போர்ட்டர்கள் தேவை

நேற்று புத்தக விழா செல்ல கொஞ்சம் தாமதமாகி விட்டது.  கிழக்கு அரங்கில் மாலை ஏழரையிலிருந்து ஒன்பது வரை இருந்தேன். பலருக்கும் கையெழுத்திட்டேன்.  அதற்கு முன்பாக உலகத் தமிழாராய்ச்சி மைய அரங்கம் சென்றேன்.  மிக அருமையான புத்தகங்கள் உள்ள அரங்கம்.  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமே பதிப்பித்த தமிழ் ஆங்கில அகராதி நான்கு தொகுதி வாங்க எண்ணி வங்கி அட்டையை நீட்டினேன்.  வங்கி அட்டை ஏற்கப்படாது என்றார்கள்.  உடனே பக்கத்திலிருந்த நண்பர் 600 ரூபாயைக் கொடுத்து வாங்கிக் கொடுத்தார்.  கெட்டி அட்டையுடன் அருமையான பதிப்பு.  ஒவ்வொரு தொகுதியும் 1500 ரூ வைக்கலாம்.  ஆனால் 150 ரூ தான்.  அரசு மானியம்.

கிழக்கு பிரஸன்னாவிடம் புத்தக விழா ஏற்பாடுகளில் உள்ள குறைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.  முக்கியமாக உடல் வலு இல்லாதவர்களால் புத்தகங்களைத் தூக்கிச் செல்ல முடியவில்லை.  மால்களில், ரயில் நிலையங்களில் உள்ளது போல் பளுவை இழுக்கும் சக்கர வண்டி இருந்தால் நல்லது.  ஆனால் அதற்கு தரைத் தளம் சீராக இருக்க வேண்டும்.  உங்களுக்கு உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சாரு என்றார் பிரஸன்னா.  ஒரே ஒரு மூட்டை தானே என்று வேண்டாம் என்று மறுத்து விட்டேன்.

திரும்பும் போது வெளியே உள்ள மைதானத்தில் அமைந்துள்ள உணவு விடுதி அருகே வரும் போதே நெஞ்சு வலி வந்து விட்டது.  உடனே மூட்டையைத் தரையில் வைத்து இளைப்பாறி விட்டு – அந்த நேரத்தில் சிலருக்குக் கையெழுத்து – மீண்டும் நடந்தேன்.  வெளியே ஐந்து நிமிடம் நடந்தேன்.  வேர்க்கடலை விற்கும் இடம் வந்த போது கனம் தாங்காமல் மீண்டும் நெஞ்சு வலி.  மீண்டும் தரையில் வைத்து விட்டு இளைப்பாறினேன்.  அப்போதும் கையெழுத்து.  பிறகு பிரதான சாலைக்குச் செல்லும் ஒரு தார் சாலையில் நடக்கும் போது மீண்டும் கனம் தாங்காமல் நெஞ்சு வலி.  மீண்டும் தரையில் வைத்து விட்டு இளைப்பாறினேன்.  அப்போது வாட்டசாட்டமான நான்கைந்து இளைஞர்கள் கையெழுத்து வாங்கினார்கள்.  அவர்களிடம் உதவி கேட்கலாமா என்று நினைத்தேன்.  ஆட்டோ பிடிப்பதற்கான பிரதான சாலை ஐந்து நிமிடம் நடந்தால் வந்து விடும்.  ஆனால் அவர்களிடம் உதவி கேட்க லஜ்ஜையாக இருந்ததால் நானே தூக்கிக் கொண்டு வந்து விட்டேன்.

இன்னும் ஆறு மாதங்களுக்கு பளு தூக்கக் கூடாது என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்.  இன்றும் புத்தக விழா வருவேன்.  மாலை ஐந்து மணி அளவில்.  கிழக்கு, உயிர்மை.  ஆனால் இன்று புத்தகம் வாங்க மாட்டேன்.  நாளை புத்தகம் வாங்குவேன். நாளைக்குள் புத்தக விழா நடக்கும் இடத்தில் போர்ட்டர்களை நியமிக்க முடியுமா என்று புத்தக விழா நடத்தும் அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.  மனுஷ்ய புத்திரனும் கொஞ்சம் இந்த விஷயத்தை கவனித்தால் நல்லது.