அன்புள்ள சாரு,
சாரு ஆன்லைனில் ”அன்பின் பிரார்த்தனை” படித்தேன். பதறிவிட்டேன் என்று தான் சொல்லவேண்டும். இன்னும் நடுக்கம் குறையவில்லை எனக்கு. அடிப்படையில் வெறுப்பிற்கு எதிரான எதிர்வினையாகத்தான் அதை எழுதினேன்.
மிகவும் சாதாரண நெகிழ்ச்சிக் கட்டுரை ஒன்றில் ‘உங்களை எனக்கு அவ்வளவாக பிடிக்காது’ என்று ஜெமோவுக்கு ரியாஸ் அஹமது சொல்லியிருந்ததை ”இன்று இந்த மனநிலையை கணிசமான இஸ்லாமியரிடம் காணமுடிகிறது” என்று அதை வெறுப்பு மனநிலையாக மாற்றியிருந்தார்.
இதற்கு பதில் சொல்லும் முகமாக ”நான் அடிப்படைவாதத்துக்கு எதிராக எழுதக்கூடியவன்” என்றெல்லாம் ரியாஸ் பதில் சொல்லியிருந்தார். மிகவும் எளிய முறையில் எழுதப்பட்ட கட்டுரையொன்று இவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டு, எழுதியவன் தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதன் மீதான எதிர்வினையாகத் தான் இந்த குறிப்பை எழுதினேன். ஆனால் அது குறித்த எந்த விவரமும் இல்லாமல் குறிப்பை எழுதியது பிழைதான்.
நான் ஜெமோவை வெறுக்கவில்லை. அந்த குறிப்பு என் தரப்பாக ஜெமோவை நோக்கி சொல்லப்பட்டதும் அல்ல.எழுத்தாளர்கள் என்றில்லை, பொதுவாகவே யாரையும் வெறுக்கும் மனநிலையைக் கடப்பதுதான் இலக்கியத்தின் வழி நாம் அடையும் தரிசனம் என்று நான் புரிந்துகொள்கிறேன். நான் எழுதுவதில் வெறுப்பின் நிழல் படிந்த வார்த்தைகள் இருந்து அதை நீங்கள் கண்ணுற்றமைக்காக நான் நாணுகிறேன். ”என் பிரியத்துக்குரிய கார்ல் மார்க்ஸ்” என்று நீங்கள் சொல்வதன் நிழலில் நின்றுகொண்டு எனது மன்னிப்பைக் கோருகிறேன்.
புதிய எக்ஸைலை இப்போதுதான் படித்து முடித்திருக்கிறீர்கள். அது பற்றிய உங்களுடைய அற்புதமான பதிவையும் பார்த்தேன். அதை எழுதிய கையா இந்த வெறுப்பின் பக்கத்தையும் எழுதியது? என்று கேட்டிருக்கிறீர்கள். இவ்வளவு கடுமையாகவெல்லாம் கேட்காதீர்கள் சாரு. நான் சிதறிப்போகிறேன்.
அன்புடன்,
கார்ல் மார்க்ஸ்.
அன்புள்ள கார்ல் மார்க்ஸ்,
நான் உடனடியாக பதில் எழுதியதன் காரணம், உங்கள் பதிவுக்கு லட்சுமி மணிவண்ணன் போட்டிருந்த காமெண்ட் தான். 40 ஆண்டுகளாக எழுதி வரும் என்னை, 20 ஆண்டுகளுக்கு முன்பே சீரியஸாக (ஆபத்து கட்டத்தில்) இருந்தார் என்று, “இப்போ பூட்ட கேஸு” என்று அர்த்தம் வரும் வகையில் எழுதியிருந்த லட்சுமி மணிவண்ணன் உங்களை நக்கல் அடித்திருந்த காரணத்தால் மன உளைச்சல் அடைந்தேன். அதனால்தான் பதில் எழுதினேன். அவர் என்னை பூட்ட கேஸ் என்று சொன்னதால் நான் வருத்தம் அடையவில்லை. அதை நான் கண்டு கொள்ளவும் இல்லை. பதிலும் எழுதத் தோன்றவில்லை. ஆனால் உங்களை நக்கல் அடித்த போது எனக்கு சில விஷயங்கள் ஞாபகம் வந்தன. சு.ரா. பள்ளியைச் சேர்ந்தவர்கள் யாரும் என்னுடைய ஒரு எழுத்தைப் பற்றிக் கூட எந்தக் கருத்தும் சொல்லவில்லை; அல்லது, முழுமையான புறக்கணிப்பை என் மீது செலுத்தினார்கள். இன்னமும் யாரும் என்னைப் பற்றி வெறுப்பாகக் கூட கருத்து சொல்லவில்லை. நீங்கள் ஏன் அந்தப் பள்ளியின் உள்ளே போய் கருத்துச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்கிறீர்கள் என்ற மன உளைச்சலில் எழுதிய கடிதம் அது. அவர்கள் நம்மை வெறுப்பது கூட இல்லை; திட்டுவது கூட இல்லை; விமர்சிப்பது கூட இல்லை. நாம் இருப்பதாகவே அவர்கள் கருதுவதில்லை. அப்படியிருக்க…
மற்றபடி, உங்கள் கடிதத்தின் மற்ற செய்திகளை இப்போதுதான் அறிகிறேன். பதற்றம் வேண்டாம். செய்வதற்கு எத்தனையோ வேலைகள் உள்ளன. குப்புசாமி மொழிபெயர்த்த இஸ்தான்புல் புத்தகத்தை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து முடிப்பதற்குள்ளேயே பாஸ்ஃபரஸையும் நீல மசூதியையும் பார்க்க இஸ்தம்பூல் கிளம்பி விட்டேன். மார்க்ஸ், வாசிக்கவும் விவாதிக்கவும் கடல் போல் உள்ளன. சேர்ந்து செய்ய வேண்டும். குப்புசாமி தொலைபேசில் – சற்று நேரத்துக்கு முன்னர் – ஹூஸுன் பற்றிப் பேசினார். இஸ்தம்பூலில் ஹூஸுன் என்ற அத்தியாயம் உள்ளது. படித்து விட்டீர்களா?
சாரு
Comments are closed.