பலமுறை சொல்லியிருக்கிறேன், என்னுடைய பித்தநிலையையே எழுத்தாக மாற்றுகிறேன் என்று. சிலருக்கு அது அரைவேக்காடாகவும் சிலருக்கு அதை நான் வெற்றிகரமாகக் கொடுத்து விட்டதாகவும் தோன்றுகிறது. சற்று நேரத்துக்கு முன்பு மதன் முத்து என்ற நண்பர் பின்வரும் சூஃபி பாடல் இணைப்பை எனக்கு அனுப்பியிருந்தார். பித்தநிலையின் உச்சம் இந்தப் பாடல். இதே போன்ற பாடல்களை நாகூரில் கேட்டு வளர்ந்தவன் நான். என் ரத்தத்தில் ஓடுவது இந்த இசைதான். இந்தப் பித்தநிலைதான். இதைத்தான் புதிய எக்ஸைலில் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன்.
புதிய எக்ஸைல் முழுவதையும் பிழை திருத்தம் செய்தேன். பிழை திருத்தம் செய்ததை சரியாகப் போட்டு விட்டார்களா என்று மீண்டும் பார்த்தேன். இதேபோல் ராஸ் லீலாவுக்கும் பிழை திருத்தம். பிறகு அதெல்லாம் சரி செய்யப்பட்டதா என்று மீண்டும் சோதனை. இதையெல்லாம் வேறு யாருமே செய்ய முடியாது. நிறைய ஃப்ரெஞ்ச் வார்த்தைகள் இருப்பதால் நானே தான் செய்ய வேண்டும். மேலும் நான் எந்த வேலை செய்தாலும் – சமையல் உட்பட – ஒரு perfectionist. நான் பிழை திருத்தம் செய்தால் அந்தப் பிரதியில் ஒரு பிழை கூட இருக்கக் கூடாது. எல்லா நூல்களிலும் பதிப்பக விபரம் தருவார்கள் இல்லையா? கிழக்கு பதிப்பகத்தின் தொலைபேசி எண் இருந்தது. ஃபோன் செய்து பார்த்தேன். நம்பர் இப்போது உபயோகத்தில் இல்லை என்று வந்தது. உடனே அதையும் பிழை திருத்தத்துக்கு உட்படுத்தினேன். அந்த அளவுக்கு நான் perfectionist. காரணம், உங்கள் மீது உள்ள அக்கறையும் அன்பும்தான்.
இப்போது தேகம் பிழை திருத்த வேலையில் இருக்கிறேன். அது முடியும் வரை வேறு எதுவும் எழுதக் கூடாது என்று இருந்தேன். ஆனால் இந்தப் பாடலைக் கேட்ட பிறகு எழுதாமல் இருக்க முடியவில்லை. முன்பெல்லாம் பொதுவாக ரெமி மார்ட்டின் உள்ளே போனால்தான் இசை இணைப்புகள் தருவது வழக்கம். சென்ற மாதம் அப்படி நான் இணைப்புகள் தந்ததும் மறுநாள் அராத்து தொலைபேசியில் அழைத்து மறுபடியும் ரெமி மார்ட்டினா என்றார்.
இசையை விட போதை வேறு ஏதும் உண்டா என்று கேட்டேன். 20 வயதிலிருந்து 61 வயது வரை இருந்த ஒரு பழக்கத்தை விட்டு விட்டேன். ஆனால் அது பற்றிய ஒரு துளி எண்ணம் இல்லை. அது பற்றிய யோசனையே இல்லை. என் பழக்கங்கள் அனைத்துமே ப்ளாட்டிங் பேப்பர் மாதிரிதான். உறவுகளும் அப்படியே. போய் விட்டாயா, குட் பை. அடுத்த நிமிடம் அது எனக்கு மறந்து போகும். இப்படி ஒரு விசித்திர மனிதனை நான் இன்னும் சந்தித்தது இல்லை. ஆனால் இசை எனக்கு அப்படி அல்ல. அது என் சுவாசம். நாகூர் எஜமான் கொடுத்தது. நாகூர் சில்லடியின் காற்று கொடுத்தது.
இதோ அந்தப் பாடல். பாகிஸ்தான் கலைஞர்கள் பாடியது. அவர்களைப் பற்றி எழுத இப்போது நேரம் இல்லை. மதன் முத்துவுக்கு என் நன்றி.
https://www.youtube.com/watch?