அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நாவலுக்கு வந்த முதல் எதிர்மறை விமர்சனம்

நேற்று புத்தக விழாவில் ராம்ஜியும் சீனியும் அன்பு நாவலில் வரும் ஒரு சம்பவம் பற்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது அந்தப் பக்கமாக வந்த டார்ச்சர் கோவிந்தன் அந்த சம்பவத்தைக் கேட்டு, புரியாமல் இது என்ன என்று கேட்டார்.  உடனே சீனி, “இது அன்பு நாவலில் வருகிறது, நீங்கள் இன்னும் படிக்கவில்லையா?” என்று கேட்டார்.  உடனே டார்ச்சர், “படிக்க ஆரம்பிச்சேன்,  கொஞ்சத்திலயே செம கடுப்பாயிடுச்சு,  படிக்கிறதை நிறுத்திட்டேன்” என்றார். 

அப்பாடா, என் ஒரு வாரத்திய சந்தேகத்துக்கு பதில் கிடைத்து விட்ட்து என்று மகிழ்ச்சி அடைந்தேன்.  நாவலை முடித்து டார்ச்சருக்கும் பிடிஎஃப்பை அனுப்பி வைத்தேன்.  வழக்கம் போல் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.  படித்தாரா படிக்கவில்லையா என்று நான் கேட்கவில்லை.  அப்படிக் கேட்பது என் வழக்கமில்லை.  ஆனால் படித்தாரா இல்லையா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாகத்தான் இருந்தேன்.  ஆனால் ஆர்வத்தை வெளியே காண்பித்துக் கொள்வதில்லை.  நேற்று பதில் கிடைத்து விட்டது. 

ஆகவே மக்களே, இதைப் படிக்கக் கூடாத ஆசாமிகள் படித்தால் என்ன ஆகும் என்பதற்கு நேற்றைய பதில் ஒரு முன்னறிவிப்பு.  ஒரு நண்பர் ஏற்கனவே சொன்னார், நிறைய எதிர்ப்பு வரும் என்று. 

திடீரென்று ஒரு மூன்று நாட்களாக இனிப்பில் ஈ மொய்ப்பது போல் எனக்கு ஒரு நினைப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.  அன்பு நாவலை கமல்ஹாசன் படித்தால் என்ன நினைப்பார்?  அவருக்கும் இந்த நாவலில் சித்தரிக்கப்படும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை.  ஆனால் அவர் என்னைப் போல் empathy என்ற வலையில் சிக்கியிருந்தால் இதே வாழ்க்கையை வேறு பரிணாமங்களில் அவரும் வாழ நேர்ந்திருக்கும்.  தப்பினார். 

சீனி சொன்னார், வலையை நான் பற்களால் கிழித்துப் போட்டிருப்பேன் என்று.  நான் பூ என்று ஊதினாலே வலை பறந்து விடும். இருந்தாலும் அப்படிச் செய்யாததற்கு Empathy மட்டுமே காரணம்.