கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்

1978இலிருந்து 1988 வரை நான் தில்லியில் இருந்த காலகட்டத்தை என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்ல்லாம்.  அச்சமயத்தில் திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியிலிருந்து எம்.டி. முத்துக்குமாரசாமி என்ற முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு ஒரு கதை கேட்டு  எனக்குக் கடிதம் எழுதினார். கல்லூரி மாணவர்களே நடத்திய பத்திரிகை அது.  எம்.டி.எம். என்று அழைக்கப்பட்ட அவர் அந்த மாணவர் இதழிலேயே ஸில்வியா என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதினார். மிஷல் ஃபூக்கோ, ஜாக் தெரிதா போன்ற ஃப்ரெஞ்ச் அமைப்பியல்வாதிகளை நன்கு கற்றுத் தேர்ந்தவராகவும் இருந்தார்.  அந்த மாணவர் பத்திரிகையில்தான் நான் என்னுடைய முதல் நான்–லீனியர் கதைகளை எழுத ஆரம்பித்தேன்.  அப்போது எனக்கு அந்தக் கதைகள் நான்–லீனியர் கதைகள் என்றோ, உலகிலேயே அப்படிப்பட்ட கதைகளை யாரும் எழுதியதில்லை என்றோ தெரிந்திருக்கவில்லை.  பிரம்மராஜன்தான் அவருடைய மீட்சி என்ற பத்திரிகையில் என்னுடைய நான்-லீனியர் கதைகளை சரியான முறையில் அறிமுகப்படுத்தி, நான்–லீனியர் கதைகள் என்ற பெயரையும் இட்டு வெளியிடத் தொடங்கினார்.

நான்–லீனியர் என்ற இந்த எழுத்துப் பாணி வாசிப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் இதை இலக்கியப் பிரதியாக மாற்றுவது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒன்று.  ஏனென்றால், இக்கதைகளுக்கான கச்சாப் பொருளை நான் குப்பையிலிருந்து எடுக்கிறேன்.  ரொலாந் பார்த் (Roland Barthes) இதை Literature of Trash என்று குறிப்பிடுகிறார்.   ஏற்கனவே தமிழ்ச் சமூக வெளியில் ஏராளமான குப்பை மலிந்து கிடக்கிறது.  இங்கே சினிமாவுக்கு எழுதுபவரும் ஜனரஞ்சகப் பொழுதுபோக்குக் குப்பைகளை உற்பத்தி செய்பவர்களும்தான் எழுத்தாளராகக் கருதப்படுகிறார்கள்.   அப்படிப்பட்ட குப்பைக் கிடங்கிலிருந்து குப்பையைப் பொறுக்கி அதை எப்படி கலையாக மாற்றுவது?  அந்த மாயாஜாலத்தைத்தான் என்னுடைய நான்–லீனியர் கதைகள் செய்தன.  கூடவே ஸில்வியாவும் இதே மாதிரியான கதைகளை எழுதினார்.  ஒரு கட்டத்தில் ஸில்வியாவும் நானும் கதைகளிலேயே விவாதித்துக் கொண்டோம்.  என் கதைக்கு அவர் பதில் கதை எழுதினார்.  அதற்கு நான் பதில் எழுதினேன்.  என் கதைகளை அப்போது முனியாண்டி என்ற புதிய புனைப்பெயரில் எழுதினேன்.   அப்போதெல்லாம் முனியாண்டி விலாஸ் பிரியாணி மிகவும் பிரபலம்.  அந்தப் பெயரையே என் புனைப்பெயராகக் கொண்டேன்.  (கதை மட்டும் அல்ல, புனைப்பெயரைக் கூட ஜனரஞ்சக் குப்பையிலிருந்து எடுத்துக் கொண்டேன்.)  என்னையும் பிரம்மராஜனையும் ஸில்வியாவையும் தவிர யாருக்கும் முனியாண்டி யார் என்று தெரியாது.  ஒரு இலக்கியக் கருத்தரங்கில் ஞானக்கூத்தன் முனியாண்டியின் எழுத்தைப் புகழ்ந்து பேசியதை நான் முதல் வரிசையில் அமர்ந்தபடி கேட்டேன்.  முனியாண்டி என்ற பெயரில் எழுதுபவர் என்றே அவர் குறிப்பிட்டார்.  முனியாண்டி யார் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

பிறகு நானும் ஸில்வியாவும் எழுதிய நான்–லீனியர் கதைகளைத் தொகுத்து வெளியிட விரும்பினார் நாகார்ச்சுனன்.  அப்போது நாகார்ச்சுனனும் இதே பாணியில் ஒரு கதை எழுதி தொகுப்பில் சேர்த்தார்.  கோணங்கியும் ஒரு கதை கொடுத்தார்.  ஏற்கனவே சொன்னேன், நான்–லீனியர் எழுத்து என்பது ஒரு இலக்கியப் பாணி அல்ல.  அது ஒரு வாழ்க்கை முறை.  அதனால் என்னுடைய கதைகளும் ஸில்வியாவின் கதைகளும் மட்டுமே கலையாக மாறின.

1990இல் இந்தப் புத்தகத்தை அச்சுக்குக் கொண்டு வந்தது ஒரு தனிக் கதை.  அந்தக் காலத்தில் தட்டச்சு செய்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள்.  என்னுடைய கதைகளை பெண்கள் தட்டச்சு செய்ய மறுத்து விட்டார்கள்.  1990இன் பெண்கள்.  அதனால் நாகார்ச்சுனனே தன்னுடைய நண்பரின் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரமான இரவில் அமர்ந்து தட்டச்சு செய்தார்.

இது பற்றி ஒரு வாசகர் வட்டச் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தேன்.  இன்னமும் தமிழில் வெளிவர முடியாத நூல்கள் இருக்கின்றன என்பது என் செய்தி.  உதாரணமாக, ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்கு நான் எழுதிய மதிப்புரை இருபது பக்கம் வரும்.  எல்லா பத்திரிகைகளும் நிராகரித்து விட்டன.  அப்போது நான் தில்லியில் இருந்தேன்.  கரோல் பாகில்தான் தமிழர்கள் அதிகம்.  அவர்கள் திருமண அழைப்பிதழ் அடிக்கும் ஒரு அச்சகத்தில்தான் அந்த இருபது பக்க நூலை அடித்து வெளியிட்டேன்.  அந்த அச்சகம் பார்ப்பதற்கு காயலாங் கடை போல் இருக்கும்.  அங்கே அச்சடிக்கப்பட்ட ஒரே நூல் அடியேனுடையதாகத்தான் இருக்க வேண்டும்.

அப்படியான நூல்கள் இன்னமும் இருக்கின்றன.  இருபது பக்க புத்தகத்தை இன்றைய தினம் எந்தப் பதிப்பகம் வெளியிடும்?  அதேபோல் வியாபார ரீதியாக ஓடாத புத்தகங்களும் உள்ளன.  உதாரணமாக, எம்.என். ராய் புத்தகங்களின் மொழிபெயர்ப்பு.  தடை செய்யப்பட்ட புத்தகங்களை வெளியிட்டது ரீடர்ஸ் இண்டர்நேஷனல்.  தடை செய்வதற்குக் கூட சுரணை உணர்வு தேவை.  அது கூட இல்லாத நம் நாட்டில் தடையெல்லாம் செய்ய மாட்டார்கள்.  கண்டு கொள்ளாமல் போய் விடுவார்கள்.  அப்படிப்பட்ட புத்தகங்களையெல்லாம் யார் வெளியிடுவது என்ற பேச்சு வந்தது.  அந்தப் பேச்சுதான் ஆட்டோ நேரட்டிவ் பதிப்பகமாக நிகழ்ந்தது.

ஒரு சாதாரண அரட்டைக்குச் செயல் வடிவம் கொடுத்த வாசகர் வட்ட நண்பர்கள் வினித், ராஜா வெங்கடேஷ், தாரணி, செல்வகுமார், கார்த்திக் நாகேந்திரன், கமலேஷ், ஸ்ரீதர், மனோகரன் மாசாணம், ஒளி முருகவேள், குரு (லண்டன்) ஆகிய நண்பர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்…

சாரு நிவேதிதா

சாந்தோம்

5.12.2022.

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற சிறுகதைத் தொகுப்பில் மிஷல் ஃபூக்கோவின் ஒரு கட்டுரையும் இருக்கிறது. அந்தத் தொகுப்பு அதற்குப் பிறகு பிரசுரமே காணவில்லை. இப்போது பல ஆண்டுகள் சென்று புத்தகமாக வருகிறது.