அன்பின் சிறு கதவை மூடாதீர்கள்


1

தினந்தோறும்
எந்தப் பிணக்கும் இல்லாமல்
ஞாயிறு எழுகிறது
நிலவு குளிர்மை பொழிகிறது
தென்றல் வருடிச் செல்கிறது
மலர்கள் மணம் வீசுகின்றன
யாரையும் கேளாமல்
நதிகள் பாடுகின்றன
மலைகள் கேட்கின்றன
பறவைகள் பறக்கின்றன
வனங்களைப்
பெருக்குகின்றன
விலங்குகள் பூமியின்
லயத்தைப் பராமரிக்கின்றன
வானம் இடமளிக்கிறது
மழை பூமியைக் குளிர்விக்கிறது
வானவில் மழைத்துளியில் மலர்கிறது
நதிகள் மலைகளின் கதைகளைப் பாடுகின்றன
மரங்கள் மௌனமாக உலகின் சுவாசத்தைத்
தாங்குகின்றன
மூங்கில் காடுகளிலிருந்து இசை
பிறக்கிறது
பூமி தன் மடியில்
ஆயிரம் கனிகளையும்
தானியங்களையும் தருகிறது
கடல் தன் அலைகளால்
ஜீவராசிகளைத் தாலாட்டுகிறது
வனங்கள் விலங்குகளும்
ஞானிகளும் வசிக்க
இடமளிக்கிறது
ஞானிகளின் தவம் உலகைக் காக்கிறது
தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும்
மண்புழுவும் மாடும் ஆடும்
தேன்சிட்டுகளும் பஞ்சவர்ணக்கிளிகளும்
குதிரைகளும் ஒட்டகங்களும்
ஆனைகளும் பூனைகளும்
நாயும் முயலும்
எல்லாமே
எல்லாமே
தன் இயல்பில் அன்பைப் பகிர்கின்றன
ஒரு மரம் கூட
தன் நிழலை மறைப்பதில்லை
ஒரு பறவையும்
தன் பாடலை மூடி வைப்பதில்லை

2
நண்பர்களே
நீங்கள் மட்டும் ஏன்
உங்கள் ப்ளூ டிக்கை மறைக்கிறீர்கள்
அது உங்கள் சுதந்திரமென்கிறீர்கள்
நியாயமாக இருக்கலாம்
ஆனால்
ஒரு மலர் மணத்தை மறைத்தால்
அது மலராக இருக்குமா
ஒரு பறவை பாடலை நிறுத்தினால்
அது பறவையாக இருக்குமா

நீங்கள் மறைப்பது
ஒரு சின்னக் குறியை மட்டுமல்ல
உலகின் மகிழ்ச்சியை

இந்தப் பூவுலகில்
எல்லாமே திறந்திருக்கையில்
நீங்கள் மட்டும் ஏன்
ஒரு சிறு கதவை மூடுகிறீர்கள்?