ஆண்டாளும் கொஞ்சம் வெங்காயமும்…

மைலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவன் அரங்கில் தினந்தோறும் காலை ஏழு மணியிலிருந்து எட்டரை வரை திருப்பாவை பிரசங்கம் நடந்து வருகிறது. டிசம்பர் பதினெட்டிலிருந்து இன்று வரை பதினெட்டு பாசுரங்கள் பிரசங்கம் முடிந்திருக்கிறது. ஜனவரி முதல் தேதி வரை இந்தப் பிரசங்கம் நடக்கும்.

கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார்தான் பிரசங்கிக்கிறார். அற்புதமான பிரசங்கம். சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் அவர் ஒரு ஞானக்கடல் என்று தோன்றுகிறது. பிரசங்கம் முடிந்ததும் சிற்றுண்டி வேறு தருகிறார்கள். செவி, வயிறு இரண்டுக்கான உணவும் இலவசம்.

ஆராவமுதாச்சாரியாரின் ஞானம் எனக்குப் பேருவகை அளித்தது. அதோடு கூட அவரது பிராமணத் தமிழ். கேட்கக் கேட்க இனிமை. அந்த அளவு பிராமணத் தமிழ் பேச இன்று ஆள் இல்லை. அநியாயமாக பிராமணத் தமிழ் எழுத்திலும் பேச்சிலும் அழிந்து போவது பற்றி மிகவும் வருத்தப்படுகிறேன். ஐநூறு பேர் கேட்க வேண்டிய சபையில் அம்பதிலிருந்து நூறு பேர்தான் கேட்கிறோம். வயிற்றெரிச்சலாக இருந்தது. நேற்று முழுவதும் பெரியவருக்கு உடல் நலம் சரியில்லையாம். வெறும் தேன் கலந்த வெந்நீர்தான் ஆகாரம். தினமும் காலையில் ஆறரைக்கு ஆஜராகி விடுகிறார். (வயது எண்பத்தைந்து) நான் ஆறே முக்காலுக்குப் போகும்போது அவர் மட்டுமே அமர்ந்திருக்கிறார். மச்சி, கலாய்ப்பது போன்ற இன்றைய செந்தமிழெல்லாம் தெரிந்திருக்கிறது. இது எனக்கு ஒரு அற்புதமான அனுபவம். தமிழின் சீர்மையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதில் அய்யங்கார் சமூகம்தான் முன்னணியில் நிற்பதாகத் தோன்றுகிறது.

தினமும் காலையில் ஏழு மணிக்கு வந்து இந்தப் பேரின்பத்தை அள்ளிச் செல்பவர்களில் முக்கால்வாசி அய்யங்கார்கள் என்று தெரிகிறது. அய்யர்கள் கூட கம்மிதான். அபிராமணர் ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருக்கலாம்.

சிற்றுண்டியின் போதுதான் இன்று ஒரு cultural hegemonyயைப் பார்த்தேன். சிற்றுண்டி தரும் பொறுப்பாளரிடம் இரண்டு பேர் வெங்காயம் இல்லாமல் சமைக்கச் சொல்லும்படி அறிவுறுத்தினார்கள். இதுபோன்ற விஷயங்களை நான் நாற்பது ஆண்டுக் காலமாக எதிர்த்து எழுதி வருகிறேன். குடிக்காதே என்று சொல்வது எத்தகைய ஃபாஸிஸமோ அதை ஒத்ததுதான் எல்லோரும் சாப்பிடும் இடத்தில் வெங்காயம் போடாதீர்கள் என்று வேண்டுகோள் கொடுப்பதும் என்று நினைக்கிறேன். உங்களுடைய உணவுப் பழக்கத்தை ஏன் அடுத்தவர் மீது திணிக்கிறீர்கள்? அதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இது என்ன ஜெயின் கோவிலா? ஜெயின் கோவில் என்றால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அல்லது, இது என்ன பிராமணருக்கு மட்டுமான பிரசங்கமா? எல்லோருக்கும் பொதுவானதுதானே? ஹிந்து மதம் என்பது பூண்டு வெங்காயம் சாப்பிடாதவர்களுக்குத்தானா? இந்த விஷயத்தை சிற்றுண்டிப் பொறுப்பாளரிடம் சொன்னவர் அ-பிராமணர் என்றே நினைக்கிறேன். ஆனாலும் வெங்காயம் இல்லாமல் சாப்பிடுவது பிராமணர் வழக்கம். ஹிந்து மதத்துக்கு என்று தனியாக மதக் கட்டுப்பாடுகள் இல்லை. மாட்டுக் கறி உண்பவனும் இங்கே ஹிந்து, மாட்டை வணங்குபவனும் இங்கே ஹிந்து. சொல்லப்போனால் புத்தர் – அசோகர் காலத்தில் பிராமண மதத்தில் (அப்போதெல்லாம் ஹிந்து என்ற பெயர் இல்லை) வேள்வி என்ற பெயரில் எல்லாவித பிராணிகளையும் அக்னியில் போட்டார்கள். அந்த ஒரே காரணத்தால்தான் பௌத்தம் அரசர்களிடையே பிரபலம் ஆனது. இதையெல்லாம் நான் மூல நூல்களைப் படித்து விட்டே எழுதுகிறேன். ஆதி சங்கரர்தான் இதற்கு ஒரு முடிவு கட்டினார்.

நான் வரலாற்றுக்கெல்லாம் போக விரும்பவில்லை. என்னுடைய ஒரே ஒரு எளிமையான கேள்வி: நீங்கள் சாப்பிடும் உணவு முறையை ஏன் எல்லோரிடத்திலும் திணிக்கிறீர்கள்? இதேதான் மற்ற எல்லா விஷயங்களிலும் நடக்கிறது. குடிப் பழக்கம் இல்லாதவர்கள் அதை மற்றவர் மீது திணிப்பதும் இதே ஃபாஸிஸம்தான். நான் குடிப்பதில்லை. எனவே நீயும் குடிக்கக் கூடாது. நான் வெங்காயம் சாப்பிட மாட்டேன். நீயும் வெங்காயம் சாப்பிடக் கூடாது.

வெங்காயத்திலும் பூண்டிலும் காமத்தைத் தூண்டக் கூடிய வஸ்துக்கள் உள்ளன. அதனால்தான் நம் முன்னோர் அதைத் தடை செய்தனர். இந்தக் காலத்தில் நாம் சாப்பிடும் வண்டி வண்டியான அலோபதி மருந்துகள் நம்மை நபும்ஸகனாக்கும் தன்மை கொண்டவை. இந்த நிலையில் பூண்டும் வெங்காயமும் நாம் சாப்பிட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் சிறுகச் சிறுக ஹிந்து மதமே அழிந்து போகும். பாருங்கள், urimax D என்ற மருந்து சாப்பிடுவதால் நான் முழுமையாக ஆண் தன்மையை இழந்து விட்டேன். இந்த மருந்தை உட்கொண்டால் impotency நிச்சயம் என்று அந்த மருந்திலேயே கொட்டை எழுத்தில் எழுதி இருக்கிறது. சிகரெட்டில் எழுதியிருக்கும் அல்லவா, இதைப் புகைத்தால் புற்றுநோய் வரும் என்று, அப்படி. இந்த நிலையில் 4000 ஆண்டுகளுக்கு முன் கீதையில் சொல்லியிருக்கும் உணவுப் பழக்கத்தை இப்போதும் பின்பற்ற வேண்டுமா? சரி, பின்பற்றுங்கள். புகார் இல்லை. அதைப் பிறர் மீதும் திணிக்க வேண்டுமா?

கர்மாவின் காரணமாக, நான் இந்த மானுடக் கூட்டத்தில் பிறந்து விட்டாலும் கூட இவர்களின் காரியங்களில் குறுக்கிடுவதில்லை என்பதால் இந்த வெங்காயப் பிரச்சினை நடந்து கொண்டிருந்த போது வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்போதும் சொல்கிறேன், நான் சொல்வது தவறு என்று தோன்றினால் எனக்கு உடனே எழுதுங்கள், அல்லது, பேசுங்கள். நாளையே இந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு வெங்காயம் சாப்பிடவே கூடாது என்று எழுதுவேன். ஒன்றே ஒன்று, நீங்கள் என் மனதை மாற்ற வேண்டும். அந்த அளவுக்கு உங்கள் கருத்து வலுவாக இருக்க வேண்டும். என் பக்கத்தைச் சொல்லி விட்டேன். இனி நீங்கள்…