the outsider – 26

செப்டம்பர் 15, திங்கள் கிழமை.  சாந்த்தியாகோவின் வீட்டுக்கு வந்த ரமோன் கட்டிடத் தொழிலாளிக்கான உடுப்பை அணிந்து கொண்டான்.  இருவரும் சேர்ந்து ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் எடுத்து ட்ரக்கில் போட்டார்கள்.  வழக்கம் போலவே ட்ரக் கிளம்பும்போது பிரச்சினை கொடுத்தது.  ஆனால் நான்காவது, ஐந்தாவது முயற்சியில் கிளம்பியது. 

ஆஸ்வால்தோ தன் வாக்கி டாக்கியை எடுத்து சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு பெட்டிக் கடைக்குக் கிளம்பினான். 

ஆர்மாந்தோ வரும் வழியிலேயே ஒரு இடத்தில் காரை நிறுத்தி சாந்த்தியாகோ, ரமோன் மாதிரியே தானும் கட்டிடத் தொழிலாளிக்கான உடுப்பை அணிந்து கொண்டான். 

சரியாக காலை எட்டு மணிக்கு அவர்கள் எங்கே சந்திக்க வேண்டுமோ அங்கே சந்தித்தார்கள்.  ஆயுதங்கள் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டன.  ஆர்மாந்தோ தன்னுடைய  கனமில்லாத தானியங்கித் துப்பாக்கியை (FAL) எடுத்துக் கொண்டு ட்ரக்கின் உள்ளே போய் சுடுவதற்கு வாகாக அமர்ந்து கொண்டான்.  

ரமோன் எங்களுடைய வீட்டின் முன் அறையில் இலக்கைக் கண்காணிக்கும் இடத்தில் போய் தயாராக நின்று கொண்டான்.  வாக்கி டாக்கி ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்த்துக் கொண்டான். அவனுடைய M-16 துப்பாக்கியில் 30 புல்லட்டுகள் இருந்தன.  அதோடு கூட அவனிடம் Browning 9 mm கைத்துப்பாக்கியும் இருந்தது. 

சாந்த்தியாகோதான் பஸூக்காவை (RPG 2) இயக்கப் போகிறவன்.  அவன் வீட்டின் முன்வாசலில் பஸூக்காவுடன் நின்றான்.  பஸூக்காவுடன் கூட அவனிடம் சைலன்ஸர் பொருத்தப்பட்ட இரண்டு இன்கிராம் சப்மெஷின்கன்களும் இருந்தன. 

ரமோன், சாந்த்தியாகோ, ஆர்மாந்தோ மூவரும் தாங்கள் செய்ய வேண்டியதை மீண்டும் ஒருமுறை மனதில் ஓட விட்டார்கள்.  பிறகு, தங்கள் ஆயுதங்களோடு ஆஸ்வால்தோவின் வாக்கி டாக்கி சமிக்ஞைக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்கள். 

சம்பவத்தை முடித்து விடலாம் என்ற நம்பிக்கை முதன்முதலாக வந்தது ரமோனுக்கு.  சொமோஸாவின் கார் நிறம் என்ன என்ற சமிக்ஞை இப்போது ஆஸ்வால்தோவிடமிருந்து கிடைக்க வேண்டும்.  நான் ஏற்கனவே சொமோஸாவின் கார் அவன் வீட்டிலிருந்து இந்த இடத்துக்கு வர எத்தனை நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டது.  23 இலிருந்து 29 நொடிகள் ஆகின்றன.  ஆக, ஆஸ்வால்தோவிடமிருந்து சமிக்ஞை கிடைத்ததும் இவர்கள் 20 நொடிகளில் அவரவருக்கான இடங்களில் நிற்க வேண்டும்.

ரமோன் சற்றே பதற்றமானான்.  சொமோஸாவின் பங்களாவிலிருந்து ஒரு உருவம் கேட்டை நோக்கி வருகிறது. ஆயுதங்களை மறையுங்கள் என்று கிசுகிசுத்தான் ரமோன்.  உடனே எல்லோரும் ஆயுதங்களை மறைத்தார்கள். 

அந்த நேரம் பார்த்து வீட்டின் கேட்டிலிருந்து அழைப்பு மணி கேட்டது.          

திறந்தால் ஒரு இளைஞன்.  “நான் இந்தப் பகுதியின் வாட்ச்மேன்.  என் சம்பளத்தை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்ளச் சொல்லி இந்த வீட்டுக்கார அம்மாள் சொன்னார்கள்.”

”உன்னைப் பற்றி அவர்கள் சொன்னார்கள்.  சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வா.”

”ஆஸ்வால்தோ சரியாக ஒன்பது மணிக்கு நம்மை அழைப்பான்.  நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றான் ரமோன் மற்ற இருவரிடமும். 

ஆர்மாந்தோவும் சாந்த்தியாகோவும் அவரவர் இடத்தில் ஆயுதங்களோடு தயாராக இருந்தார்கள்.  அப்போது ரமோன்  ”தொலைந்தோம், சர்வ நாசம்” என்றான். 

ட்ரக்தான் பிரச்சினை.  கிளம்புவதற்குத் தகராறு பண்ணுகிறது.  மூன்றாவது முயற்சியில் கிளம்பியது. 

ரமோன் திரும்பவும் வீட்டுக்குப் போய் முன் பக்கம் இருந்த ஜன்னலின் அருகே அமர்ந்து ஆஸ்வால்தோவின் சிக்னலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். 

சரியாக ஒன்பது மணிக்கு ரமோனின் வாக்கி டாக்கி கர்புர் என்றது.  வார்த்தைகள் சரியாகக் கேட்கவில்லை.  கர்புர் சப்தம் மட்டுமே வந்தது.  ஆஸ்வால்தோ ஏதோ சொல்கிறான்.  வாக்கி டாக்கியில் சிக்னல் கிடைக்கவில்லை. அடக் கடவுளே!  சுமார் முப்பது முறையாவது இந்த மெஷினை சோதித்துப் பார்த்திருக்கிறோமே?  இப்போது என்ன ஆயிற்று? 

ரமோன் பட்டனை அழுத்தி, “ஒன் ஸீரோ ஒன், நீ பேசுவது கேட்கவே இல்லை, ஓவர்” என்றான்.   

மீண்டும் வாக்கி டாக்கியில் அதே கர்புர்.

“நீ உடனடியாக ஆஸ்வால்தோவிடம் போ.  புது பேட்டரிகளை எடுத்துக் கொண்டு போ.  சிக்னல் கொடுப்பதாக இருந்தால் ”த்ரீ ஸீரோ த்ரீ, த்ரீ ஸீரோ த்ரீ, ஓவர்” என்று சொல்.  நான் பதில் அனுப்புகிறேன்.

9.20க்கு சாந்த்தியாகோவிடமிருந்து “த்ரீ ஸீரோ த்ரீ, த்ரீ ஸீரோ த்ரீ, ஓவர்” என்ற குரல் வாக்கி டாக்கியிலிருந்து கேட்டது. 

ரமோனுக்கு இப்போதுதான் உயிரே வந்தது.  “த்ரீ ஸீரோ த்ரீ.  உன் குரல் தெளிவாகக் கேட்கிறது. அவ்ட்.”

”ஆஸ்வால்தோவைப் பார்த்தேன்.  பேட்டரி நன்றாகத்தான் வேலை செய்கிறது.  ஆனாலும் புதிய பேட்டரிகளை மாற்றினேன்.  ஒன்பதே முக்காலுக்கு அழைப்பான்.”

ஆர்மாந்தோ ட்ரக்கிலிருந்து வெளிப்பட்டான்.  அவன் கைகள் பசையாக இருந்தன.

“வண்டி எப்படி இருக்கிறது ஆர்மாந்தோ?”

“அதே பிரச்சினைதான்.  ஆனாலும் கொஞ்சம் உஷ்ணமாக்கி வைத்திருக்கிறேன்.  மணிக்கு ஒரு முறை உஷ்ணமாக்க வேண்டும் போலிருக்கிறது.”

சரியாக ஒன்பதே முக்காலுக்கு வாக்கி டாக்கியில் சப்தம் கேட்டது.  ”ஸீரோ த்ரீ, த்ரீ ஸீரோ…”

அப்போதும் குரல் தெளிவாக இல்லை.  அப்போதுதான் சாந்த்தியாகோவுக்குப் புரிந்தது.  பெட்டிக் கடையின் மேலே ஓடும் அதிக மின்னழுத்தக் கேபிள்கள்தான் இதற்குக் காரணம். 

”ஆஸ்வால்தோவிடம் விஷயத்தைச் சொல்.  இலக்கு வெளியே வந்தால் அவனையும் பெட்டிக் கடையை விட்டு வெளியே வந்து பேசச் சொல்.”  

ஒரு சோதனை முயற்சியும் செய்து பார்க்கப்பட்டது.  இப்போது குரல் தெளிவாக இருந்தது. 

ஒருவழியாக சிக்னல் பிரச்சினை தீர்ந்தது. 

இதற்கிடையில் ஒன்பதரை மணிக்கு கொரியன் சூப்பர் மார்க்கெட் சென்ற ஜூலியா எல்லோருக்கும் மதிய உணவுக்கான பொருட்களையும் கோக்கையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினாள்.  வழியில் சாந்த்தியாகோ பதற்றமாக இருப்பதைப் பார்த்து என்ன பிரச்சினையோ என்று குழம்பினாள். 

சம்பவம் முடிந்து விட்டால் ஜூலியாதான் மெஷின்கன்னோடு மூன்று பேருக்கும் சொமோஸாவின் கமாண்டோக்களிடமிருந்து பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.

சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வாட்ச்மேன் வந்தான்.  அவனிடம் இரண்டு வார வேலைக்கான பணத்தைக் கொடுத்த ஜூலியா, இனிமேல் உனக்கு இங்கே வேலை இல்லை என்று சொல்லியனுப்பினாள்.  (அந்த வாட்ச்மேன்தான் பிறகு ஜூலியா, ரமோன் இருவரது அங்க அடையாளங்களையும் போலீஸிடம் சொன்னவன்.)

ஆறு மணி வரை குழுவினர் காத்திருந்து விட்டுக் கலைந்தார்கள்.  ஆறு மணிக்கு மேல் தாக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதித்துக் கொண்டிருந்தார்கள்.  இருட்டில் அடையாளம் மாறலாம்.  எக்காரணத்தைக் கொண்டும் அப்பாவிகள் பாதிப்படையக் கூடாது என்பதில் கமாண்டோக்கள் கவனமாக இருந்தார்கள்.

ஆர்மாந்தோ அசுன்ஸியோனில் ஒரு சிறிய வீட்டை ஒரு வாரத்துக்கு வாடகைக்கு எடுத்தான்.  ஸ்த்ரோஸ்னர் சிட்டிக்குப் போய் சூஸானாவை அழைத்துக் கொண்டு வந்தான். 

அன்றைய தினம் மட்டும் ஆர்மாந்தோ ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் கார் ஓட்டியிருக்கிறான்.  பத்து மணி நேரத்துக்கும் மேல் கடும் பதற்றத்துடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறான்.  நள்ளிரவுக்கு மேல் படுத்தவன் குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்தான்.

செப்டம்பர் 16, 1980.  செவ்வாய்க் கிழமை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆழ்ந்த உறக்கம் கிடைத்த ஆர்மாந்தோ, ஒரு டாக்ஸியைப் பிடித்து, நான்கு பிளாக்குகள் முன்னாலேயே இறங்கி நடந்தான்.  சரியாக 7.40க்கு சம்பவ வீட்டை அடைந்தான்.  சூஸானா, ஜூலியா, ஆர்மாந்தோ, ஆஸ்வால்தோ, சாந்த்தியாகோ, ரமோன் – ஆறு பேருமே எந்த அடையாள அட்டையும் கைவசம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.  எல்லோருமே ஒவ்வொரு இடத்தில் பாஸ்போர்ட்டை ஒளித்து வைத்திருந்தார்கள்.  மாட்டினால் அடையாளம் தெரியக் கூடாது.  தப்பித்து விட்டால் விமான நிலையத்தில் தேவைப்படும். 

7.55க்கு சூஸானா இரண்டு சூட்கேஸ்களை காரில் வைத்து எடுத்துக் கொண்டு பொஸிஷன் ”ஏ”வுக்கு வந்தாள்.  அது ஷாப்பிங் செண்டரின் கார் பார்க்கிங் இடம்.  ஆர்மாந்தோவுக்காக அவள் அங்கே நாள் முழுவதும் காத்திருக்க முடியாது.  மதியம் ஒரு மணி வரை பார்க்கிங் ஏரியாவில் காத்திருக்கலாம்.  இல்லாவிட்டால் பொஸிஷன் பி சென்று மாலை ஆறு மணி வரை காத்திருப்பாள்.

சில சமயம் காரின் உள்ளே அமர்ந்திருந்தாள்.  சில சமயம் வெளியே வந்து நின்று கொண்டு பேப்பர் படித்தாள். 

ரமோன் ’வேலை’க்குச் சென்ற பிறகு ஜூலியா ஓட்டல் அறையிலேயே காத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் வாடகைக்கு எடுத்த கார் ஓட்டலின் அடித்தளத்தில் இருந்தது.  ஆனா எங்கோ தொலைதூரத்தில் ப்ரஸீலில் வானொலிச் செய்திகளை மணிக்கு ஒரு முறை கேட்டுக் கொண்டிருந்தாள். 

சரியாக காலை 8.15க்கு ஆஸ்வால்தோ பெட்டிக் கடைக்கு வெளியே வந்து தன் வாக்கி டாக்கியை எடுத்து பட்டனை அமுக்கி த்ரீ ஸீரோ த்ரீ, த்ரீ ஸீரோ த்ரீ, ஓவர் என்றான்.  வாக்கி டாக்கி பிரச்சினை நேற்றே சரி செய்யப்பட்டு விட்டது. 

ரமோன் பதில் சொன்னான்.  த்ரீ ஸீரோ த்ரீ.  உன் குரல் தெளிவாக இருக்கிறது.  ஓவர். 

ரமோன், சாந்த்தியாகோ, ஆர்மாந்தோ – மூவரும் தயார் நிலையில் ஆயுதங்களோடு ஆஸ்வால்தோவின் குரலுக்காகக்    காத்திருந்தார்கள்.  இரண்டாவது நாளாகக் கண்காணிப்பு தொடர்கிறது.  எல்லா ஏற்பாடுகளும் மிகச் சரியாக இருக்கின்றன.  அல்லது, அவர்கள் அப்படி நினைத்தார்கள்.

திடீரென்று மூவருடைய வாக்கி டாக்கியிலும் ஹலோ ஹலோ என்ற சத்தம் கேட்டது.  மூவரும் அலறி அடித்துக் கொண்டு பேச்சைக் கேட்டால், அது ஒரு விளம்பரம்.  இவர்களுடைய ஒலிபரப்பில் விளம்பர நிறுவன்ங்கள் புகுந்து விட்டன!  செவ்வாய்க் கிழமை அன்று மூன்று முறை இவர்களின் வாக்கி டாக்கியில் புகுந்து விட்டது விளம்பரம். 

செவ்வாய்க் கிழமையும் திங்கள் கிழமை போலவே காத்திருப்பிலேயே போனது.

”நாளை பார், சரியாக பத்திலிருந்து பன்னிரண்டு மணிக்குள் சம்பவம் நிகழும்” என்று ஆர்மாந்தோவிடம் சொன்னான் சாந்தியாகோ. 

ஆர்மாந்தோ இதை சூஸானாவிடம் சொல்ல, சூஸானா “எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது” என்றாள். 

அன்றைய தினம் அவர்கள் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை.  நாளையும் அதேபோல் ஆகி விடக் கூடாது என்றான் ஆர்மாந்தோ. 

சொன்னதோடு மறுநாள் மதியத்துக்கான ஆலிவ் ரோலும் வாங்கிக் கொண்டான். 

“ஆனால் நீ இதை நாளை மதியம் சாப்பிட வாய்ப்பு இல்லை.  ஏனென்றால், சம்பவம் பத்து மணி போல நடக்கும்.  எப்படி சாப்பிடுவது?” என்றாள் சூஸானா. 

எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்? புதன்கிழமை என்று பார்த்தால் ஒரே ஒரு புதன்கிழமைதான் சொமோஸா வெளியே போயிருக்கிறான்.  நாளையும் புதன்கிழமை என்பதால் வந்து விடுவானா, என்ன?

இல்லை, இதுவே திங்களாகவோ, செவ்வாயாகவோ இருந்தால் அவன் வெளியே சென்றிருக்க மாட்டான்.  ஏனென்றால், இம்மாதிரி ஆட்களுக்கு திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் ஹேங் ஓவரில் போய் விடும்.  இவர்களின் வாரக் கடைசி என்பது வியாழன் அன்று தொடங்குகிறது.  ஆக, புதன்கிழமைதான் வாரத்தின் நடுவில் இருக்கிறது.  நாளை அவன் நிச்சயம் வெளியே வருவான். 

ஆர்மாந்தோ: என் விக்கை மாட்டிக் கொண்டு சம்பவ வீட்டுக்கு வந்தேன்.  குளிர் கடுமையாக இருந்தது.  எல்லோரும் என்னை ஒரு பைத்தியத்தைப் பார்ப்பது போல் பார்த்தார்கள்.  விக்தான் காரணம். 

பாக்கெட்டில் இருந்த ஆலிவ் ரோலைப் பார்த்து விட்டு, “இதை இன்று நாம் சாப்பிட முடியாது” என்றான் ரமோன்.

ஆஸ்வால்தோ தொடர்கிறான்:

சொமோஸாவின் உயிர் அவன் படித்துக் கொண்டிருந்த பேப்பரினால் ஒருசில நொடிகள் தாமதமானது.  ஆமாம், அவன் அன்றைய தினம் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.  அவனா அல்லது வேறு யாராவதா என்று எப்படிக் கண்டு பிடிப்பது? 

பத்து மணி இருக்கும்.  வழக்கமாகக் கடைக்கு வரும் வாடிக்கையாளன் ஒருத்னோடு பேசிக் கொண்டிருந்தேன்.  எதிரே சொமோஸாவின் கார்.  காரின் லைசன்ஸ் நம்பரில் மாற்றமில்லை.   ஆனால் உள்ளே சொமோஸாவைப் பார்க்க முடியவில்லை.  ஒரு தடிமனான மனிதன் பின்புற இருக்கையில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறான்.  பேப்பருக்குப் பின்னே இருப்பவன்தான் சொமோஸாவா?  தெரியவில்லை. அவனுக்குப் பக்கத்தில் இன்னொருவன் இருக்கிறான்.  இன்னொரு குழப்பம் என்னவென்றால், சொமோஸா எப்போதும் டிரைவர் இருக்கைக்கு அருகில்தான் அமர்வான். 

என் கடைக்கு முப்பது அடி தூரத்தில் கார் வந்த போது பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் பேப்பரை சற்று இறக்கினான்.  ஆமாம், சொமோஸாதான் அவன்.  என்னிடம் பேசிக் கொண்டிருந்தவனிடம் நான் கொஞ்சம் அவசரமாக டாய்லட் போக வேண்டும் என்று சொல்லி விட்டு உள்ளே போய் ஒய்ட் ஒய்ட் ஒய்ட் என்று சிக்னல் கொடுத்தேன்.  அப்போதுதான் பார்த்தேன், அங்கே ஒருவன் ஒரு போஸ்டரை ஒட்டி அதன் மேல் வெள்ளை பெயிண்டை அடித்துக் கொண்டிருந்தான்.  நான் அவனைத்தான் சொல்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அவன் என்னை உற்று உற்றுப் பார்த்தான்.  என்னை அவன் பைத்தியம் என்று நினைத்திருக்கலாம்.  வாக்கி டாக்கி என் பாக்கெட்டுக்குள் இருந்தது.  மூன்றாவது முறையாக ஒய்ட் ஒய்ட் ஒய்ட் என்று செய்தி கொடுத்து விட்டு டாய்லட்டுக்குள் நுழைந்தேன்.  வெளியே வந்து துப்பாக்கிச் சத்தம் வெடிச் சத்தமெல்லாம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் நிசப்தமாக இருந்தது.  என் வாட்சைப் பார்த்தேன். 

காலை 10.05.  புதன்கிழமை.  செப்டம்பர் 17, 1980.   சொமோஸாவின் நீண்ட நாள் டிரைவரும் பாடிகார்டுமான Julio Cesar Gallardo அந்த வெண்ணிற பென்ஸ் காரை செலுத்த அதன் உள்ளே முன்னாள் சர்வாதிகாரியின் அருகில் அவனுடைய பொருளாதார ஆலோசகர் ஜோஸஃப் பெய்னித்தின் அமர்ந்திருந்தார்.  வட அமெரிக்கர். 

ஆர்மாந்தோ சொல்கிறான்: கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் கெரில்லாப் போராளியாகத்தான் இருக்க வேண்டும்.  நான் ட்ரக்குக்குள் சென்று அமர்ந்தேன்.  200 அடி தூரத்தில் இருந்தது பென்ஸ் கார்.  கார் என்னை இன்னும் நெருங்குவதற்காகக் காத்திருந்தேன்.

ரமோன்: நான் எங்கள் வீட்டுத் தோட்டத்தின் பக்கம் சென்றேன்.  கார் 200 அடி தூரத்தில் இருந்தது.  ஆர்மாந்தோ தன் ட்ரக்கை வைத்து ட்ராஃபிக்கையும் தடுக்க வேண்டும்.  பதின்மூன்று நொடிகளில் நாங்கள் அனைவரும் எங்களுடைய ’பொஸிஷ’னில் இருந்தாக வேண்டும்.  அதற்கு ஒரு நொடி முன்னால் கூட சாந்த்தியாகோவை பஸூக்காவோடு யாரும் பார்த்து விட்டால் காரியம் கெட்டு விடும்.  கார் நமக்குத் தோதான இடத்திற்கு வரும் அந்தக் கணத்தில்தான் சாந்த்தியாகோ பஸூக்காவை எடுக்க வேண்டும்.  அதற்கு ஆஸ்வால்தோவின் சிக்னல் வர வேண்டும்.  எல்லாம் கச்சிதமாக நொடி பிசகாமல் நடக்க வேண்டும்.

ஆர்மாந்தோ: என்னால் ரமோனைப் பார்க்க முடிந்தது.  சாந்த்தியாகோவுக்கு சிக்னல் கொடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.  அதற்குப் பிறகு நான் ரமோனைப் பார்க்கவில்லை. 

ஒருவேளை சொமோஸாவின் கார் குண்டு துளைக்காத காராக இருந்தால் உடனடியாக சாந்த்தியாகோ பஸூக்காவை இயக்க வேண்டியதுதான்.  பென்ஸ் எங்கள் வீட்டுத் தோட்டத்தைக் கடந்ததும் ரமோன் சாந்த்தியாகோவுக்கு சிக்னல் கொடுத்தான்.  ஆர்மாந்தோ சொமோஸாவின் காருக்கு முன்னே நின்று கொண்டிருந்த காரை மறித்தான்.  சாந்த்தியாகோ ஒரு காலை மடித்து அமர்ந்து பஸூக்காவுடன் போராடிக் கொண்டிருந்தான்.  உடனே ரமோன் தன்னுடைய எம்-16 ஐ எடுத்து தோள் வரை உயர்த்திப் பிடித்து குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தான்.   

என்ன நடந்தது என்றால், சாந்த்தியாகோவின் முதல் குண்டு கிளம்பவே இல்லை.  பஸூக்காவில் அப்படி ஆகி விட்டால் பஸூக்காவை இயக்குபவர் முப்பது நொடிகள் காத்திருந்து இயங்காத ப்ரொஜக்டைலை நீக்கி விட்டுப் புதிய ஒன்றைப் போட வேண்டும்.  ஆனால் சாந்த்தியாகோ இரண்டு நிமிடம் கூடக் காத்திருக்கவில்லை.  காலை மடக்கி அமர்ந்து பழுதான ப்ரொஜக்டைலை எடுத்து விட்டு இன்னொன்றை மாட்டிக் குறி பார்த்தான்.  ஆனால் விசையை அழுத்தவில்லை.  ஏனென்றால், அதற்குள்ளேயே பென்ஸ் காரின் டிரைவர் செத்திருந்தான்.  ரமோனின் ஒவ்வொரு புல்லட்டும் காரைத் துளைத்துக் கொண்டிருந்தது.  குண்டு துளைக்காத கார் இல்லை அது.  ரமோன் பென்ஸுக்கு வெகு அருகில் இருந்தான்.  நல்ல வேளை.  சாந்த்தியாகோ பஸூக்காவை இயக்கியிருந்தால் ரமோனும் இறந்திருப்பான். 

ரமோன்: நான் முதலில் டிரைவரைத்தான் குறி பார்த்தேன்.  பிறகு சொமோஸா.  ஆனால் சொமோஸாவின் கமாண்டோக்களைச் சுட முயன்ற போது என்னுடைய எம்-16இல் குண்டுகள் காலியாகி விட்டன.  அப்போதுதான் சாந்த்தியாகோவிடம் ஓடிப் போய் பஸூக்காவை இயக்கு என்றேன்.  விளைவு பயங்கரமாக இருந்தது. 

ஆர்மாந்தோ: சொமோஸாவின் கார் சுக்குநூறாகத் தெறித்துச் சிதறியதைப் பார்த்தேன்.  யாரும் தெருவுக்குள் நுழையாமல் நான் எங்கள் வீட்டின் முன்னே நின்று வாகனங்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன். 

இப்போது என்னுடைய ஒரே குறி என்னவென்றால், நாங்கள் தப்பிக்க வேண்டிய சாலையை யாரும் மறித்து விடக் கூடாது.  அதற்குள் கிளம்பியாக வேண்டும்.  ஒரு வீட்டின் தூணில் ஒளிந்து கொண்டு சொமோஸாவின் கமாண்டோக்கள் ரமோனையும் சாந்த்தியாகோவையும் பார்த்து சுட்டுக் கொண்டிருந்தார்கள்.  சொமோஸாவின் கார் தாக்கப்பட்டதுமே பின்னால் வந்து கொண்டிருந்த சொமோஸாவின் கமாண்டோக்கள் தங்கள் காரிலிருந்து இறங்கி சுவருக்குப் பின்னே பதுங்கி விட்டார்கள்.  ரமோன் தன்னுடைய சைலன்ஸர் பொருத்திய மெஷின் கன் மூலம் அவர்களை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தான்.

என்னுடைய FAL மூலம் கமாண்டோக்களை சுட்டேன்.  ஒருத்தன் விழுந்தான். நீ இங்கே ஓடி வா, நான் உன்னைக் கவர் பண்ணுகிறேன் என்று சாந்த்தியாகோவிடம் கத்தினேன்.  கமாண்டோக்களில் இன்னொருவன் சுடப் பார்த்தான்.  அவனை நோக்கிச் சுட்டேன்.  அவனும் விழுந்தான்.  விரைந்து வந்து கொண்டிருந்த ட்ரக்கினுள் தாவி ஏறினான் ரமோன்.  ஆனால் என்ன துரதிர்ஷ்டம்!  ட்ரக் அதற்கு மேல் நகரவில்லை.  சுத்தமாகப் படுத்து விட்டது.  அப்போது அங்கே வந்து கொண்டிருந்த ஒரு மிட்ஸுபிஷி காரை நிறுத்தி அதில் ஏறினோம்.  துப்பாக்கிகளுடன் எங்களைப் பார்த்ததுமே டிரைவர் இருக்கையில் இருந்தவன் கைகளை மேலே உயர்த்தியபடி ஓடி விட்டான்.

நான் (ஆர்மாந்தோ), ரமோன், சாந்த்தியாகோ மூவரும் காருக்குள் எங்களை நுழைத்துக் கொண்டோம்.  அதற்கு எங்களுக்கு இரண்டு நொடிகளே ஆனது.