அப்பா,
ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தேன், பழுப்புநிறப் பக்கங்களைப் படிக்கும் போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன என்று. தயவு செய்து நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள் எங்கே கிடைக்கிறது என்று சொல்லிவிடுங்கள். சலிப்பூட்டும் தமிழ்ச்சூழலில் இப்படிபட்ட நூல்கள் வந்திருந்தும் படிக்காமல் போனேன் என்பது கவலையைத் தருகிறது. இந்த கவலை கவலையாக மட்டுமே தேங்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். எப்படியாவது நீங்கள் குறிப்பிடும் சிறுகதைகளையும் நாவல்களையும் வாசித்தே ஆக வேண்டும். மண்ணில் தெரியுது வானம் நற்றிணை பதிப்பகம் மூலமாக வரவிருப்பதாக சொன்னீர்கள்; காத்திருக்கிறேன். அதேபோல கடைசியாகக் குறிப்பிட்டிருக்கும் அறுவடை, சட்டி சுட்டது போன்ற நூல்கள் எங்கே கிடைக்கும்? இந்தப் புத்தகங்களை இனி பெற முடியாது என கூறுவீர்களேயானால் தயவு செய்து பழுப்புநிறப் பக்கங்களை எழுதாதீர்கள்.
அன்புடன்,
வளன்
7.5.2015.
டியர் வளன்,
உன் வார்த்தைகளுக்கு நன்றி. அறுவடை, சட்டி சுட்டது எல்லாமே கிடைக்கிறது. நற்றிணை, கிழக்கு, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களில் கேட்டால் கிடைக்கும்.
சாரு.
சென்ற வாரத்தில் ஒருநாள் பழுப்பு நிறப் பக்கங்களுக்கு தினமணி.காம்-இலிருந்து சாருஆன்லைனுக்கு இணைப்பு தரும் சமயம் அந்தப் பக்கங்களுக்கு வரும் பின்னூட்டங்களைப் படிக்கும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது. உடனேயே அந்தப் பத்தியை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்து விட்டேன். முடிவு செய்த சில மணி நேரத்தில் பத்ரியிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்தது. கடிதத்தை படித்ததும் உற்சாகம் மீண்டும் தொற்றிக் கொண்டது. பத்ரியின் கடிதம்:
… நீங்கள் இப்போது எழுதிவரும் தொடரில் (பழுப்பு நிறப் பக்கங்கள்) உள்ள சில குறிப்பிட்ட பத்திகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அசோகமித்திரன் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏனெனில் அவருடைய அத்தனை கதைகளையும் பலமுறை தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவன். கரைந்த நிழல்கள் பற்றிய உங்கள் விவரிப்பு உண்மையிலேயே மிகப் பிரமாதமாக இருந்தது. சக்தி வை கோவிந்தன் பற்றிய உங்கள் பத்தியும் மிக மிக அருமை. பல நேரங்களில் இவற்றைக் குறித்தெல்லாம் உங்களுக்கு எழுதவேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நேரப் பிரச்னையில் வேறு எங்கோ போய்விடுவேன், பிறகு முற்றிலும் மறந்துபோய்விடும்.
இந்தத் தொடரைப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும். தமிழின் மிக முக்கியமான புத்தகமாக இது இருக்கும் என்பது என் நம்பிக்கை. ஒரு சமுதாயத்தின் மிகச் சிறந்த பங்களிப்பாளர்களை இதைவிட வேறு எந்த வகையிலும் சிறப்புச் செய்துவிட முடியாது. அடுத்த தலைமுறை இவர்களை மரியாதையோடும் மதிப்போடும் பார்ப்பதற்கும் இவர்களைக் குறித்து மேலும் தேடுவதற்குமான முதல் வாசலாக இந்த நூல் – இந்த பத்தித் தொடர் – இருக்கும், – மூல
இதை எழுதும் ஒரே காரணத்துக்காக ஒரு வாசகராக என் நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பத்ரி
28.5.2015.
நன்றி பத்ரி. இன்னும் யார்யார் பற்றியெல்லாம் எழுதலாம் என்று ஒரு யோசனை சொல்லுங்கள். நானும் மனதில் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். இருந்தாலும்…