த அவ்ட்ஸைடர் – 27

முதலில் எங்கள் திட்டம் எப்படி இருந்தது என்றால் மீதமுள்ள ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போய் பதுக்கி விடலாம் என்பதுதான்.  ஆனால் இந்தச் சிறிய மிட்ஸுபிஷியில் அதை வைக்க இடம் இல்லை.

இப்போதைய முதல் வேலை, சாந்த்தியாகோவை அசுன்ஸியோனில் விட வேண்டும்.  அங்கே சாந்த்தியாகோவின் கார் இருக்கிறது.  ஆஸ்வால்தோவை பராகுவாயிலிருந்து வெளியேற்றுவதுதான் சாந்த்தியாகோவின் முதல் பணி.

ஆஸ்வால்தோ கடையை மூடினான்.  இடுகாட்டுக்குப் போய் சாந்த்தியாகோவைப் பார்த்து செய்திகளைக் கேட்டுக் கொண்டான்.  வெளியேறும் திட்டத்தில்தான் மாற்றம் என்றான் சாந்த்தியாகோ.

இருவரும் Ita Enramada என்ற துறைமுக நகருக்கு வந்து சேர்ந்தார்கள்.  அசுன்ஸியோனிலிருந்து அந்த ஊர் 37 கி.மீ.  அதற்குள் சொமோஸா கொலைச் செய்தி வெளிவந்து விட்டது.  ஆறு அர்ஜெண்டீனியர்கள்தான் கொலையாளிகள் என்றது வானொலி.  அதற்குள் கண்டு பிடித்து விட்டார்கள்.

சாந்த்தியாகோவை நான் (ஆஸ்வால்தோ) என்னுடன் கூப்பிட்டேன்.  ஆனால் அவன் மறுத்து விட்டான்.  நீண்ட நாள் திட்டத்தை அப்படி ஒரு கணத்தில் மாற்றி விட முடியாது என்று கூறி பத்திரமாகப் போய் வா என்றான்.

இல்லை, நான் ஏற்கனவே பத்திரமாகி விட்டேன்.  நீதான் பத்திரமாக இருக்க வேண்டும் என்றேன்.

***

ஆர்மாந்தோ முன்பு திட்டமிட்டபடியே ரமோனை ஜூலியாவிடம் கொண்டு போய் விட்டான். 

ரமோனின் கையில் இருந்த காயத்துக்கு மருந்து போட்டுக் கொண்டே ஜூலியா கேட்டாள்: சொமோஸா இறந்தது உறுதிதானா?

”என்னுடைய எம்-16 தன்னுடைய வேலையைச் செய்திருக்காவிட்டாலும் சாந்த்தியாகோவின் பஸூக்கா நிச்சயம் செய்து விட்டது.  சொமோஸாவின் பென்ஸ் தூள் தூளாகச் சிதறியதை நான் பார்த்தேன்” என்றான் ரமோன். 

ஓட்டல் பில்லைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் பால் அருந்தி விட்டு ஜூலியாவும் ரமோனும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

அதேபோல் சூஸானாவும் ஆர்மாந்தோவும் திட்டமிட்டபடியே தப்பினார்கள். 

ஆஸ்வால்தோ படகின் மூலம் அர்ஜெண்டினா எல்லைக்கு வந்து விட்டான்.  ஆனால் எல்லையில் பராகுவாய் போலீஸ் எல்லோரையும் திரும்பச் சொல்லி விட்டது.  முன்னாள் அதிபர் கொல்லப்பட்டதால் பராகுவாயின் எல்லையையே மூடி விட்டார் அதிபர் ஸ்த்ரோஸ்னர்.  நல்லவேளையாக, ஸ்த்ரோஸ்னரின் அந்த உத்தரவு போலீஸின் கைக்குக் கிடைக்கும் முன்பே ஆஸ்வால்தோ பராகுவாய் எல்லையைத் தாண்டி அர்ஜெண்டினாவில் நின்று கொண்டிருந்தான்.  அவன் படகுதான் கடைசிப் படகு.

ஆஸ்வால்தோ தொடர்கிறான்:

அர்ஜெண்டினா கஸ்டம்ஸ் அதிகாரி என் பையைத் திறந்து பார்த்தான்.  அதில் டேப் ரெக்கார்டரும் ஒரு குடையும் இருந்தது.  இதற்கு சுங்க வரி கட்ட வேண்டும் என்றான் அதிகாரி.  எவ்வளவு என்றேன்.  இரு, பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு எதையெதையோ குடைந்தான்.  ரொம்ப நேரம் தேடினான்.  என் பொறுமை எல்லை மீறிப் போன போது நான் அதிகாரியிடம் ”நீங்களே இந்தக் குடையை வைத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.  அதற்குள் அவன் அதற்கான சுங்கத் தொகையைக் கண்டுபிடித்திருந்தான்.  கொடுத்து விட்டு வெளியே வந்தேன்.  மதியம் ஒரு மணி. ஃபோர்மோஸாவுக்கு பஸ்ஸைப் பிடித்தேன்.

ரிவூ தெ ஜனைரோவில் ஆனா சாந்த்தியாகோவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.  சொமோஸா கொல்லப்பட்ட அன்று ஒரு ப்ரஸீல் வானொலிச் செய்தியில் இப்படிச் சொன்னார்கள்: ”சர்வாதிகாரி சொமொஸா கொல்லப்படவில்லை; இந்த கிரகத்திலிருந்து நீக்கப்பட்டார்.”

சொமோஸா கொல்லப்பட்ட செய்தியால் நிகாராகுவாவே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது.  மக்கள் அனைவரும் தெருக்களில் வந்து நடனம் ஆடினார்கள்.

சொமோஸா கொல்லப்பட்ட பிறகு தங்களுக்கு நடந்ததை ஆர்மாந்தோ சொல்கிறான்:

ஸ்த்ரோஸ்னரின் அடுத்த நடவடிக்கை இத்தனை குரூரமாக இருக்கும் என்று சூஸானாவும் நானும் எதிர்பார்க்கவே இல்லை.  பராகுவாய் எல்லை முழுவதுமாக அடைக்கப்பட்டது.  அதே சமயம் மனாகுவாவில் (நிகாராகுவா தலைநகர்) மக்களின் கொண்டாட்டத்தைப் பற்றி அறிந்து நானும் சூஸானாவும் உணர்ச்சிவசப்பட்டு இரண்டு மணி நேரம் அழுதோம்.  அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.  நாங்கள் ஸ்த்ரோஸ்னரால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை.  ஒரு முழு தேசத்துக்கே மகிழ்ச்சியை அளித்திருக்கிறோம்.  ஒரு பெரிய வரலாற்றுக் கடமையை ஆற்றியிருக்கிறோம்.   இதற்காக எங்கள் உயிரையும் தரலாம். 

சூஸானா:

ஆர்மாந்தோவும் நானும் என்கார்னாஸியோனுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம்.  நாங்கள் அர்ஜெண்டீனியர்கள்.  எங்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.  அசுன்ஸியோனிலிருந்து என்கார்னாஸியோன் 280 கி.மீ. தூரம்.

ஐம்பதாவது கிலோமீட்டரில் எங்களை மறித்தது போலீஸ்.  எங்கேயிருந்து வருகிறீர்கள், என்ன செய்கிறீர்கள்.  வழக்கமான கேள்விகள்.  ”நாங்கள் கயிற்று ஊஞ்சல்களை பராகுவாயிலிருந்து அர்ஜெண்டினா கொண்டு சென்று விற்று வருகிறோம்” என்றேன்.  அது பராகுவாயில் மிகவும் சகஜமான விஷயம்.  நான் அர்ஜெண்டினாவில் 1978 வரை இருந்தேன்.  ஒரு நாளில் நான்கு முறை போலீஸால் தடுக்கப்படுவேன்.  பராகுவாயில் எத்தனையோ தேவலாம்.  இன்னொரு ஐம்பது கிலோமீட்டர் சென்றதும் அங்கே ஒரு போலீஸ் சோதனை. இப்படியாக என்கார்னாஸியோன் வந்து சேர்ந்தோம்.  விமான நிலையங்களிலும் எந்த விமானமும் வெளியே செல்லவோ உள்ளே வரவோ அனுமதிக்கப்படவில்லை.  அதனால் அங்கேயே பக்கத்தில் ஒரு கிராமத்துக்குச் சென்று தங்கினோம். 

அந்த வீட்டின் உரிமையாளர்கள் பராகுவாய்காரர்கள்.  நாங்கள் என்கார்னாஸியோனிலிருந்து வருவதாகச் சொன்னோம்.  அர்ஜெண்டீனிய எல்லை மூடப்பட்டு விட்டதால் திரும்பவும் திறக்கும் வரை தங்கிக் கொள்வதாகச் சொன்னோம்.  அவர்களுக்கு மகிழ்ச்சிதான்.  எங்களால் கொஞ்சம் காசு வருகிறதல்லவா?

***

ரமோனும் ஜூலியாவும் தப்பிச் சென்று கொண்டிருக்கும் போது போலீஸ் தடுத்தது.

“ஏன் எங்களைத் தடுக்கிறீர்கள்?” என்று சற்று கோபத்துடன் கேட்டான் ரமோன்.

”அதிபரைக் கொன்று விட்டார்கள்.  அதனால்தான்…”

“என்னது…?  அதிபரையா?  அதிபரையா?”

“இல்லை, இல்லை, நிகாராகுவா அதிபரை…”

அவர்கள் ரமோனின் காரை ஏனோதானோவென்று தேடி விட்டுப் போகச் சொல்லி விட்டார்கள். 

ஜூலியாவுக்கும் மற்ற கமாண்டோ குழுவினருக்கும் என்ன பயம் என்றால், ரமோனின் புகைப்படத்தை வெளியிட்டு விட்டால் ரமோன் சட்டப்படி பராகுவாயை விட்டு வெளியேற முடியாது.  கள்ளத் தோணி மூலம்தான் அக்கரைக்குப் போக முடியும்.  அந்த யோசனையும் அவர்கள் கைவசம் இருந்தது. 

தொடர்ந்து பல தினங்கள் அர்ஜெண்டினாவுக்கும் பராகுவாய்க்குமான எல்லையை மூடி விட்டார் ஸ்த்ரோஸ்னர்.  ஒரு அதிபருக்கு வெறி பிடித்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அங்கேயிருந்த நிலைமை.  ஆயிரக்கணக்கான பேர் குழந்தை குட்டிகளுடன் உண்ண உணவின்றி அகதிகளைய் போல் பராகுவாயிலும் அர்ஜெண்டினாவிலும் மாட்டிக் கொண்டார்கள். அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக சில்லறைப் பொருட்களை வாங்கி எல்லை தாண்டி விற்பவர்கள் அவர்கள்.  நதிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் எங்கேயும் போக வழியின்றி கரையிலேயே கிடந்தார்கள். 

ஆனா சொல்கிறாள்: 

நான் வானொலி, டெலிவிஷன் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  எல்லை மூடப்பட்டு விட்டது.  தினசரியில் சாந்த்தியாகோவின் பெயர் போட்டு அவனோடு இன்னொரு பெண்ணும் இருந்தாள் என்று இருந்தது.  ஜூலியாதான்.  உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்குத் தடையில்லை என்பதால் நான் அசுன்ஸியோன் கிளம்பிப் போனேன்.  செப்டம்பர் 18.  வியாழக்கிழமை.  மாலை 3 மணி.   சாந்த்தியாகோவை சந்திப்பதென்று திட்டம்.  குறிப்பிட்ட இடங்களில் மாலை ஏழு மணி வரை கூட சாந்த்தியாகோ வரவில்லை.  ஓட்டலுக்குத் திரும்பி செய்திகளைக் கேட்க ஆரம்பித்தேன். 

விஷயம் கை மீறிப் போய் விட்ட்து.  சம்பவம் நடந்து பத்தே மணி நேரத்தில் சாந்த்தியாகோவின் பெயரைக் கண்டு பிடித்து விட்டார்கள்.  அடுத்த நாளே சாந்த்தியாகோவின் புகைப்படத்தை வெளியிட்டு விட்டார்கள்.  அடுத்த நாளுக்காகப் பொறுமையின்றி காத்திருந்தேன்.  சாந்த்தியாகோவுக்கு இப்படி ஒரு ஆபத்து வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.  போலீஸ் வெளியிட்ட புகைப்படத்தில் சாந்த்தியாகோவுக்கு மீசை மட்டும் இருந்த்து.  ஆனால் சாந்த்தியாகோ தாடி வைத்திருந்தான்.  அவ்வளவுதான் வித்தியாசம்.    

சொமோஸா வீட்டிலிருந்து ஒரு தொலைக்காட்சி சேனல் இயங்கிக் கொண்டிருந்தது.  அதில் சாந்தியாகோவின் கூட இருந்த பெண்ணைப் பிடித்து விட்டதாகச் சொன்னார்கள்.   பொய்ச் செய்திதான்.

இரவு பத்து மணிக்கு சாந்த்தியாகோ தங்கியிருந்த வீட்டில் போலீஸுக்கும் சாந்த்தியாகோவுக்கும் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது.  கொஞ்ச நேரத்தில் அவர்கள் சாந்த்தியாகோவின் உடலை தொலைக்காட்சியில் காண்பித்தார்கள்.  அதில் சாந்த்தியாகோ தங்கியிருந்த வீடு, நான் அவனைச் சந்தித்து மாற்றிக் கொடுக்க வேண்டிய பாஸ்போர்ட், 4000 டாலர் எல்லாம் காண்பிக்கப்பட்டது.  இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு பல மணி நேரம் நடந்திருப்பதாகத் தெரிந்தது. 

போலீஸுக்குத் துப்பு கிடைத்திருக்கக் கூடிய இரண்டு விஷயங்கள்: ஒன்று, சம்பவம் நடத்தத் திட்டமிடப்பட்ட வீடு (இக்லேஷியஸ் வருவதாக ஜோடிக்கப்பட்ட கதை).  இன்னொன்று, கைவிடப்பட்ட ட்ரக். 

அந்த வீட்டின் சொந்தக்காரியைப் பிடித்து ஹூலியோ இக்லேஷியஸ் கதையையும் அந்தக் கதையைச் சொன்ன ஜோடி பற்றியும் நன்றாகத் தெரிந்து கொண்டது போலீஸ்.  ரமோன் பற்றி வாட்ச்மேன் சொன்னான்.  ஆஸ்வால்தோ பற்றி ட்ரக்கைக் கொடுத்தவன் சொன்னான். செப்டம்பர் பதினெட்டாம் தேதியே கமாண்டோக்களைப் பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு மில்லியன் கணக்கில் பரிசு என்று அறிவிக்கப்பட்டது.  ஆனா, சாந்த்தியாகோ ஜோடிக்கு வீடு கொடுத்த உரிமையாளர் போலீஸில் இருவரைப் பற்றிய அங்க அடையாளங்களைச் சொன்னார். 

அர்ஜெண்டினா போய் விட்டால் எங்களுக்கு மக்களின் ஆதரவு உண்டு.  போலீஸ் கூட எங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.  ஆனால் பராகுவாயில் நாங்கள் 50 லட்சம் போலீஸ்காரர்களை சமாளிக்க வேண்டியிருந்தது.  (50 லட்சம் என்பது பராகுவாயின் மக்கள் தொகை!)

போலீஸ் தேடி வந்த நேரத்தில் சாந்த்தியாகோ ஏன் வீட்டில் இருந்தான் என்பதை எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.  எங்கள் திட்டப்படி அந்த நேரத்தில் அவன் அந்த வீட்டில் இருந்திருக்கக் கூடாது.  ஆனால் வெளியில் போலீஸ் கெடுபிடி இருந்ததால் மறுநாள் போய்க் கொள்ளலாம் என்று அவன் வீட்டில் இருந்திருக்க வேண்டும். 

ஆர்மாந்தோ – சூஸானா, ரமோன் – ஜூலியா நால்வராலும் சாந்த்தியாகோவின் இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் துக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. 

ஆனாதான் இப்போது ஆபத்தில் இருப்பவள்.  தனியாக இருப்பது ஒரு காரணம்.  சாந்த்தியாகோவுடன் இருந்தது ஆனாதான் என்பதும் தெரிந்து விட்டது இன்னொரு காரணம்.  ஆனா இப்போது அவளுடைய உண்மையான பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய முடியாது.  அந்தப் பாஸ்போர்ட் எண் போலீஸுக்குக் கிடைத்து விட்டது. 

ஆனால் ஆனா தங்கியிருந்த ஓட்டலில் பிரச்சினை இல்லை.  ஏனென்றால், அவள் சம்பவம் நடந்த மறுநாள்தான் அங்கே வந்திருந்தாள்.  ஆறு தினங்கள் கடந்து ஒரு அறிவிப்பு வந்தது.  எல்லா வெளிநாட்டுக்காரர்களும் தங்கள் அடையாள அட்டையுடன் விசாரணை அதிகாரியிடம் சென்று ஒரு பிங்க் அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

ஆனாவையும் இன்னும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுக்காரர்களையும் (பெரும்பாலும் உருகுவாய், அர்ஜெண்டினாக்காரர்கள்) போலீஸ் பிடித்துக் கொண்டது.  பல மணி நேரம் எல்லோரும் காத்திருந்தார்கள்.  சாந்த்தியாகோவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 4000 டாலரில் இருந்த சீரியல் நம்பர் வரிசையில் ஆனாவிடம் 200 டாலர் இருந்தது.  அதையும் மறைத்து வைத்துக் கொண்டாள் ஆனா.  போலீஸ்கார்ர்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். அவர்களும்தான் என்ன செய்வார்கள்? 

அங்கிருந்து ஒருவாறு வெளியேறி எல்லோரும் என்கார்னாஸியோன் புறப்பட்டோம்.  ஆனால் அங்கே செல்வதற்கு முன்பே ஒரு நண்பர் வீட்டில் தங்க வேண்டியாயிற்று.  என்கார்னாஸியோனில் எல்லா வெளிநாட்டுக்காரர்களையும் கைது செய்கிறார்களாம்.  சில தினங்கள் சென்று ஆர்மாந்தோ ஒரு விவசாயியைப் போல் – அவர்கள் தங்கியது ஒரு விவசாயியின் வீடு – உடையணிந்து என்கார்னாஸியோன் போய் வந்து நிலைமை இப்போது தேவலாம் என்று சொன்னான். 

என்கார்னாஸியோன் சென்றோம்.  பாஸ்போர்ட்டை மட்டும் ஒளித்துக் கொண்டோம்.  சூட்கேஸ்களைத் தூக்கி எறிந்து விட்டோம்.  முடிந்த அளவுக்கு மோட்டார் சாதன உதிரிப் பொருட்களையும், ஸ்வெட்டர் தைக்கும் கம்பளி நூலையும் வாங்கிக் கொண்டோம்.  இரண்டும்தான் அர்ஜெண்டினாவில் விலை அதிகம்.  அன்றாட விற்பனையாளர்களாக கள்ளத் தோணியில் அர்ஜெண்டினா சென்றடைந்தோம்.

ஆர்மாந்தோ சொல்கிறான்:

நானும் சூஸானாவும் நதியின் அர்ஜெண்டினா பக்கம் வந்ததும் போலீஸில் அனுமதிச் சீட்டு கேட்டான்.  நான் சொன்னேன், இதோ பாருங்கள், காலையில் நான் இந்தப் பொருட்களையெல்லாம் வாங்குவதற்காக பராகுவாய் சென்ற போது யாரும் எந்த சீட்டும் எங்களுக்குக் கொடுக்கவில்லை.  பராகுவாயிலும் கொடுக்கவில்லை.  இப்போது அனுமதிச் சீட்டைக் கொடு என்றால் எப்படிக் கொடுப்பது?  நாங்கள் இப்படி தினமும் சென்று வருபவர்கள். 

ஒருமணி நேரம் எங்களை உட்கார வைத்து விட்டுப் பிறகு எங்கள் இருவருக்கும் அனுமதிச் சீட்டு கொடுத்து அனுப்பினார்கள். 

ஒரு பஸ்ஸைப் பிடித்து பொஸாதாஸ் (Posadas) போனோம்.  இனி இங்கே அர்ஜெண்டினாவில் இருந்தால் மாட்டிக் கொள்வோம்.  காலையிலேயே ரியோ போய் விட வேண்டியதுதான்.  ப்ரஸீலுக்கு வீசா தேவையில்லை.  இரவு முழுவதும் கண்டதையும் குடித்தோம்.  தூக்கம் வரவில்லை.  போதையும் வரவில்லை.  காலையில் விமானத்தைப் பிடித்து ரியோ போய்ச் சேர்ந்தோம். 

இப்படியே எல்லோரும் ரியோ போய்ச் சேர்ந்து அங்கிருந்து ஸ்பெய்ன் கிளம்பினார்கள்.  ஒன்றாக அல்ல.  தனித்தனியாக.  அப்படித் தனித்தனியாக்க் கிளம்பியும் விமான நிலையத்தில் சூஸானா ஆஸ்வால்தோவைத் தற்செயலாகப் பார்த்தாள்.  ஆஸ்வால்தோ ஒரு பேப்பர் கடையில் நின்று கொண்டிருந்தான்.  அவன் அருகே போய் யாரும் கவனிக்காத விதத்தில் “டேய் பேப்பர் பாய், இங்கேயும் பேப்பர்தானா?” என்றாள். 

மாத்ரித் போய்ச் சேரும் வரை அவர்களின் கண்கள் கூட சந்தித்துக் கொள்ளவில்லை.  விமானத்திலும் தனித்தனியாகத்தான் அமர்ந்திருந்தார்கள்.

மாத்ரித் விமான நிலையத்துக்கு வெளியேதான் அவர்கள் பேசிக் கொண்டார்கள்.  இனி அவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனா சொன்னாள்:

சொமோஸா தண்டிக்கப்பட வேண்டியவன்.  தண்டிக்கப்பட்டான்.  நாங்கள் யாரும் எங்கள் அடையாளத்தை மக்கள் அறிந்து கொள்வதை விரும்பவில்லை.  ரமோனின் அடையாளம் மட்டும் தெரிய வந்ததன் காரணம், எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி ஒரு பத்திரிகையாளர் ரமோனின் பெயரைக் குறிப்பிட்டு எழுதி விட்டார். 

நாங்கள் அடையாளமற்று இருக்கவே விரும்பினோம்.  இந்தப் புரட்சிகர செயலின் மூலம் நாங்கள் புகழடைய விரும்பவில்லை.  ஐரோப்பியர்களும் வட அமெரிக்கர்களும் ஓடும் விமானத்திலிருந்து பாராச்சூட்டுடன் குதிக்கிறார்கள்.  அவர்களுக்கு வாழ்க்கையில் சாகசம் தேவைப்படுகிறது.  சில சமயம் பாராச்சூட் விரியாமல் அவர்கள் இறந்தும் விடுகிறார்கள்.

ஆனால் லத்தீன் அமெரிக்காவில் அன்றாட வாழ்க்கையே ஒரு சாகசம்தான்.  ஒரு வேளை உணவு கிடைப்பதே இங்கே சாகசம்தான்.  ஒவ்வொரு நாளும் கழிவதே ஒரு சாகசம்தான்.

நாங்களும் இதை சாகசத்துக்காகச் செய்யவில்லை.  அந்த மனித விரோதியைக் கொல்வது எங்களுடைய சமூகக் கடமை.  நாங்களும் மற்றவர்களைப் போன்ற வாழ்க்கையை வாழ முடிந்தால் நாங்கள் இப்போது இருப்பதை விட அதிக மகிழ்ச்சியாகத்தான் இருப்போம்.  உதாரணமாக, நான் என் குழந்தைகளைப் பார்த்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.  இது ஒன்றும் விளையாட்டு அல்ல.  இது ஒரு மகத்தான தியாகம். 

எதேச்சாதிகாரம் எங்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் வரை, ஒரு மிகச் சிறிய எண்ணிக்கையிலான செல்வந்தர்கள் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தைப் பட்டினி போட்டுக் கொண்டிருக்கும் வரை, அவர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் வரை, நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக இருந்தோம்.  நாங்கள் இந்த மனித விரோதிகளை எதிர்த்துப் போராடியே ஆக வேண்டும்.  இந்த வரலாற்றுச் சிக்கலை நாங்கள் தீர்த்தே ஆக வேண்டும்.  நித்தம் நித்தம் மரணத்தை எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் லத்தீன் அமெரிக்க மக்களிலிருந்து நாங்கள் ஒன்றும் வித்தியாசமானவர்கள் அல்ல. 

அல்சர் காரணமாக எனக்கு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த நிலையில்தான் நான் பராகுவாயிலிருந்து வெளியேறினேன்.  சரியாவதற்கு மூன்று மாதங்கள் ஆயிற்று.  இதெல்லாம் ஒன்றும் ரொமான்ஸ் அல்ல.  இப்படி வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை.  அழுகிப் புழுபுழுத்துப் போயிருக்கும் சமூகத்தை மாற்றியாக வேண்டும் என்று நாங்கள் உறுதி பூண்டிருந்தோம்.  ஆயிரக்கணக்கான லத்தீன் அமெரிக்கர்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும்போது கோடீஸ்வர இளைஞர்கள் ஜாலி பண்ணிக் கொண்டிருப்பதை எங்களால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.  இதற்கு நாங்கள் முடிவு கட்டியே ஆக வேண்டும். இதற்காக நாங்கள் எங்களுடைய உயிரையும் தருவதற்குச் சித்தமாக இருக்கிறோம்.  இதை நாங்கள் விரும்பிச் செய்யவில்லை.  வேறு வழியில்லாமல் செய்கிறோம்.  கொலை செய்வதை நாங்கள் வெறுக்கிறோம்.  ஆனால் ஆயிரக்கணக்கான கொலைகளைத் தடுத்தாக வேண்டியிருக்கிறது.  அதற்காக இந்த ஒரு கொலையைச் செய்தோம்.  நீங்கள் போர்க்களங்களில் மடிந்து போகும் போர் வீர்ர்கள் பற்றிப் பேசுகிறீர்கள்.  ஆனால் பட்டினியால் சாகும் லத்தீன் அமெரிக்கக் குழந்தைகளைப் பற்றி யார் பேசுவது? 

அப்படிப்பட்ட சேரிப் பகுதிகளை நான் (சாரு) பெரூவில் பார்த்தேன்.  அது பற்றி நாளை எழுதுகிறேன்…