நான் என்ன செய்து விட்டேனென்று
என்னைக் கயிற்றில் தொங்கவிடத் துடிக்கிறீர்?
யாரும் செய்யாததையா செய்து விட்டேன்?
அடித்தால் செத்து விடுவாளெனக் கண்டேனா?
வேலை செய்து செய்து என் கரங்கள் இரும்பாகி
விட்டன, அது என் பிழையா?
அவளென்ன, என்னைக் கொஞ்சமா சித்ரவதை செய்தாள்?
எந்த வேலை சொன்னாலும் உருப்படியாய்ச் செய்ததில்லை.
எப்போதும் ஒரு யோசனை
எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசிக்கிறாய்
சொல், ரெண்டு பேரும் சேர்ந்து யோசிப்போம்
என்றால் ஒரு பதிலும் வராது
சமைக்கச் சொன்னால்,
தெருநாயும் சீந்தாத ஒரு சாப்பாடு
நான் சமைத்தால் பன்றி போல் தின்கிறாள்
மனித வாழ்வில் உணவுக்குப் பிறகு என்ன வேண்டும்?
அப்போதும் பிணம் போல் படுத்திருப்பாளா ஒரு பெண்?
என்ன, பெண்ணென்றா சொன்னேன்?
இல்லையில்லை, பெண்ணுருவில் வந்த பைசாசம்
சிரிக்கத் தெரியாமல் இல்லை
பேசத் தெரியாமல் இல்லை
அன்றொரு நாள் ஒருத்தனோடு
சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருந்தாள்
என்னைக் கண்டதும் வாய்மூடிக்கொண்டாள்
மறுநாள் ஏதோ கேட்டேன்
பேச மறந்தவள் போல் பசப்புகிறாள்
விட்டேன் ஒரு அறை
உதட்டில் ரத்தம்
நான் என்ன கேட்டேன்?
பேசினால் பேசு
சிரித்தால் சிரி
படுக்கும்போது பிணம்போல் இருக்காதே
வெறென்ன வேண்டும்?
ஒருநாள், ஏதோ கேட்டேன்
கோட்டானைப் போல் உம்மென்றிருந்தாள்
பேசு என்று அறைந்தேன்
பேசவில்லை
பேசு, பேசாவிட்டால் கொன்று விடுவேன்
மீண்டும் அறைந்தேன்
பேசவில்லை
பேசு பேசு பேசு
அறைந்தேன் அறைந்தேன் அறைந்தேன்
அறைந்துகொண்டே இருந்தேன்
பிரக்ஞையற்று விழுந்தாள்
மூக்கில் விரல் வைத்துப் பார்த்தேன்
மூச்சு நின்றிருந்தது
நான் என்ன திட்டமிட்டா கொன்றேன்?
இது விபத்து, புரியவில்லையா?
ஏன் என் கழுத்தில் கயிறு மாட்டுகிறீர்?
இந்த உலகில்
போக்கிரிகள் துக்கிரிகள்
நாய், நரி, பன்றி
மலப்புழு கூட மலம் காயும்வரை வாழ்கிறது
கத்தரிக்காய் புழுகூட காயை நறுக்கும் வரை வாழ்கிறது
அந்தப் புழுக்களுக்கு இருக்கும் உரிமைகூட எனக்கில்லையா?
அடித்தால் செத்து விடுவாள் எனத் தெரிந்திருந்தால் அடித்திருப்பேனா?
அவள் செத்தால் எனக்குத் தூக்கு என்று தெரிந்திருந்தால் அடித்திருப்பேனா?
அறியாமல் செய்த பிழைக்கு இன்னொரு உயிரும் போக வேண்டுமா?
அவள் மீண்டும் வந்தால்
ராஜகுமாரியாய் வைத்திருப்பேன்
என்ன? மீண்டும் அவள் வாய் மூடியிருந்தால் என்ன செய்வாய் என்கிறீரா?
அடிதான். வேறென்ன?
நம் பிரக்ஞையின்றி செய்வதற்கு
நாம் பொறுப்பேற்க முடியுமா,
சொல்லுங்கள்?