அன்புத் தம்பி பெருமாளுக்கு,
நான் உன்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு பதிலுக்கு நீ என்னைத் திட்டி எழுதியிருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். அதைப் படித்து நேர விரயம் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் அதில் நீ சொல்லியிருந்த ஒரே ஒரு விஷயம் பற்றி உனக்கு ஒரு பால பாடம் எடுக்கலாம் என்றே இதை எழுதுகிறேன். அதில் செல்வதற்கு முன்னால் இன்னொன்று. நீ நல்லவன். இன்றைய உலகில் நல்லவர்கள் அரிதாக இருப்பதால் உன்னை எனக்குப் பிடிக்கும். அதனால்தான் உன்னை இலக்கியச் சந்திப்புகளில் பார்க்கும் போது உன்னிடம் ஓடி வந்து இனிமையுடன் பேசுகிறேன், நீ உலகப் புகழ் பெற்றவன் என்பதால் அல்ல என்பதைப் புரிந்து கொள். நான் ஒரு introvert. எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் நானாகப் போய்ப் பேச மாட்டேன். அந்த ஒரு காரணத்தினால்தான் நான் சினிமாவுக்கு வசனம் எழுத முடியவில்லை. அதனால்தான் வாசகர்களிடம் யாசகம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் திமிர்தான் காரணம். உலகில் நல்லவர்களே அரிதாக இருக்கும் நிலையில் எழுத்தாளர்களில் நல்லவர்கள் என்பது வெள்ளை யானை மாதிரி. அரிதிலும் அரிது.
உன்னை நான் எழுத்தாளன் என்று ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றாலும், நீ ஒரு எழுத்தாளனாக அறியப்படுவதால் இங்கே எழுத்தாளன் என்றே உன்னைக் குறிப்பிடுகிறேன். மேலும் தமிழ்ச் சூழலில் இயக்குனர் ஷங்கரையே கூட எழுத்தாளர் என்றுதானே குறிப்பிடுகிறார்கள்? அதனால்தான் உன்னையும் எழுத்தாளன் என்றே எழுதி விட்டேன்.
இப்போது விஷயத்துக்கு வருவோம். ஏதோ உன்னைப் பார்த்து பொச்சரிப்பில், பொறாமையில் எழுதி விட்டேன் என்று எழுதியிருக்கிறாயாம். இந்த ஒரே காரணத்தினால்தான் உன்னை எழுத்தாளன் என்றே என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. எழுத்தாளன் என்பவனுக்கு சராசரி மனிதனை விட கொஞ்சூண்டாவது காமன்சென்ஸ் என்ற பகுத்தறிவு அதிகமாக இருக்க வேண்டும். உனக்கோ அந்தக் குறைந்த பட்ச பகுத்தறிவு கூட இல்லை என்பது உன் குற்றச்சாட்டில் தெரிகிறது. ஏண்டா தம்பி, யாரைப் பார்த்து யார் பொறாமைப் படுவது? நான் பொறாமைப்படும் அளவுக்கு நீ பெரிய ஆளா?
நீயோ (இலக்கியத்தில்) அஞ்சாம் வகுப்பு ஃபெயில் ஆன ஆள். என்னையோ இந்தியாவின் ஜேம்ஸ் ஜாய்ஸ் என்று ஆங்கில விமர்சகர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட நான் உன்னைப் பார்த்துப் பொறாமைப்பட முடியுமா? அந்தக் காமன்சென்ஸ் உனக்கு வேண்டாமா? உன்னைப் பார்த்து எரிச்சல் அடைகிறேன் என்றுதான் நீ சொல்லியிருக்க வேண்டும். அதுதான் சரி.
சரி, நான் யாரைப் பார்த்து பொறாமை அடைகிறேன்?
அது ஒரு பெரிய பட்டியல். அதில் உள்ளவர்களின் பெயரெல்லாம் உனக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.
ஜப்பான் ஜப்பான் என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கே ஹாருகி முராகாமி என்று ஒரு ஆள் இருக்கிறான். இலக்கியத் தகுதி என்று பார்த்தால் அவன் என்னை விடப் பல மடங்கு கீழே இருக்கிறான். உதாரணமாக, அவன் ஆரம்ப காலத்தில் எழுதிய நார்வேஜியன் வுட் என்ற நாவலையும் என்னுடைய ராஸ லீலா என்ற நாவலையும் ஒப்பீடு செய்தால் நார்வேஜியன் வுட் ராஸ லீலாவை விட பல நூறு மடங்கு கீழே கிடப்பதை ஒருவர் புரிந்து கொள்ளலாம். நீ ஆங்கில மொழிபெயர்ப்புகள் படிக்க மாட்டாய் என்று யூகிக்கிறேன். சாரு நிவேதிதா ஒரு போலி எழுத்தாளர் என்பதால் அவரைப் படிப்பதை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டதாகவும் கூறுகிறாய். ஆக, மேற்கூறிய இரண்டு நாவல்களையும் உன்னால் ஒப்பீடு செய்ய முடியாது. ஆங்கிலம் படிக்கும் உன் நண்பர்கள் யாரையாவது கேட்டுப் பார்.
ஆக, இலக்கியத் தகுதியில் என்னை விடப் பல படிகள் கீழே இருக்கும் ஒரு எழுத்தாளன் இன்று நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களை விடப் பிரபலமாக இருக்கிறான். ஹாருகி முராகாமி ஒரு மாரத்தன் ஓட்டக்காரன். அவன் நாவல்களை ஜப்பானில் கோடிக்கணக்கில் வாங்கிப் படிக்கிறார்கள். கிட்டத்தட்ட நம்மூர் ரஜினி மாதிரி. இங்கே ரஜினிகாந்த் சாலைகளில் வந்து நடக்கவோ ஓடவோ முடியுமா? அந்த மாதிரி ஆகி விட்டான் ஹாருகி முராகாமி. `ஜப்பானில் மட்டும் அல்ல. உலகம் பூராவும். ஹாருகி முராகாமி மட்டும் சென்னைக்கு வந்து புத்தகங்களில் கையெழுத்திட்டால், சென்னையில் உள்ள அத்தனை கல்லூரி மாணவிகளும் அங்கே வந்து குவிந்து விடுவார்கள். அவன் என்ன சொல்கிறான் என்றால், என்னால் ஜப்பானில் வாழவே முடியவில்லை. சாலைகளில் முன்பு போல் ஓட முடியவில்லை. உணவு விடுதிகளுக்குச் செல்ல முடியவில்லை. என் சுதந்திரமே போய் விட்டது. இப்படிப் புலம்புகிறான். பாதி நாள் ஐரோப்பா போய் விடுகிறான்.
அவனைப் பார்த்துத்தான் நான் பொறாமைப்படுகிறேன். உன்னைப் பார்த்து அல்ல பெருமாள். முதலில் நீ அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், என்னை நீ படிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறாய். அதுவும் சிறுபிள்ளைத்தனமான பேச்சுதான். அஞ்சாம் வகுப்பே பாஸ் ஆகாத ஒருத்தன் ஜேம்ஸ் ஜாய்ஸைப் படிக்கப் போவதில்லை என்று முடிவு செய்கிறான் என்றால் அவனைப் பித்துக்குளி என்றுதானே சொல்ல வேண்டும்?
நீ தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் என்னை நீ படிக்க முடியாது தம்பி. நாவலை விடு. நேநோ என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அதை முதலில் படிக்க முடிகிறதா என்று பார். நீ மட்டும் என்னைப் படித்து நான் நன்றாக எழுதுகிறேன் என்று சொல்லி விட்டால் நான் தற்கொலை செய்து கொண்டு விடுவேன்.
நான் ஒன்றும் சும்மா வந்து விடவில்லை. எனக்கு முன்னே ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille), வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர், ஜெர்ஸி கோஸின்ஸ்கி, Serge Doubrovsky, Pierre Gyuotat என்று பலர் இருக்கிறார்கள். அவர்களின் வாரிசு நான். இதெல்லாம் உனக்கு சம்பந்தமே இல்லாத விஷயம்.
”என்னையும்தான் உலகம் கொண்டாடுகிறது” என்று நீ சொல்லலாம். தம்பி, உன் மனசாட்சிக்குத் தெரியும். உன் இலக்கியத் தகுதி காரணமாக உலகம் கொண்டாடவில்லை. தமிழில் உன்னைப் போல் எழுதும் பலர் இருக்கிறார்கள். மேலாண்மை பொன்னுச்சாமி, சு. சமுத்திரம் என்ற பெயர்கள் ஞாபகம் வருகின்றன. அவர்களுக்கெல்லாம் கிடைக்காத புகழும் பிராபல்யமும் உனக்கு ஏன் கிடைத்தது?
காரணம், உனக்கு மட்டுமே கொலை மிரட்டல் வந்தது. தமிழ் எழுத்தாளர்களில் அந்த வகையில் நீதான் முதல். மிரட்டல் விட்ட கூட்டம் கொலையும் செய்திருக்கும். சாதாரண மிரட்டல் அல்ல. உண்மையான மிரட்டல்தான். அந்தக் கொலை மிரட்டலால்தான் உலகம் உன்னைத் திரும்பிப் பார்த்தது. உன்னைக் காப்பாற்றியும் விட்டது. அதே கொலை மிரட்டல் சோ. தர்மனுக்கு வந்திருந்தால் நீ இப்போது இருக்கும் இடத்தில் அவர் இருந்திருப்பார். யோசித்துப் பார், இந்தக் கொலை மிரட்டலுக்கு முன்னால் உன்னை யாருக்குத் தெரியும்?
எனவே, தம்பி, கொலை மிரட்டல் காரணமாக பிரபலமான நீ இலக்கியம் கிலக்கியம் என்றெல்லாம் பெரியவர்களிடம் விவாதிப்பதை நிறுத்தி விடு.
மீண்டும் சொல்கிறேன். நீ நல்லவன். அடுத்த இலக்கியச் சந்திப்பில் நாம் பார்த்துக்கொண்டாலும் நான் உன்னிடம் ஓடி வந்துதான் பேசுவேன். காரணம், மனித குலத்தில் உன்னைப் போன்ற நல்லவர்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.
அண்ணன்,
சாரு
பின்குறிப்பு: ஜேம்ஸ் ஜாய்ஸ் என்ற பெயரைப் படித்து விட்டு இந்தக் கணமே மறந்து விடு. இல்லாவிட்டால் அது உன்னைத் தூங்க விடாமல் ஆக்கித் தொந்தரவு பண்ணி விடும். அப்புறம் அண்ணன்தான் பூச்சாண்டி காட்டி விட்டான் என்ற பொல்லாங்கு வந்து விடும் எனக்கு.