எனக்கு யானை வளர்க்க ஆசை!

புதிய தலைமுறை வார இதழில் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற தொடரின் மூன்றாவது அத்தியாயம் இது:

ஒருநாள் காலை ஏழு மணி அளவில் அபிராமபுரம் வழியாக நாகேஸ்வர ராவ் பூங்காவை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு லாஸா ஆப்ஸோ நாய்க்கு ஒரு இளைஞன் பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்டேன்.  அந்த நாயின் முதுகில் தோல் வியாதி கண்டிருந்தது.  கழுத்தில் காயம் பட்டு ரத்தக் களறியாக இருந்தது. சாலையில் அனாதையாக அலைந்து கொண்டிருந்ததாகச் சொன்னான் இளைஞன்.

லாஸா ஆப்ஸோ மிகவும் விலை உயர்ந்த ரகத்தைச் சேர்ந்த நாய்.  பணக்காரர்களால்தான் வளர்க்க முடியும்.  அது எப்படி வெளியே திரிய முடியும்?  என்னிடம் எல்லா நாய்களும் ஒட்டிக் கொண்டு விடுவதைப் போல் அந்த நாயும் வாலை ஆட்டிக் கொண்டு வந்தது.  குனிந்து பார்த்தேன்.  காயம் பயங்கரமாக இருந்தது.  நாற்றம் குமட்டிக் கொண்டு வந்தது.  அப்படியே தரையில் அமர்ந்து அதை என் மடியில் வைத்துக் கொண்டேன்.  அலைய விட்டால் வாகனங்களில் அடிபட்டு விடும்.  வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்களுக்கு சாலை பற்றிய எச்சரிக்கை உணர்வு இருக்காது.  அதுவும் தவிர தெரு நாய்களும் கடித்து விடும்.  இளைஞன் கொடுத்த பிஸ்கட்டை அது முகர்ந்து கூட பார்க்கவில்லை.  பிறகு வீட்டிலிருந்து அவன் பால், பன், ராயல் கேனைன் என்று என்னென்னவோ எடுத்து வந்து கொடுத்தான்.  ம்ஹும். எதையும் தொடவில்லை.  நாய்களின் உணவில் ராயல் கேனைன் தான் விலை மிகவும் அதிகம்.  ஒரு கிலோ 450 ரூ. வீட்டு நாய்கள் எதைச் சாப்பிட்டுப் பழகியிருக்கிறதோ அதை மட்டுமே சாப்பிடும்.  அப்போது அந்தப் பக்கம் காரில் வந்த ஒரு பெண் காரை நிறுத்தி இறங்கி வந்து விசாரித்தார்.  அவருமே தரையில் அமர்ந்து என்னிடமிருந்து நாயை வாங்கிக் கொண்டார்.

ப்ளூ கிராஸுக்கு போன் செய்தோம்.  மூன்று பேரும் ஒரு மணி நேரம் அங்கேயே காத்திருந்தோம்.  அதற்கிடையில் அந்தப் பக்கம் வந்த என் நண்பர் ஸ்கூட்டரை நிறுத்தி விசாரித்த போது அதுவரை பொறுமையின்றி அலைந்த நாய் ஸ்கூட்டரில் வெகு சுவாதீனமாகப் போய் ஏறிக் கொண்டது.  ஆக, அடிக்கடி ஸ்கூட்டர் பயணம் செய்திருக்கிறது என்று தெரிந்து கொண்டோம்.  ப்ளூ கிராஸிலிருந்து யாரும் வரவில்லை.   அப்போது அங்கே வந்த பக்கத்து வீட்டு நேபாளி கூர்க்கா உடைந்த இந்தியில் சொன்ன விபரம்: முந்தின தினம் இரவில் ஒரு பெண் அந்த நாயைக் கொண்டு வந்து குப்பைத் தொட்டியில் போட்டிருக்கிறார்.  கூர்க்கா கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் போய் விட்டார்.   கூர்க்காவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  அருகில் போக பயம்.  கொஞ்ச நேரத்தில் நாய் பெரும் குரலில் கத்திக் கொண்டு பாய்ந்து குப்பைத் தொட்டியைத் தாண்டி தரையில் குதித்திருக்கிறது.  கழுத்திலிருந்து ரத்தம்.  குப்பைத் தொட்டியில் இருந்த எலிகள் நல்ல தீனி கிடைத்தது என்று நாயைக் குதறியிருக்கின்றன.

எனக்குக் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.  யாராவது இப்படிச் செய்வார்களா?  மனம் வருமா?  நாம் வளர்க்கும் நாய் நம்முடைய குழந்தை இல்லையா?  “குழந்தையையே குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள்.  இது என்ன சார் பிரமாதம்?” என்றார் பாரதி.  அந்தப் பெண்ணின் பெயர்.  பிறகு பிரியா என்ற சமூக ஆர்வலரை வரவழைத்து வளர்ப்புப் பிராணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் பாரதி.

ஜெர்ரியின் வயது மூன்று என்று தெரிந்த போது – அதற்குள் அதற்கு ஜெர்ரி என்று பெயர் வைத்திருந்தார் பாரதி – நான் அதிர்ந்து போனேன்.  மூன்று ஆண்டுகள் வளர்த்த ஒரு செல்லத்தையா இப்படிக் குப்பைத் தொட்டியில் போடுவார்கள்?  நாயை வளர்க்க விருப்பம் இல்லையானால் ஏதாவது பிராணிகள் மருத்துவமனையில் போட்டிருந்தாலாவது அவர்கள் கவனித்துக் கொள்வார்களே?  முகநூலில் பாரதி ஜெர்ரி என்ற புதிய குழுவை ஆரம்பித்தார்.  இப்போது ஜெர்ரிக்கு ஏகப்பட்ட ஆதரவாளர்கள்.  ஆனால் ஜெர்ரியைக் காப்பாற்றுவது மருத்துவருக்கு அவ்வளவு சுலபமாக இல்லை.  முதலில் முடி எல்லாவற்றையும் நீக்க வேண்டியிருந்தது.  இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குளியல், மருந்து, ஊசி, இன்ன பிற.

எல்லா செலவையும் பாரதிதான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.  இன்னும் சிறிது நாள் சிகிச்சை கொடுத்தால் ஜெர்ரியை யாராவது வளர்க்கலாம்.  ஒருநாள் ஜெர்ரியைப் பார்க்கப் போனேன்.  லாஸா ஆப்ஸோ நாய்களுக்கு முடி தான் அழகு.  மிக நீளமாக இருக்கும்.  ஜெர்ரி முடியை இழந்து பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.  என்னைப் பார்த்து முறைத்தது.  ஏன்?  தன்னை வளர்த்தவர்களை இழந்து குப்பைத் தொட்டியில் கடிபட்டு… அதன் மனோநிலை எப்படி இருந்திருக்கும்?  அதுசரி, சாலையில் திரிந்த போது மடியில் உட்கார்ந்து கொண்டதே என்று கேட்டேன் பாரதியிடம்.  ”மருத்துவமனையில் இருந்தால் நாமே அப்படித்தானே சார் இருக்கிறோம்?” என்றார்.

ஒரே நாளில் சொர்க்கத்தையும் நரகத்தையும் நேரில் கண்டேன்.  நரகம், குப்பைத் தொட்டியில் போட்ட கல்நெஞ்சம்.  சொர்க்கம், சக உயிரைக் கண்டு உருகிய உள்ளங்கள்.

***

இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது சென்னை புத்தக விழா நடந்து கொண்டிருக்கும்.  அது குறித்து உங்களுக்கு சில ஆலோசனைகள்:

1.சமையல், ஜோதிடம் சம்பந்தமான புத்தகங்கள், அகராதிகள், பாடப் புத்தகங்கள் போன்றவற்றை புத்தக விழாவில் வாங்காதீர்கள்.  அவையெல்லாம் உங்கள் வீட்டுக்கு அருகிலேயே புத்தகக் கடையில் கிடைக்கும்.

2. கிடைப்பதற்கு அரிதான புத்தகங்களையே வாங்குங்கள்.

3. சென்ற ஆண்டு வாங்கிய புத்தகங்கள் அலமாரியை அலங்கரிப்பதோடு நின்றிருந்தால் – அதாவது, அவற்றை நீங்கள் படிக்காமல் வைத்திருந்தால் – புதிய புத்தகங்களை வாங்கிச் சேர்க்காதீர்கள்.  புத்தகங்கள் ஊசிப் போவதில்லை என்ற ஒரே காரணத்திற்காக வெறுமனே வாங்கி வாங்கி அடுக்கக் கூடாது.

4. சமகால நட்சத்திர எழுத்தாளர்களை உங்களுக்கே தெரியும் என்பதால் அவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கவில்லை.  மற்றபடி நீங்கள் படிக்க வேண்டிய எழுத்தாளர்கள்: தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ராஜகோபாலன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், வண்ணநிலவன்,  ந. முத்துசாமி, அ. முத்துலிங்கம், ப. சிங்காரம். புரிவதற்கு சற்று கடினமான எழுத்தாளர்களான நகுலன் போன்றவர்களை இங்கே சேர்க்கவில்லை.

சில புத்தகங்கள்: கலாப்ரியா – நினைவின் தாழ்வாரங்கள், சுகுமாரன் – வேழாம்பல் குறிப்புகள், கணேச குமாரன் -மெனிஞ்சியோமா, ஆத்மார்த்தி – மனக்குகை ஓவியங்கள், கவிதைகளில் விருப்பம் உள்ளவர்களுக்கு: அமிர்தம் சூர்யா – வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம், பாம்பாட்டிச் சித்தன் (எ) செளரிராஜன் – இறந்தவர்களை அலங்கரிப்பவன், நேசமித்ரன் – மண்புழுவின் நான்காவது இதயம், கவிதைக்காரன் இளங்கோ – ப்ரைலியில் உறையும் நகரம், மனுஷ்ய புத்திரன் – அந்நிய நிலத்தின் பெண்.

தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.  சமீபத்தில் ஒரு ஆவணப் படப்பிடிப்புக்காக ஆலம்பரா கோட்டைக்குச் சென்றிருந்தேன். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கடப்பாக்கம் அருகில் இடைகழிநாடு என்ற ஊரில் உள்ளது இந்தக் கோட்டை.  மூன்று புறமும் கழிமுகம், ஒரு புறம் கடல் என்று இருப்பதால் இடைக்கழி நாடு என்ற பெயர்.  இந்த ஊரைச் சேர்ந்த ஒரு புலவர் சங்க இலக்கியத்தில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் இடம் பிடித்தவர்.  இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்பது பெயர்.  அப்படிச் சொன்னால் புரியாது.  நமக்கு சினிமா பெயர் சொன்னால்தான் புரியும் இல்லையா?  பிதாமகனில் சுடுகாடாகப் பார்த்த இடம்தான் ஆலம்பரா கோட்டை.  17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் கடைசியாக ஆட்சி செய்தவர் நவாப் தோஸ்த் அலி கான்.  பின்னர் ஃப்ரெஞ்ச் கவர்னர் துய்ப்ளே நவாபுக்கு உதவி செய்ததற்காக இந்தக் கோட்டையை அவர் துய்ப்ளேவுக்குப் பரிசாகக் கொடுத்தார்.  ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த போரில் கோட்டையின் பெரும்பகுதி அழிந்து விட்டது.  மீதி நம் அரசாங்கத்தின் கவனக் குறைவால் முற்றாக அழிந்து இப்போது வெறும் சுவர் தான் எஞ்சி நிற்கிறது.

மூன்று பக்கமும் காயல், அதை அடுத்து தீவு போன்ற மணல் வெளி, அதற்குப் பின்னால் கடல் என்ற கண் கொள்ளாக் காட்சி தரும் இந்த இடத்தை ஏன் ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றக் கூடாது என்று தோன்றியது.  பக்கத்தில் உள்ள கர்னாடகாவுக்குச் சென்றிருந்த போது ஒரு விளம்பரம் பார்த்தேன்.  ”யானையைக் குளிப்பாட்டி அதற்கு உணவு கொடுக்க விருப்பமா?  எங்கள் பாகன்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.  இப்படி ஒரு சாகசச் செயலை உங்கள் வாழ்விலேயே நினைத்துப் பார்க்க முடியாது.”  இந்த வாசகங்களுடன் ஒரு வனப்பகுதியில் உள்ள நதியில் பத்துப் பதினைந்து யானைகளை சில ஆட்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள்.  உடனே எனக்கும் அந்த சாகசச் செயலை செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது.  ஏற்கனவே எனக்கு யானை வளர்க்க வேண்டும் என்று ஆசை.  நாயைப் போலவே மனிதனோடு மிகவும் நேசம் காட்டும் ஒரு பிராணி யானை.  ஆனால் செலவு கட்டுப்படி ஆகாது என்ற காரணத்தினால்தான் யானைக்குப் பதிலாக நாய் வளர்க்கிறேன்.  அதனால் உடனடியாக அந்த வனப்பகுதிக்குக் கிளம்பினேன்.   என்ன தான் பாகன் உதவி செய்தாலும் யானைகளைக் குளிப்பாட்டும் போது நம் உயிருக்கு ஏதாவது ஹானி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற கவலை தொற்றிக் கொண்டது.  சுற்றுலா அதிகாரியிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.  அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு ஏதோ கன்னடத்தில் சொன்னார்.  வீர மரணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறாரோ?  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போனேன்.

என்ன ஒரு காட்சி! ஒரு குட்டை போல் தேங்கிக் கிடந்தது காவிரி!  கரையெல்லாம் ஒரே சேறும் சகதியும்.  அதில் சோர்வாகப் படுத்துக் கிடந்தது ஒரு யானை.  (நம் கோவில் யானையே இதை விட நன்றாக இருக்கும்.)  அதன் அருகே ஒரு பெண், குவளையால் தண்ணீரை நதியிலிருந்து மொண்டு யானையின் மீது ஊற்ற, பாகன் வைக்கோல் பிரியால் ஒரு தேய் தேய்த்தார்.  பெண் இன்னொரு குவளை தண்ணீரை ஊற்றினார்.  பிறகு யானையின் வாயில் ஒரு வாழைப்பழம் கொடுத்தார்.  யானை அதை வாங்கித் தின்றது.

அடப் பாவிகளா!  இதுதான் உங்கள் சாகசமா?  (சுற்றுலா அதிகாரியின் பார்வைக்கு அப்போதுதான் எனக்கு அர்த்தம் விளங்கியது.)  ஆனாலும் ஒரு விதத்தில் இதை கர்னாடக சுற்றுலாத் துறையின் சாகசம் என்றே சொல்ல வேண்டும்.  ஒரு சாதாரண இடத்தைக் கூட எப்படி சுற்றுலாத் தலமாக்கி விட்டார்கள்!  ஆனால் தமிழ்நாட்டில் ஒரு பிரம்மாண்டமான கோட்டை புல் முளைத்துக் கிடக்கிறது.  அது மட்டும் அல்ல.  எந்த இடத்திலும் கால் வைக்க முடியாதபடி ’கக்கா’.   அந்த ஊர்க்காரர்களுக்கு அதுதான் திறந்த வெளி கக்கூஸ்.

அங்கிருந்து கிளம்பும் போது அந்தக் கோட்டையில் வசித்த மனிதர்களைப் பற்றிய யோசனை வந்தது.  ஒரு வரலாற்று நாவல் எழுதுவதற்கான களம் அது!

***

கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஜெர்ரி இப்போது மருத்துவமனையில் நலமாக இருக்கிறது.  அதை வளர்க்க விரும்பும் அன்பர்கள் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.  ஒரே ஒரு நிபந்தனைதான்.  நாய்களை உண்மையிலேயே நேசிப்பவர்கள் மட்டுமே தொடர்பு கொள்ளவும்.  98840 36200 அல்லது 98409 69745

ஒரு பின்குறிப்பு: ஜெர்ரிக் குட்டியைக் காப்பாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஸ்ரீராம்.  அவர் பெயரைக் குறிப்பிடாததற்குக் காரணம், அவருக்கென்று தனிக் கட்டுரை எழுத இருக்கிறேன்.  அவர் என் ஆசான்களில் ஒருவரான மௌனியின் பேரன்.  அவருக்கும் அவருடைய வளர்ப்பு நாய் ஸூகிக்கும் இருந்த நெருக்கம் பற்றி எழுத ஆரம்பித்தால் அது தனிக் கதையாகப் போய் விடும்.  அது பற்றி இன்னொரு சமயம்…