அந்திமழை கேள்வி பதில்கள்

சரியாக 21 வாரமாக அந்திமழையில் கேள்வி பதில் பகுதியை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொரு வாரமும் அதற்கான லிங்கையும் இங்கே சாருஆன்லைனில் கொடுத்து வருகிறேன்.  ஆனால் பல நண்பர்கள் இதைப் படிப்பதில்லை என்று அறிகிறேன்.  முகநூலில் தமிழில் வெளிவரும் மொக்கை படங்களுக்கு 20 வரி விமர்சனம் எழுதித் திட்டும் அவர்களுக்கு இங்கே கொடுக்கும் இணைப்பைத் தட்டி நான் எழுதியிருப்பதைப் படிக்க முடியவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.  இதே கேள்வி பதில்களை இணைப்பு தராமல் அப்படியே வாசிக்கக் கொடுத்தால் படித்து விடுவார்கள் என்பதுதான் என் புகார்.  பிற பத்திரிகைகளில் வெளியாகும் என் எழுத்துகளுக்கு இணைப்பு தான் தர முடியும்.  அதையும் இங்கேயே வாசிக்கத் தருவது முறை அல்ல.  இதற்கிடையில் ஒரு நண்பர் சாரு ஆன்லைனை கட்டணத் தளமாக மாற்றச் சொல்லி யோசனை சொன்னார்.  இலவசமாகப் படிக்கவே இங்கே கெஞ்ச வேண்டியிருக்கிறது.  இதில் கட்டணம் வேறா?

http://andhimazhai.com/news/view/charu-21.html

இன்னொரு விஷயம்.  புதிய தலைமுறை வாரப் பத்திரிகையில் தொடர்ந்து வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற தொடரை எழுதி வருகிறேன்.  விகடனில் மனம் கொத்த்திப் பறவை எழுத எவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டேனோ அவ்வளவு பிரயாசையை எடுத்து எழுதுகிறேன்.  பத்திரிகையைக் கடையில் வாங்கிப் படியுங்கள்.

நேற்று புத்தக விழாவுக்குப் போனேன்.  காலச்சுவடு, கிழக்கு, உயிர்மை போன்ற அரங்குகளுக்குப் போனேன்.  பல பெண்கள் புதிய எக்ஸைலில் என் கையெழுத்தை வாங்கினார்கள்.  பெண்களுக்கு வாசிக்கும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்பதை இது எனக்கு உணர்த்தியது.  மகிழ்ச்சி அடைந்தேன்.  இன்றும் புத்தக விழாவுக்குச் செல்வேன்.