அன்புள்ள சாரு,
சாமானியர்களை விடக் கொஞ்சம் அதிகமாகப் படித்து விட்டேன். இப்பொழுது எது சரி எது தவறு என்று சுத்தமாகப் புரிய மாட்டேன் என்கிறது. முன்பை விட எல்லாவற்றிற்கும் நிறைய யோசிக்கிறேன். இப்பொழுது நான் என்ன பேச அல்லது எழுத அல்லது கேட்க நினைத்தாலும், இயல்பாக வர மறுக்கிறது. அதாவது, நிறைய படிக்கப் படிக்க நான் முட்டாள், நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்னும் எண்ணம் தோன்றுகிறது. உங்களைப் படித்துப் பலமுறை awe factor அடைந்திருக்கிறேன். எப்படி உங்களால் சரளமாக உணர்ந்தும்; பேசவும் முடிகிறது?
பிரகாஷ்.
பதில்: அறியாதவனுக்குக் குழப்பமே இல்லை. அவர்கள் விலங்குகளுக்குச் சமமானவர்கள். இலக்கியவாதிகள் அசாதாரணமாக இருப்பதற்கு படிப்பே காரணம். ஆனால் படிப்பு சிலருக்கு அகந்தையையும் சிலருக்கு அடக்கத்தையும் தருகிறது. அது கொடுக்கும் பொருளின் இயல்பு அல்ல. வாங்குகின்ற பாத்திரத்தின் இயல்பு. அல்லது, நான் ஏற்கனவே பலமுறை சொன்னது போல், வாசிப்பை அறிவாக மட்டுமே கொண்டால் அது அகந்தையையும் வாசிப்பை ஞானமாக செரித்துக் கொண்டால் அது அடக்கத்தையும் அளிக்கும்.
அறியாதவனே தவளை போல் லஜ்ஜையின்றிக் கத்திக் கொண்டிருப்பான். அறிந்தவன் பேச மாட்டான்.
தன்னைப் பைத்தியம் என்று அறிந்தவன் எப்படிப் பைத்தியமாக இருக்க முடியும்? அதேபோல் தன்னை முட்டாள் என உணர்ந்தவன் முட்டாளாக இருக்க சாத்தியம் கம்மி. இன்னும் நிறைய படிக்கப் படிக்க உங்கள் மௌனம் லேசாகக் கலையலாம். ஆனால் அந்த நிலையிலும் தவளை போல் கத்திக் கொண்டிருக்க முடியாது. அறிந்தவனால் அல்லது அறியும் தேட்டம் உடையவனால் அது சாத்தியப்படாது.
என்னைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். என்னால் சரளமாகப் பேச முடிகிறதா என்ன? கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.
Comments are closed.