நானே ராஜா, நானே மந்திரி, நானே தளபதி, நானே சிப்பாய் : I am a one-man army…

என்னுடைய முதல் விமர்சனக் கட்டுரை ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்கு எழுதியது. அதற்கு முன்னால் ஃப்ரெஞ்ச் தத்துவம் பற்றி படிகள், இலக்கிய வெளிவட்டம் ஆகிய காலாண்டு இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்பத்திரிகைகளில் நான் தான் பிரதான எழுத்தாளன். நாங்கள் ஒரு குழுவாகவே செயல்பட்டோம். ஆனால் அந்தப் பத்திரிகைகளிலேயே ஜே.ஜே. நாவலுக்கான என் விமர்சனத்தை வெளியிடவில்லை.

அப்போதிருந்து தொடங்கி இன்று வரை என் எழுத்துக்கு எதிர்ப்பு மட்டுமே இருந்து வருகிறது. என் எழுத்தைப் பிடிக்காதவர்கள் பற்றி எனக்குக் கவலையே இல்லை. ஆனால் எனக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களிடமிருந்தே எதிர்ப்பு வரும்போது மனம் மிகவும் எரிச்சல் அடைகிறது.

நேற்று காலை ஒரு நண்பர் ஃபோன் செய்து பெருமாள் முருகனுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை தளத்திலிருந்து எடுத்து விடுங்கள், நமக்கு எதற்கு இதெல்லாம்? அதைப் படித்து பெருமாள் முருகன் மகிழ்ச்சிதான் அடைவார், அவர் எழுதியதையெல்லாம் பொருட்படுத்தி நீங்கள் பதில் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்.

என் கருத்தோடு என் நண்பர்கள் முரண்படலாம். இந்தக் கடிதம் தேவையில்லாதது என்றெல்லாம் கூடச் சொல்லலாம். ஆனால் தளத்திலிருந்து எடுத்து விடுங்கள் என்பது, குழந்தைக்குக் கால் வளைந்தாற்போல் இருக்கிறது, கொன்று விடுங்கள் என்று சொல்வது போல் இருக்கிறது. என் எழுத்து என் குழந்தை. அதை எடுத்து விடுங்கள் என்றால் கொன்று விடுங்கள் என்றே பொருள்.

நான் கடவுள் படத்தின் கடைசியில் அப்படித்தான் வரும். உனக்குக் கண் தெரியவில்லை. நீ செத்துப் போ.

என் கருத்தோடு நீங்கள் முரண்பட்டால் நான் அந்தக் கட்டுரையைத் தூக்கி விட வேண்டுமா ஐயா?

இதெல்லாம் எதனால் வருகிறது தெரியுமா? என் மீதான அன்பினால். அன்பு என்பது ஒரு கொலைவாள் என்று பல முறை எழுதியிருக்கிறேன். நேற்று பூராவும் நான் பெரும் மனக்கொந்தளிப்பில் இருந்தேன். அது எப்படி என்னிடமே பாடம் கற்ற ஒரு மாணவர், ஒரு விஷயத்தில் அவர் என்னோடு முரண்பட்டதும் கட்டுரையையே எடுத்து விடச் சொல்கிறார் என்பதே என் கொந்தளிப்புக்குக் காரணம்.

சரி, அவர் முரண்படுகிறார். ஆனால் சீனி அந்தக் கடிதம் அவசியம் என்கிறார். நான் யார் பேச்சைக் கேட்பது? சரி, நான் என்ன மயிருக்கு எல்லார் பேச்சையும் கேட்க வேண்டும்? எனக்கென்று மூளை இல்லையா? நான் என்ன கேணப் cuntஆ? என்னடா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்னிடமே பாடம் கற்றுக்கொண்டு எனக்கே பாடம் சொல்லிக்கொடுக்கிறீர்களா?

அதிலும் நல்ல பாடமாக இருந்தாலாவது பரவாயில்லை. நண்பரின் பேச்சைக் கேட்டு நான் பெருமாள் முருகனுக்கு எழுதிய கடிதத்தை ப்ளாகிலிருந்து எடுத்து விடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். நான் எழுதும் கட்டுரைகள் பெரும்பாலுமே அப்படித்தான். நான் விமர்சனம் எழுதுவதையே நிறுத்தி விடலாம். யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லாமல் நான் பாட்டுக்கு சிவனே என்று நாவல்கள் எழுதிக்கொண்டிருக்கலாம்.

அப்படி ஒருவர் எழுதிக்கொண்டிருக்கிறார். புனைவுகள் என்னை விட அதிகம் எழுதியிருக்கிறார். ஆனால் அவர் பெயரைச் சொன்னால் உங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. ஏனென்றால், அவர் ஒரு பிள்ளைப்பூச்சி. எப்போதும் எதற்கும் எதிர்வினை செய்ய மாட்டார். எது பற்றியும் அவர் கருத்தைச் சொல்ல மாட்டார். நாவல், குறுநாவல் எழுதுவார். அவ்வளவுதான்.

நண்பர் சொல்வது போல் நான் செயல்பட்டால் நானும் அப்படித்தான் செல்லாக்காசாகப் போய் விடுவேன். நண்பர் சொல்வதைக் கேட்டால், நான் உயிரோடு நடமாடும் பிணமாவேன். நண்பரோ எனக்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு நான் சாவதற்கு வழி சொல்கிறார்.

அந்த்தோனின் ஆர்த்தோ ஃப்ரான்ஸுக்கு எதிரான தன் எதிர்ப்புக் குரலை முதலில் எழுத்தாக முன்வைத்தான். பைத்தியக்கார விடுதியில் அடைத்தார்கள். வெளியே வந்து அவன் ஃப்ரான்ஸை நோக்கிக் கத்தினான். அடித்தொண்டையில் கத்தினான். கத்திக் கத்தியே நாடகம் எழுதினான். நாடகம் பூராவும் அவனுடைய கத்தும் சத்தம்தான்.

அவன் கத்தினான். நான் எழுதுகிறேன். அவன் கதறல் அவன் குரல் வழியே வந்தது. என் கதறல் என் கரங்களின் வழியே வருகிறது.

நீ கத்தாதே என்றால் என்ன அர்த்தம்? என் குரல்வளையை நெறிப்பது போல்தானே அர்த்தம்? இதை என் எதிரி செய்யலாம். நண்பர் செய்யலாமா?

இப்படித்தான் நாற்பத்தைந்து ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். நீ எழுதாதே. எழுதியதை வெளியிடாதே. வெளியிட்டதை ரத்து செய். எழுதியதை நீக்கி விடு.

நான் எழுதவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று என் நண்பர்களுக்கு நான் எத்தனை முறை பாடம் எடுப்பது? எத்தனை சொன்னாலும் நண்பர்களே, உங்களுக்குப் புரியாதா?

சமீபத்தில் ஒரு ஆள் சாரு எழுதுவது இலக்கியமே அல்ல என்று நீண்டதொரு பாராயணம் பண்ணியிருக்கிறார். இப்படித்தான் நாற்பத்தைந்து ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள்.

இமையம் என்று ஒருத்தர். தயிர்வடை சென்ஸிபிலிட்டி கொண்டவர்களின் டார்லிங் பேபி. க்ரியா ராமகிருஷ்ணனால் உலகுக்குத் தெரிய வந்தவர். அவர் ஒரு பேட்டி கொடுக்கிறார். பேட்டிக்காரர் என்னைப் பற்றிக் கேட்கிறார். இமையமும் பெருமாள் மாதிரிதான். என்னைப் படித்ததே இல்லை. என் பெயரைக் கேட்டதும் இமையம் சூடாகிறார். “அது என்னா, எதுக்கெடுத்தாலும் ஜெயமோகன், சாரு நிவேதிதாங்கிறீங்க. ஜெயமோகனாவது வொர்க் பண்றார். இவுரு என்னா பண்ணினாரு? இவுரு என்னா எழுதிருக்காரு? நல்லா தமிழ் எழுதுறாரு. மத்தபடி?”

பேட்டியாளர்: சமீபத்தில் கூட ஔரங்ஸேப்னு ஒரு நாவல் எழுதியிருக்கிறாரே?

இமையம்: என்னது? ஔரங்கசீப்பா? அதை யார் படிச்சா?

இப்படிப் போகிறது பேட்டி. இதில் பாருங்கள். இமையத்துக்கு ஜெயமோகனும் எதிரி. நானும் எதிரி. ஆனால் ஜெயமோகன் வொர்க் பண்றாரு. சாரு எழுதவே இல்லை.

இப்படித்தான் நாற்பத்தைந்து ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

இவர்களோடெல்லாம் நான் போராடவில்லையென்றால், உயிரோடு இருக்கும்போதே குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். ”சாரு நிவேதிதா ஒரு எழுத்தாளனே இல்லை; அப்படி ஒரு ஆளே இல்லை” என்பதுதான் என் சக எழுத்தாளர்களின் நிலைப்பாடு. அதை ஒழித்துக்கட்டுவதற்காக நான் கத்திக்கொண்டேதான் இருக்க வேண்டும். பொருதிக்கொண்டேதான் இருக்க வேண்டும்.

இந்த நிலையில் நான் எவனையுமே குளுமைப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. எவனுக்காகவும் அஞ்ச வேண்டியதும் இல்லை.

ஓட்டுக்குள் பதுங்கிக்கொண்டிருந்தால் என் அடையாளமே இங்கு அழிக்கப்பட்டு விடும். அதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருந்து விடாதீர்கள், நண்பரே!

உண்மையில் எனக்காகக் குரல் கொடுக்க இங்கே யாருமே இல்லை. நானேதான் ராஜா, நானேதான் மந்திரி, நானேதான் தளபதி, நானேதான் சிப்பாய்… Yes, I am a one-man army…