1
கஞ்சா மயக்கத்தில்
சிறுதுளி சர்க்கரையும்
கோஹிநூர் வைரமாய்த் தெரியும்
அப்படித்தான் நீ
பேனைப் பெருமாளாக்கி
என் கையில் திணிக்கிறாய்.
மறுக்கிறேன்
கவிதை எழுதச் சொன்னது நீங்கள்
இப்போது வார்த்தைகள் கவிதையாகி
என் விரல்களை மீறி வழிகின்றன
நிறுத்தும் வழி தெரியவில்லை
ஒவ்வொரு எழுத்தும் நீங்களே
எழுதி ஈரம் காய்வதற்குள் உங்கள்
பார்வைக்கு வருகிறது
எந்த அவசரமுமில்லை
வாய்த்த நேரத்தில் வாசிக்கலாம்
ப்ளூ டிக் ஒரு சிறு மகிழ்ச்சி
அது என்ன
திடீரென்று நீங்கள்?
பாராட்டு தேவையில்லை
சன்மானம் கேட்கவில்லை
வாசித்த விவரமறிந்தால்
ஒரு மெல்லிய மகிழ்ச்சி
அதற்கும் தாளிடுபவர்களை
வேறெப்படி அழைப்பது?
2
நீயில்லாமல்
என் கவிதையில்லை
நீ அதை வாசிக்கையில்-
அது ஒரு நதியின் நிழலாய்
என் கரையையும்
உன் மௌனத்தையும்
இணைக்கிறது