இமயாவின் கவிதை பற்றி…

இமயாவுக்கு ஒரு கடிதம் என்ற பதிவில் இமயாவின் கவிதை காணவில்லை என்பதைக் கூட ஸ்ரீராம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் மருத்துவமனையில் பணியில் இருக்கும் ஒருவர். மற்ற யாருமே சுட்டிக் காட்டாதது வருத்தத்தை அளிக்கிறது. இமயாவின் கவிதை கீழே:

இந்தக் கவிதையைப் படித்ததும் இதில் தெரியும் உணர்வு அலைகள் என்னை சில்வியா ப்ளாத்தின் ஞாபகத்துக்கு இட்டுச் சென்றது. ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமிக்கு எப்படி சில்வியா ப்ளாத்தின் angst வர முடியும் என்று யோசித்தேன். கவிதையை என் சிநேகிதிக்கு அனுப்பினேன். பார்த்தால் அவளும் அதே வார்த்தைகளைச் சொன்னாள். இன்னொரு கவிஞரையும் சேர்த்துச் சொன்னாள். எமிலி டிக்கின்ஸன்.

இமயா இவர்கள் இருவரையும் படித்திருக்கிறாளா என்று கேட்க வேண்டும். ஆனால் இப்போதைய சிறுவர் சிறுமியர் மீது எனக்கு ஆச்சரியமே வருவதில்லை. எக்ஸைல் நாவலை ஒரு பதினெட்டு வயது ஆங்கிலோ இந்தியக் குமரிதான் மொழிபெயர்த்தாள். அவளிடம் இதை மொழிபெயர்க்க நீ ஜார்ஜ் பத்தாய் எல்லாம் படித்திருக்க வேண்டுமே என்றேன். அவளோ பத்தாம் வகுப்பில் இருக்கும்போதே மார்க்கி தெ ஸாத், பத்தாய் இருவரையும் முடித்து விட்டேன் என்றாள். வெறும் பேச்சு அல்ல. இருவரையும் குறித்து விலாவாரியாகப் பேசினாள். அதனால் இமயா ஸில்வியா ப்ளாத்தைப் படித்திருக்கிறேன் என்று சொன்னால் ஆச்சரியமடைய மாட்டேன்.

மரபணு மீது நான் கொண்டிருக்கும் தீரா நம்பிக்கை மேலும் வலுவடைகிறது.