆனால் 22 ஆண்டுகள் இந்திய சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசனாக இருந்து அதிகாரம் செலுத்திய சந்திர குப்த மௌரியனின் துறவுக்கு அதெல்லாம் ஈடாகாது.  அவன் தன்னுடைய 42-ஆவது வயதில் தன் அரசாட்சியைத் துறந்தான்.  கிரீடத்தை இறக்கி வைத்து விட்டு, கஷாயத்தை உடுத்திக் கொண்டு ஸ்ரவணபெலகுலா வந்து சமண ஞானி ஆச்சாரியர் பத்ரபாஹுவை சந்தித்தான்.  பின்னர் Sallekhana  (சாகும் வரை உண்ணாவிரதம் என்ற சமண சடங்கு) செய்து இறந்தான்.  (சமணம் தற்கொலை செய்து கொள்வதை அனுமதிப்பதில்லை.   ஆனால் ஒருவர் தன்னுடைய பிறவியின் பயன் முடிந்து விட்டது என்று கருதினால் இந்தச் சடங்கை செய்து உயிர் துறக்கலாம்… குறிப்பாக, ஞானிகள்.)

ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் மன்னன் தன் சுகபோகத்தையெல்லாம் துறந்து விட்டு ஒரு பிச்சைக்காரனைப் போல் வெளியே வருவதை விட வேறு ஒரு உன்னதம் இருக்க முடியுமா என்ன?  உலகில் எந்தக் குலச்சின்னத்தினால் இந்த மனநிலையை விளக்க முடியும்?

பின்குறிப்பு:  யாராவது இந்தியக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு கருட குலச்சின்னம் என்று ஒரு நாவலை எழுதினால் நன்றாக இருக்கும்.  கருடன்  விஷ்ணுவின் வாகனம்.

Mongolian Taiga பற்றி Ulrike Ottinger ஒன்பது மணி நேர அவணப் படம் எடுத்திருக்கிறார்.  இந்த நாவலைப் படித்த கையோடு அதையும் பார்த்து விடலாம் என்று முயற்சித்தேன்.  டிவிடியின் விலை 200 யூரோ என்று தெரிந்தது.  அந்தப் பணத்தில் மங்கோலியாவை நேரிலேயே போய் பார்த்து விடலாம் என்று படம் பார்க்கும் ஆசையை விட்டு விட்டேன்.