அடையாள அட்டை நாற்பது வயது என்கிறது
பார்க்க அறுபதைத் தாண்டியவனாகத் தெரிந்தான்
சிரியன்
அருகே மகள், பதினான்கு வயது
மனைவியும் மற்றுமிரு மகள்களும் உண்டென்றான்
நாட்கள் பலவாய் உணவில்லை
பொய்யில்லை, பார்த்தாலே தெரிகிறது
அகதி உதவி வேண்டி நிற்கிறான்
ஒரு நாளில் முப்பது பேர்
அதற்கு மேல் இல்லை என்கிறது எங்கள் விதி
உதவி வேண்டி வருவோரோ தினசரி முந்நூறு
இவனை எப்படி வெளியேற்றுவது?
முன்னுரிமையில் இவனே கடைசி.
போரில் கணவனை இழந்து
இரண்டு மூன்று சிசுக்களோடு
வரும் பெண்களெல்லாம் உண்டு
எடுத்துச் சொன்னேன்
ஒரு துண்டுக் காகிதத்தை நீட்டினான்
அதிலிருந்தது ஒரு தொலைபேசி எண்
நகரத்தின் விபச்சாரத் தரகன்
உதவி கிடைக்காவிட்டால்
இவனைத்தான் அழைக்க வேண்டும்
மகளை விற்க என்று
சிறுமி பக்கம் கை நீட்டினான்