”நான் வெறுக்கும் பலரைப்போல் ஜெயமோகனையும் வெறுக்கிறேன். அவரை வெறுக்க எனக்குக் காரணங்களே தேவைப்படவில்லை. ஆயினும் நான் அவரை வெறுக்கிறேன். எந்த அடிப்படைவாதத்துக்கு எதிராகவும் எழுதியோ கண்டனத்தைப் பதிவு செய்தோ என்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. காதலிப்பதைப்போல வெறுப்பதும் எனக்கு அந்தரங்கச் செயல்பாடு. ஏன் வெறுக்கிறாய் என்று கேட்பதும், காரணங்களை நீங்களே கற்பித்துக் கொண்டு இதற்காகத் தானே என்று என்னிடம் உறுதிப்படுத்த முயல்வதும் என் மீது நீங்கள் பிரயோகிக்கும் வன்முறை.”
மேற்கண்ட குறிப்பை என் பிரியத்துக்குரிய கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியிருந்தார். நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வதற்காக ஐந்து நிமிடம் முகநூல் பக்கம் போவது என் வழக்கம். காலையில் நடைப் பயிற்சியிலிருந்து திரும்பி வந்து இன்னும் காலணிகளைக் கூட அவிழ்க்கவில்லை. கார்ல் மார்க்ஸின் குறிப்புக்குப் பதில் எழுத ஆரம்பித்து விட்டேன். வேலை தலைக்கு மேல் இருக்கிறது. இருந்தாலும் இந்தக் குறிப்பு என்னைப் பதில் எழுதத் தூண்டுகிறது.
சமீபத்தில் அமிர்தாவில் எழுதிய கட்டுரையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே சாரு நிவேதிதா சீரியஸ் கண்டிஷனில் இருந்தார் என்று லட்சுமி மணிவண்ணன் எழுதியிருந்தார். அப்படியென்றால் என்ன பொருள்? அப்பவே சாகக் கிடந்தான். இப்போ அவன் செத்த இடத்தில் புல்லு முளைச்சிருக்கும்.
டியர் கார்ல், சுந்தர ராமசாமி பள்ளியில் இருப்பவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்கு ல.ம.வின் குறிப்பு ஒன்று போதும். அவர்கள் என்னை வெறுக்கவில்லை. ஆளே இல்லை என்கிறார்கள். சுந்தர ராமசாமியின் பள்ளிக்கு இன்று பெயர் மாறி விட்டது. சு.ரா. பள்ளி ஒரு எலிமெண்டரி பள்ளிக்கூடம். ஓலைக் குடிசை. இப்போது அது நவீனமயமாகி ஏர்கான் பொருத்தப்பட்டு விட்டது. அட்மிஷனே ரொம்பக் கஷ்டம். பெயரும் மாறி விட்டது. ஜெயமோகன் இண்டர்நேஷனல் பள்ளி. அதன் ஸ்தாபகருக்கு என் மீது மதிப்பு உண்டு என்றாலும் அதன் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், பள்ளியை விட்டு வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள், சுந்தர ராமசாமி ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் இருந்த போது அந்தப் பள்ளியில் படித்த லட்சுமி மணிவண்ணன், யுவன் சந்திரசேகர் போன்ற முன்னாள் மாணவர்கள் எல்லோருக்கும் சாரு நிவேதிதா என்பவனே இல்லாதவன். Non-existent. எனவே கார்ல், நீங்கள் ஜெயமோகனை வெறுப்பதன் மூலம் ஜெயமோகன் இண்டர்நேஷனல் பள்ளியின் மிகத் தீவிர ஆதரவாளராகவே இருக்கிறீர்கள். சாரு நிவேதிதா விமர்சகர் வட்டம் என்ற பெயரில் என்னை வெறுக்கும் நண்பர்கள் எனக்காக எப்படிப் பாடுபடுகிறார்களோ அதேபோல் ஜெயமோகனுக்காக நீங்கள் பாடுபடுகிறீர்கள். அந்த வகையில் ஜெயமோகனின் இடத்தில் நான் இருந்தால் உங்களைப் பார்த்து ஏளனப் புன்னகையே புரிவேன். இப்படி எழுதுவதால் நீங்கள் வெறுக்கும் எழுத்தாளனைப் புறக்கணியுங்கள் என்று நான் சொல்வதாக அர்த்தமாகி விடக் கூடாது. அப்படி நான் சொல்ல மாட்டேன். எல்லா எழுத்தாளனையுமே – பசுமை விகடன், அவள் விகடன், டாக்டர் விகடன் உட்பட விகடன் குழுமத்தின் எல்லா இதழ்களிலும் எழுதும் எஸ்.ரா. உட்பட – தமிழ் சமூகம் புறக்கணித்தே வருகிறது. இது உங்களுக்குத் தெரியாவிட்டாலும் எஸ்.ரா.வுக்குத் தெரியும். எப்போது ஒரு தமிழ் எழுத்தாளனின் நூல் ஒரு லட்சம் பிரதி விற்கிறதோ அப்போதுதான் எழுத்தாளர்களை இந்தச் சமூகம் புறக்கணிக்கவில்லை என்று அர்த்தமாகும். மணி ரத்னம் ஜம்முவில் கால்ஃப் விளையாடும் போது ஒன்பதாவது துளையில் பந்தைப் போட முயற்சிக்கும் போது சுவாசிப்பதில் லேசாகக் கஷ்டம் இருந்தது என்பதை முதல் பக்கத்தில் ஆங்கில செய்தித்தாளில் போடுகிறார்கள். அதேபோல் வாரணாசியில் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறப் போகும் போது இன்ன எழுத்தாளருக்குக் கால் சுளுக்கிக் கொண்டது என்று ஆங்கில செய்தித்தாளில் செய்தி வந்தால்தான் எழுத்தாளனுக்கு இங்கே அடையாளம் இருக்கிறது என்று சொல்ல முடியும். சரி, அதுகூட அதிக பட்சம் என்றால் எழுத்தாளரின் புத்தகம் லட்சம் பிரதி போக வேண்டும்.
எனவே ஏற்கனவே எழுத்தாளர்களைப் புறக்கணித்து வரும் ஒரு சமூகத்தில் நீங்களும் புறக்கணியுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் வெறுக்காதீர்கள். பெரியார் தோற்றுப் போனது வெறுப்பினால். மார்சீயம் தோற்றுப் போனது வெறுப்பினால். இந்து மதம் இந்தியாவுக்குள்ளேயே முடங்கியது வெறுப்பினால். இன்றைய இந்திய சமூகம் க்ஷீணமடைந்து போனது வெறுப்பினால். இந்துவை முஸ்லீம் வெறுக்கிறான். முஸ்லீமை இந்து வெறுக்கிறான். கிறிஸ்தவனை இரண்டு பேரும் வெறுக்கிறான். ஆணை பெண் வெறுக்கிறாள். பெண்ணை ஆண் வெறுக்கிறான். பெற்றோரைக் குழந்தைகள் வெறுக்கின்றன. குழந்தைகளைப் பெற்றோர் வெறுக்கின்றனர். வெறுப்பே நமது சமூகத்தின் வாயு மண்டலமாக ஆகி விட்டது.
எனவே மை டியர் கார்ல், எந்தக் காலத்திலும் வெறுப்பு உங்களை அண்டக் கூடாது. வெறுப்பு ஒரு நோய். நோய் உங்களை பலஹீனமாக்கி விடும். நாமே நம்மை பலஹீனனாக்கிக் கொள்ளலாமா? அதிலும் ஒரு எழுத்தாளனைப் போய் வெறுக்கலாமா? அன்பு செலுத்துங்கள். அன்பையே ஆயிரம் பக்களில் எழுதினேன். புதிய எக்ஸைலை இப்போதுதான் படித்து முடித்திருக்கிறீர்கள். அது பற்றிய உங்களுடைய அற்புதமான பதிவையும் பார்த்தேன். அதை எழுதிய கையா இந்த வெறுப்பின் பக்கத்தையும் எழுதியது?
முடிந்தால் அன்பு செலுத்துங்கள் கார்ல். ஜெயமோகன் போன்ற எழுத்தாளனின் மீது எனக்கு அன்பு இல்லை என்கிறீர்களா? விட்டு விடுங்கள். உங்கள் வெறுப்போ அன்போ ஜெயமோகனை எதுவுமே செய்யப் போவதில்லை. வெறுப்பை நினைத்து அச்சமடையும் அளவுக்குக் கூட இங்கே எழுத்தாளர்களுக்கு அடையாளம் இல்லை. சொல்வது புரிகிறதா? ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் அவரைக் கடுமையாக விமர்சித்து உயிர்மையில் அரசி என்ற கவிதை எழுதியிருந்தார் மனுஷ்ய புத்திரன். கருணாநிதி அந்தக் கவிதையைப் பாராட்டி எழுதிய கடிதமும் அடுத்த மாத உயிர்மையில் வெளிவந்திருந்தது. அப்படியும் ஜெயலலிதா மனுஷ்ய புத்திரனைக் கைது செய்யவில்லை. ஏனென்றால், இங்கே ஒரு எழுத்தாளனால் ஆட்சியில் இருப்போரின் வெறுப்புக்கு ஆளாக முடியவில்லை. ஆக, அதிகாரத்தில் இருப்போரின் வெறுப்புக்குக் கூட ஆளாக முடியாத அவலமான இடத்தில் இருக்கிறான் எழுத்தாளன். சரி, ஜெயமோகன் மீது என்னால் அன்பு செலுத்த முடியாது என்கிறீர்களா? ஒதுங்கி விடுங்கள். ஏன் உங்களுக்குப் பிடிக்காத ஒன்றைத் தவற விடாமல் படித்து அதை வெறுக்கிறீர்கள்? ஒருவரை வெறுப்பதன் மூலம் உங்களை நீங்கள் இம்சித்துக் கொள்கிறீர்கள். சுயவதை மிகவும் கொடுமையானது கார்ல். மறந்தும் அதைச் செய்யாதீர்கள்.
ஒன்றுமே வேண்டாம். இதுவரை நான் எழுதியதை மறந்து விடுங்கள். உங்களை நேசிக்கப் பழகுங்கள். உங்களுக்கு ஒவ்வாததை உண்ணாதீர்கள். இரவில் கடின உணவுகள் எனக்கு ஒத்துக் கொள்வதில்லை. எனவே நான் இரவில் பழத்தைத் தவிர வேறு எதையும் உண்பதில்லை.
உங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ள நண்பன்,
சாரு
Comments are closed.