த அவ்ட்ஸைடர் – 32

அவ்ட்ஸைடர் படத்தைப் பார்க்காமல் விட்டு விட்ட என் அன்பு நண்பருக்கு…

முப்பத்தொன்றாவது அத்தியாயம் எத்தனை வலியுடன் எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கொள்கிறீர்களா?  அவ்ட்ஸைடர் படத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்து வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்த நீங்கள் எனக்கு இன்று எழுதிய கடிதத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அரங்கில் குழுமியிருந்த 800 பேரில் என் வாழ்க்கையைச் சொல்லும் அந்த ஆவணப் படத்தை யார் அத்தியாவசியமாகப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு ஆளைச் சொல்லுங்கள் என்றால் நான் உங்களைத்தான் சொல்லுவேன்.  அதேபோல் அந்த அரங்கில் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தீவிரமாக நினைத்தவர்களில் முதன்மையானவரும் நீங்கள்தான் என்பதும் எனக்குத் தெரியும்.  அதற்காக மட்டுமே நீங்கள் வெகுதூரம் பயணம் செய்து வந்திருந்தீர்கள்.  என்ன தவறு நிகழ்ந்து விட்டது என்றால், விழா அழைப்பிதழில் ஆவணப்படம் திரையிடல் கடைசியாக வந்திருக்கிறது.  அதாவது, இரண்டாவது அழைப்பிதழில்.  அதனால் நீங்கள் படம் கடைசியாகத் திரையிடப்படுவதாக நினைத்து விட்டீர்கள்.  அது உங்கள் தவறு இல்லை.  இதை நான் உங்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு என் வசை கட்டுரையை எழுதியிருக்கலாம் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தால் அந்தக் கட்டுரையே எழுதப்பட்டிருக்காது என்பது உங்கள் கருத்து.

முதலில் அது வசை கட்டுரை அல்ல.  அலி என்ன கொலைகாரனா, தெருவில் இறங்கி இரண்டு அப்பாவி ஆட்களைக் கொன்று போடுவதற்கு?  அவனால் ஃபாஸ்பைண்டர் செய்ததை ஏற்க முடியவில்லை.  தன் பிறந்த நாள் அன்று அலியிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஃபாஸ்பைண்டர் பாட்டுக்குக் கிளம்பி பாரிஸ் போய் விட்டான்.  அதற்கு அலி என்ன செய்ய வேண்டும்?  ஃபாஸ்பைண்டரைக் கொல்ல வேண்டும்.  அது சாத்தியம் இல்லை.  தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டும்.  முடியவில்லை.  கோபம்.  கடும் கோபம்.  அடக்க முடியாத சீற்றம்.  தெருவில் இறங்கி அப்பாவி மக்களை வெட்டினான்.  பிறகு சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான்.

நண்பர் முக்கால் மணி நேரப் படத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்தார் என்றதும் என் மனநிலை அப்படித்தான் ஆகியிருந்தது.   அவ்வளவுதான்.  விளக்கங்கள் எல்லாம் அப்புறம்தான்.  விளக்கங்களே கிடையாது.  ஏனென்றால், படம் எப்போது என்று என்னைக் கேட்டிருக்கலாம்.  ஏனென்றால், இந்தப் படத்தை இனிமேல் பார்க்க முடியாது.   இனி வரும் படம் வேறு படம். 

சரி, விட்டு விடுங்கள்.  பழசை மறந்து விடுவோம். 

அது எப்படி விடுவது என்கிறீர்கள்.

இதோ பாருங்கள்.  நீங்கள் செய்ததற்கு மிகச் சரியான காரணத்தைச் சொல்லி விட்டீர்கள்.  அதே மாதிரியான தர்க்கரீதியான காரணம் ஃபாஸ்பைண்டருக்கும் இருந்திருக்கும்.  ஆனால் அவனுடைய பிறந்த நாள் அன்று அலியிடம் சொல்லாமல் அவன் பாரிஸ் போய் விட்டான்.  அலி இரண்டு கொலைகளைச் செய்து விட்டு சிறைக்குப் போய் மன உளைச்சல் தாளாமல் தற்கொலை செய்து கொண்டான்.  நீங்கள் வராதது என்னைத் தற்கொலைக்குத் தூண்டியது.  சீலே வைனும் அர்ஜெண்டினா வெற்றியுமே என் உயிரைக் காப்பாற்றியது.  அவ்வளவுதான்.  மட்டுமல்லாமல் அங்கே வந்திருந்த எண்ணூறு பேருக்கும் ஆவணப்படம் ஐந்து மணிக்கு என்று தெரிந்திருக்கிறது.  ஆனால் உங்களுக்கு மட்டுமே தெரியவில்லை.  அழைப்பிதழ்தான் காரணம் என்பது சரி.  ஆனால் அதே அழைப்பிதழ் காரணம் மற்றவர்களுக்கும் பொருந்தும்தானே? 

நான் உங்களை நம்பாமல் இல்லை.  நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள்.  ஆனால் என்ன பிரச்சினை என்றால், நீங்கள் என்னிடமிருந்தும் என் எழுத்து உலகத்திடமிருந்தும் அந்நியமாகி விட்டீர்கள்.  அதுதான் முப்பத்தொன்றாவது அத்தியாயத்துக்குக் காரணம்.  அந்நியமாகி விட்டதால்தான் ஆவணப் பட நேரம் உங்களுக்குத் தெரியவில்லை.  அன்றொரு நாள் நான் போகன் சங்கர் என்னைப் பற்றி எழுதிய கட்டுரையைப் படித்தீர்களா என்று கேட்டேன்.  இல்லை என்றீர்கள்.  என் எழுத்து வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட ஆக முக்கியமான கட்டுரை என்றேன்.  மறுநாளும் கேட்டேன்.  உங்களுடைய நேர நெருக்கடி பற்றிச் சொன்னீர்கள்.  போகனின் கட்டுரையைப் படிக்க ஐந்து நிமிடம் ஆகும்.  படிக்க வேண்டும் என்பது என் நிபந்தனை அல்ல.  எந்த அளவுக்கு என் எழுத்து உலகிலிருந்து அந்நியமாக இருக்கிறீர்கள் என்பதற்காக இந்த விஷயத்தைக் குறிப்பிடுகிறேன்.  இப்போது நீங்கள் அந்தக் கட்டுரையைப் படித்துக் கூட இருக்கலாம்.  ஆனால் நான் அது பற்றி உங்களோடு உரையாடக் கூடிய காலம் கடந்து விட்டது இல்லையா?  என் வாசகர் வட்ட நண்பர்கள் யாருடனும் இப்படி எனக்கு நடந்தது இல்லை.  என் எழுத்தை நெருக்கமாகப் பின் தொடர்ந்து வருபவர்களோடு மட்டுமே என்னால் இயல்பாக உரையாட முடிகிறது.  அவ்வளவுதான். 

எனவே நான் எழுதியதில் எனக்கு வருத்தம் இல்லை.  நான் எழுதியது தவறு என்றால் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்பவன் என்று உங்களுக்குத் தெரியும்.  இந்த விஷயத்தில் என் மீது தவறு இல்லை.  ஆனால் உங்கள் மீதும் தவறு இல்லை.  பிரச்சினை, நீங்கள் என்னிடமிருந்து தொலைதூரம் சென்று விட்டீர்கள் என்பதுதான்.  இல்லாவிட்டால், ஆவணப்படத்தைப் பார்த்திருப்பீர்கள்.  ஏனென்றால், அங்கே குழுமியிருந்த எண்ணூறு பேருக்குமே ஆவணப்படம்தான் முதலில் திரையிடப்படும் என்பது தெரிந்தே இருந்தது.  அது தெரியாத ஒரே ஆள் நீங்கள் மட்டுமாகவே இருந்திருக்கிறீர்கள்.

மட்டுமல்லாமல், அந்த ஆவணப்படம் என் வாழ்வு முழுவதையும் முக்கால் மணி நேரத்தில் பேசுகிறது.  எப்படி என் நேரம் பத்து பூனைகளின் மலத்தை அள்ளுவதிலும் மூத்திரத்தைச் சுத்தப் படுத்துவதிலும் போகிறது என்பதைக் காண்பிக்கிறது.  சேரி என்று சொல்லப்படுகின்றதை விடவும் மோசமான இடத்திலிருந்து எப்படி வந்தேன், தர்ஹாவில் எப்படிப் படித்தேன், நான் வளர்ந்த வீடு எப்படி இருந்தது, தாய்லாந்து பப்களில் நான் எப்படிக் கொண்டாடப்பட்டேன் – என்னோடு ஆடியது பாலியல் தொழிலாளிகள் அல்ல, அங்கே வந்திருந்த சாதாரண பெண்கள் – இப்படி நூற்றுக்கணக்கான விஷயங்களைப் பேசுகிறது த அவ்ட்ஸைடர் படம்.   

மறந்து விடுங்கள் இதை.  ஃபெப்ருவரியில் இதே அவ்ட்ஸைடர் ஆவணப்படம் இரண்டு மணி நேரப் படமாக மீண்டும் திரையிடப்படும்.  இடையில் நிறைய நாட்கள் இருக்கின்றன.  நிறுத்தி நிதானமாகத் தொகுப்பு வேலைகள் நடக்கும்.  ஃபெப்ருவரியில் பார்த்து விடுங்கள்.