புதிய எக்ஸைல் பதிவுகள் (6)

அன்பின் சாரு,

உங்களது நேர்மையில்லாதவன் பதிவை படித்தேன். அதைப்பற்றி பேசும் முன் உங்களிடம் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.

//ஒழுக்கம் மொழியிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை. இங்கே ஒழுக்கம் என்பது பயன்படுத்தப்படும் ஒரு சில வார்த்தைகளை பொறுத்ததா அல்லது கட்டுரையின் ஒட்டுமொத்த சாராம்சத்தை பொறுத்ததா என்கிற கேள்வி எழுகிறது. நாகரிகமான வார்த்தைகளில் எழுதப்பட்ட மிக வக்கிரமான கருத்துகளை கொண்ட ஏராளமான  கட்டுரைகள் இணையதில் கொட்டிக் கிடக்கின்றன. அதையெல்லாம் பார்த்து கெட்டுப்போகாத இந்த ‘புனிதத்தன்மை’ வாய்ந்த சமூகம் சாருவின் இந்த இரண்டு வார்த்தைகளால் தான் கெட்டுபோகும் என நினைப்பது அபத்தம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் கோபதாபங்கள் இருக்கும். அதனை எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்பதில் அவனது சுற்றமும் நட்புறவும் சார்புடையனவாய் உள்ளது. கோபத்தைக் காட்டாமல் பல்லிளித்து நல்லவன்போல் நடித்து வாழும் வாழ்க்கையை பல நேரங்களில் பல இடங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கோபம் ஏற்பட்டால் வசைபாடுவது மனிதனின் இயல்பு. ஆனால் அதனை பொதுவெளியில் முன்வைக்க தனி தைரியம் தேவைப்படுகிறது. எக்ஸைல் நாவலின் பின்னட்டையில் ஒரு வரி இருக்கிறது – ‘சாரு கலகக்காரர்களில் ஒரு எழுத்தாளர். எழுத்தாளர்களில் ஒரு கலகக்காரர்.’

//

மேலே சொல்லியிருப்பது – சாரு ஏன் அநாகரிகமாக எழுதுகிறார் எனத்தொடங்கி “சேத்துப்பட்டில் ஒரு குழுமத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் வரும் கடைசி மின்சார ரயிலில் தான் வீடு திரும்புவேன். அப்பொழுதெல்லாம் அங்கு ஒரு நடை மேடையில் ஒரு பெண் இல்லை ஒரு பிச்சைக்காரக் குடும்பம் பேசும் கெட்ட வார்த்தைகளை கேட்டிருக்கிறேன். இப்பொழுது எக்ஸைல் படித்தபின்பு தான் புரிகிறது அவர்கள் எல்லாம் எவ்வளவு இலக்கிய நயத்தோடு பேசியிருக்கிறார்கள்” என்று உங்களை மட்டம் தட்டி பேசிய ஒருவனுக்கு நான் எழுதிய பதில்.

ஒரு வாசகனாக உங்களது தர்க்கங்களை நியாயப்படுத்தி என்னால் இதற்கு மேல் பேசமுடியவில்லை.

இது http://www.minnalgal.in/2014/04/Exile.html எக்ஸைல் புத்தகம் பற்றி ஏப்ரல் 2014ல் எனது மின்னல்கள் தளத்தில் நண்பர் ராஜன் எழுதியது. இதற்கு வந்துள்ள பின்னூட்டங்களைப் பாருங்கள். உங்களை குறை சொல்லவில்லை.

ஆனால் இவர்களுக்கெல்லாம் இடம் கொடுக்கும்வகையில் ஏன் இந்த பதிவை எழுதியுள்ளீர்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆபாசமாகவும் அருவருப்பாகவும் உள்ளது. என்னைச்சுற்றியுள்ள சில பிற எழுத்தாளர்களின் வாசகர்கள் இதைப்படித்துவிட்டு இவனுக்கு நீ வாசகனா என்பதுபோல் பேசுகிறார்கள். தாங்கமுடியவில்லை.

மட்டி போல சாணி பேப்பர், விஷ்ணுபுரத்தைவிட குறைவான பக்கங்கள் குறைவான தரத்தில் பதிப்பு, ஒரு புக் மார்க் டேக் கூட இல்லை. இதற்கு ஆயிரம் ரூபாயா என்று சிலர் கேட்கிறார்கள்.

நான் முன்பதிவில் புத்தகத்தை வாங்கினேன். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் பஸ் பயணம் மேற்கொள்கிறேன். அந்த பயணத்தின் வலிகளை இலக்கியம்தான் போக்குகிறது. பயணத்தின்போது என்னால் புதிய எக்ஸைலை ஒழுங்காக பிடித்து படிக்கமுடியவில்லை. வழுக்கி வழுக்கி விழுகிறது. இதற்காகவே இரண்டுநாள் லீவு போட்டு படிக்கவேண்டும்.

இப்படி ஒருபுறமிருக்க, உங்கள் வாசகன் என்பதையே பெருமையாக கருதிக்கொண்டிருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு தர்மசங்கடங்களை உண்டக்குவதுபோளிருக்கிறது இந்தப்பதிவு. இவர்களைப் போன்றவர்களின்  புறக்கணிக்காமல் அரசியல்வாதிபோல கூட்டத்திற்கு ஆள் வந்த கணக்கையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது நன்றாகவா இருக்கிறது.

மன்னித்துவிடுங்கள்.

மன உளைச்சலில்,

ஷா என்னும் நஸ்ருதீன் ஷா.

டியர் ஷா,

இதற்கெல்லாம் மன உளைச்சல் அடையாதீர்கள்.  சுயநலம், சூதுவாது, பொய் சொல்லுதல், கூடிக் கெடுத்தல், நம்பிக்கைத் துரோகம், காரியம் ஆவதற்காக காக்கா பிடித்தல், அடுத்தவன் பொருளுக்கு ஆசைப் படுதல், அடுத்தவனை அவமானம் செய்தல் போன்ற செயல்களுக்காகத்தான் ஒருவர் மன உளைச்சல் அடைய வேண்டும்.  என்னை நேர்மையில்லாதவன் என்று சொன்ன ஒரு ஆளுக்குக் கெட்ட வார்த்தையில் பதில் சொல்வதற்காக நீங்கள் மன உளைச்சல் அடையக் கூடாது.  நான் பணத்துக்காகவும், புகழுக்காகவும் எவன் காலையும் நக்கியதில்லை.  எவனையும் அண்டிப் பிழைத்ததில்லை.  என் நேர்மை நெருப்பைப் போன்றது.  அதனால்தான் அப்படிக் கெட்ட வார்த்தையால் திட்டினேன்.  இது பற்றி நான் பெருமையே படுகிறேன்.  நான் என்ன, வந்த பார்வையாளர்களையெல்லாம் எண்ணிக் கொண்டா இருக்க முடியும்?

நான் ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன்.  என்னை எப்படி வேண்டுமானாலும் ஏசலாம்.  ஜனவரி 5 விழா என் வாசகர்கள் முப்பது பேர் ஒரு மாத காலம் இரவு பகலாக உழைத்துச் செய்தது.  அதை ஒருவன் கேவலப்படுத்தினால் இப்படித்தான் கெட்ட வார்த்தையில் திட்டுவேன்.  வேறு வழியே இல்லை.  எவனுக்காவது தில் இருக்கிறதா, கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து கல்விக்கூடங்களும், அலுவலகங்களும் திறக்கும் ஒரு திங்கட்கிழமை அன்று காமராஜ் அரங்கில் புத்தக வெளியீட்டு விழா வைப்பதற்கு?

கலந்து கொண்ட பல நண்பர்கள் அலுவலகத்திலும் கல்விக் கூடங்களிலும் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வெளியூரிலிருந்து வந்தவர்கள்.  ஒவ்வொருவரும் பத்து பேருக்கு சமம்.

கவலைப்படாதீர்கள்.  உங்கள் குழந்தையை வன்கலவி செய்பவனின் ஆணுறுப்பை அறுத்து எறிவதில் எந்தத் தவறும் இல்லை. தெய்வத்தின் வாசஸ்தலங்களை வியாபார ஸ்தலங்களாக ஆக்கியவர்களை அடித்து விரட்டுவேன் என்று சொன்னார் இயேசு.  அது என்ன வன்முறையா?

சாரு