கடவுள் வந்திருக்கிறார்


என் நண்பரொருவரின்

வாட்ஸப் dpயில்

கடவுளின் நிழற்படம்

மரபணுத் தொடர்ச்சியாய் வந்த கடவுள்

கடவுள் என்றாலே மரபணுத் தொடர்ச்சிதானே

மனிதர் யாவரும் தம்மை விடக்

கடவுளை நேசிக்கும்

காரணம் இதுதான்

கடவுள் என் மரபணுத் தொடர்ச்சி

என் ஸ்தூலத்தின் வாரிசு

நண்பர் பலர் இடதுசாரிகள் கம்யூனிஸ்டுகள்

அவரவர் கடவுளுக்கு அவரவர் வைத்த பெயர்

கார்ல் மார்க்ஸ் லெனின் மா சே துங்  

ஒருத்தர் எல்லாவற்றையும் தாண்டினார்

புரட்சி நாயகன் சே குவேரா

சே குவேரா போதாதா பட்டமும் வேண்டுமா என்றேன்

பட்டமல்ல அது பெயர் என்றார் தீப்பொறி தெறிக்க

எழுத்தாளர்களும் சும்மா இல்லை

அஷ்வத்தாமா நிவ்ரித்தி த்யூத்தி இத்யாதி

தத்துவப் பேராசிரியனொருவன்

என் கடவுளுக்கு ஹைடேக்கரும் நாகார்ச்சுனாவும்

கற்பிக்கலாமென இருந்தேன்

இப்போது கடவுளைக் காண்பதே

சாத்தியமற்று விட்டதென அழுதான்

விவாகரத்தாம்

எல்லாம் என்ன?

வாரிசு வாரிசாக

எனக்குப் பிறகும் இந்த கிரகத்தில்

எனதிருப்பைத் தக்க வைக்கும்

முடிவற்ற சங்கிலி

அந்த சங்கிலித் தொடரை அறுத்தெறிந்த

என்னிடமும் வந்தாரொரு கடவுள்

அவருக்கும் எனக்கும் மரபணுத் தொடர்ச்சி இல்லை

அவர் யாரோ நான் யாரோ

என் குலம் என் மொழி என் இனம் வேறு

அவர் குலம் அவர் மொழி அவர் இனம் வேறு

மரபணுத் தொடர்ச்சியே மானுட விடுதலையின்

தடையென நினைப்பதால்

எனக்குக் கடவுள்களைப் பிடிக்காது

அந்தத் தலைப்பில் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறேன்

அப்போதுதான் எனைத் தேடி வந்தார் இந்த

அந்நியமான கடவுள்

பார்க்க ஒரு மலரைப் போல் இருந்தார்

உலகின் மிகச் சிறந்த மலரின் மணம் கொண்டிருந்தார்

கடவுளாயிற்றே, அது கூட இல்லையென்றால் எப்படி?

கைகால் விரலெல்லாம் பச்சரிசி

வாய் பவளம்

கடவுளின் ஆன்மா ஒளிர்ந்து கொண்டிருந்த கண்களில்

பிரபஞ்ச அதிசயமே ஒருசேரத் திரண்டிருக்கக் கண்டேன்

அதிசயத்திலும் அதிசயம் என்னவென்றால்,

எனைக் காணுந்தோறும்

சிரிக்கிறார் கடவுள்

யாரோ கிச்சுக்கிச்சு மூட்டுவது போல் சிரிக்கிறார்

குதியாட்டம் போட்டுச் சிரிக்கிறார்

ஹஹ்ஹாஹ்ஹா என்று சிரிக்கிறார்

கையையும் காலையும் உதைத்துக் கொண்டே சிரிக்கிறார்

எத்தனை நேரம் சிரிப்பது

எத்தனை நேரம் உதைப்பது

வாய் நோகாதா

கைகால் வலிக்காதா

சிரித்துக் கொண்டே இருந்தார்

உதைத்துக் கொண்டே இருந்தார்

கடவுள் என்ன லூசா

இப்படி சிரித்துக்கொண்டும் உதைத்துக் கொண்டும்

இருக்கிறாரே என நினைத்தேன்

இல்லை, என்னைப் பார்த்தால் மட்டுமே இப்படிச் சிரிக்கிறார்

யாரோ கிச்சுக்கிச்சு மூட்டுவது போல் குதியாட்டம் போட்டுச் சிரிக்கிறார்

மற்றவர் எதிரில் கம்மென்றிருக்கிறார்

மொட்ஸார்ட் ஒன்பது வயதில் சிம்ஃபனி செய்தார்

அம்மாதிரி

ஏதோ முன்ஜென்ம வாசனையோ

தெரியவில்லை

சிரித்துக் கொண்டே என்னென்னவோ

என்னோடு பேசவும் செய்தார்

கடவுள் இல்லையா, மானுட பாஷை அல்ல

வேறேதோ கடவுள் பாஷை

எனக்குப் புரியவில்லை

சிரித்துக் கொண்டே பேசுகிறாரே

நல்லவிதமாகத்தான் இருக்க வேண்டும்

கடவுளின் கையருகே என் கைகளைக் கொண்டு போனால்

என் விரலைப் பிடித்துக் கொண்டு எழுந்து கொள்ள முயற்சித்தார்

கடவுளின் சில விசேஷத் தன்மைகளை கவனித்தேன்

புட்டிப் பால் குடிக்கும் போது சல்யூட் அடிப்பது போல்

இரண்டு கைகளையும் திருப்பி வைத்துக் கண்களை மூடிக் கொண்டார்

எப்போது குடித்தாலும் கைகளால் கண் மூட மறப்பதில்லை

ஒருநாள் கடவுளைத் தூக்கிக் கொண்டு போய்

என் நூலகத்தைக் காண்பித்தேன்

மடியில் அமர்ந்தபடி ஒன்றரை மணி நேரம் புத்தகங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்

சிரிக்கவில்லை பேசவில்லை ஆடவில்லை அசையவில்லை

ஒன்றரை மணி நேரமும் புத்தகங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்

கடவுள் என்றால்

எப்போதும் வீறிட்டு அழ வேண்டும்

இரவில் கண் விழித்துப் பகலில் துயில் கொள்ள வேண்டும்

இவர் என்னவோ நம்மைப் போலவே

இரவில் துயில் கொண்டு பகலில் ஆடுகிறார்

அழுவதும் இல்லை

மலமூத்திரம் போனால் முணுக்கென்று முணகுவார்

அதோடு சரி வேறு

அழுகையில்லை

இப்படி ஒரு கடவுளை நான் கண்டதில்லை கேட்டதில்லை

கடவுளை நானொரு நிழற்படம் எடுத்துக் கொள்கிறேன் என்றேன்

கூடாதென்றாள் பத்தினி

ஒரு வருட காலத்துக்கு நிழற்படம் தடையாம்

அதனாலென்ன

விதியென்றிருந்தால் விதிமீறலும் உண்டுதானே

ரகசியமாக எடுத்ததை

யாரிடமாவது காண்பிக்க வேண்டும்

ஒரே ஒரு ஆள்தான் மனதில் வந்தது

இந்தக் கதையெல்லாம் சொல்லி

அனுப்பவா எனக் கேட்டேன்

வேண்டாம் என்றார்