இலவசம், இலவசம், இலவசம்!!!

இந்த விஷயத்தை நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.  எழுத சந்தர்ப்பமும் நேரமும் வாய்க்கவில்லை.  என்னிடம் இல்லாத இரண்டு விஷயங்கள் பணமும் நேரமும்.  என்னிடம் இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் இதுவரை பணம் கேட்டதில்லை.  ஒருமுறை ஒரு பிரபலமான ஓவியர் தன் மகனை அமெரிக்காவில் படிக்க வைப்பதற்காக ஐந்து லட்சம் ரூபாய் கடன் கேட்டார்.  நான்கு ஆண்டுகள் இருக்கும்.  என் வாழ்வில் நடக்கும் அபத்தங்களில் ஒன்றென நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.  திடீரென்று அந்த நபர் எனக்கு ஃபோன் செய்து எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரித்தார்.  எனக்கோ ஒன்றுமே புரியவில்லை.  அவரை நான் பார்த்தது கூட இல்லை.  பெயர் மட்டுமே தெரியும்.  வீட்டுக்கு வந்து சந்திக்க வேண்டும் என்றார்.  சந்திக்கலாம் என்று சொல்லி விட்டு விட்டேன்.  தொடர்ந்து இரண்டு மூன்று முறை போன் செய்து வீட்டுக்கு வரவா வரவா என்று கேட்டுக் கொண்டிருந்தார்.  எனக்கோ ஒன்றுமே புரியவில்லை.  இன்று நாளை என்று நாட்களை ஓட்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அவர் போனிலேயே விஷயத்தை உடைத்தார்.  ம்ஹ்ம்.  நம்மைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று பீதியுற்ற தருணம் அது.  இன்னொரு முறை இன்னொரு நபர் தன் திருமணத்துக்கு என ஐந்து லட்சம் கேட்டார்.  யார் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.  ஐந்து லட்சத்தையெல்லாம் நான் ஒருசேர என் வாழ்வில் பார்த்ததே இல்லை.  இந்த இரண்டு சந்தர்ப்பங்கள் தவிர வேறு யாரும் என்னிடம் பணமே கேட்டதில்லை.  ஆனால் போகிற போக்கில் எல்லோருமே என் நேரத்தைக் கேட்கிறார்கள்.  உண்மையில் என்னுடைய ஒரு மணி நேரம் லட்ச ரூபாயை விட மதிப்பு மிகுந்தது. அல்லது, விலை மதிக்க முடியாதது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.  இந்த நிலையில் ஒரு நண்பர் தன்னுடைய மகனுடைய திருமணத்துக்கு என்னை கோயம்பத்தூருக்கு வரச் சொல்லி அழைக்கிறார்.  உங்களுக்குப் புரியும்படி எப்படிச் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை.  அவர் சென்னையில் மாதம் நாலு லட்சம் ஊதியம் வாங்குபவர்.  ஒரே பிள்ளை.  வீடு வீடாக வாங்கிச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.  என்னுடைய தீவிர வாசகரும் கூட.  ஆனால் எனக்கென்று அவர் இதுவரை ஒரு காப்பி கூட வாங்கிக் கொடுத்ததில்லை.  மனித உறவுகளை லௌகீகமாகப் பார்ப்பவன் அல்ல நான்.  எனக்குப் பணம் பெரிதல்ல.  நான் சொல்ல வருவது என்னவென்றால், நட்பு என்பது ஒருவழிப் பாதை அல்ல என்பதுதான்.  ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் எனக்கு ஞானத்தைத் தருகிறார்.  பணத்தை விட மிகப் பெரியது அது.  அப்படி என்னுடைய தீவிர வாசகர் எனக்கு எதையுமே தந்ததில்லை.  வேண்டாம்.  எனக்கு எதுவும் தர வேண்டாம்.  இஷ்டமில்லாதவர்களிடமிருந்து எனக்கு எதுவுமே வேண்டாம்.  ஆனால் என்னிடமிருந்து என்னுடைய விலை மதிக்க முடியாத நேரத்தைக் கேட்கக் கூடாது அல்லவா?  கோயம்புத்தூருக்கு அவருடைய மகன் திருமணத்துக்கு நான் வர வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.  என்னுடைய மூன்று நாட்களை நான் அவருக்கு இலவசமாகத் தர வேண்டும்.  என்ன ஒரு பேராசை!  ஆனால் எனக்குப் பணம் தாருங்கள் என்று வருந்தி வருந்தி என் தளத்தில் எழுதுவதைப் பற்றி அவருக்கு அக்கறையே இல்லை.  என் புத்தகங்களைக் கூட விற்க விரும்புகிறேன் என்று எழுதியும் அவருக்குக் கவலை இல்லை.  ஆனால் கோயம்புத்தூர் வரை நான் செலவு செய்து கொண்டு அவர் மகன் திருமணத்துக்குப் போக வேண்டும்.  நேரம் மட்டும் அல்லாமல் என் பணத்தை வேறு செலவு செய்ய வேண்டும்!  எப்படிப்பட்ட பணம்?  என் வாசகர்களிடமிருந்து நான் யாசித்த பணம்!  பேராசை இல்லை.  அயோக்கியத்தனம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

இன்னொரு நபர்.  அவருக்கு இப்போது 24 வயது இருக்கலாம்.  அவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் காலத்திலிருந்தே எனக்குப் பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதுவார்.  நாற்பது ஐம்பது பக்கங்கள் கூட எழுதுவார்.  நான் அதையெல்லாம் படிப்பதே பெரிய விஷயம்.  ஆனாலும் மனிதாபிமானம் கருது அவ்வளவையும் பொறுமையாகப் படித்து விட்டு அவரைத் தொலைபேசியில் அழைத்து என் பதிலை விரிவாகப் பேசி விடுவேன்.  கல்லூரி வந்தார்.  கல்லூரி முதலாம் ஆண்டிலேயே ஒரு நாவலை வெளியிட்டார்.  கல்லூரிப் படிப்பு முடிந்ததும் இன்னொரு நாவல்.  அதையெல்லாம் படித்து விட்டுக் கருத்து சொல்லுங்கள் என்று நொய் நொய் என்று நொய்த்துக் கொண்டிருக்கிறார்.  நேரில் பார்க்கும் போதும் சரி, கடிதத்திலும் சரி, நாவலைப் படித்து விட்டீர்களா?  ஏன் என்னைப் பார்த்து ஒதுங்கி ஒதுங்கிப் போகிறீர்கள்?  நான் என்ன தவறு செய்தேன்?  இத்யாதி இத்யாதி கேள்விகள்.

இப்போது இங்கே விளக்குகிறேன்.  என் எழுத்து ஒரு இயக்கம்.  இசை, சினிமா, இலக்கியம், சமூகம், குடும்பம், தாம்பத்ய செக்ஸ் உறவு, நட்பு – எல்லாவற்றையும் விட ஆரோக்கியம் போன்ற வாழ்வின் எல்லா விஷயங்களிலும் என் எழுத்தின் மூலமாக மிகப் பெரிய ஞானம் கிடைக்கிறது.  இதுவே பலருக்கும் சரும வியாதியைத் தருகிறது என்றும் கேள்விப்படுகிறேன்.  சிலருக்கு – மிகச் சிலருக்கு முருங்கைக்காய் சாப்பிட்டால் தோல் தடித்து அரிக்க ஆரம்பித்து விடும் – அதேபோல் என் எழுத்து சிலருக்கு அலர்ஜியாக இருக்கிறது.  அது முருங்கையின் தவறு அல்ல; அவர்களுடைய பிரச்சினை அது.  முருங்கை பிரம்மம்.  அதே போன்றதுதான் என் எழுத்தும்.  என் எழுத்து இயக்கத்துக்காக பல நண்பர்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு வருகின்றனர்.  டாக்டர் ஸ்ரீராமின் கடிதத்தைக் கவனியுங்கள், புரியும்.  அராத்துவைக் கண்டால் ரொம்பப் பேருக்கு ஆக மாட்டேன் என்கிறது.  சென்ற புத்தக வெளியீட்டு விழாவின் போது (புதிய எக்ஸைல்) சென்னை நகர் முழுவதும் மிக அழகிய விளம்பரத் தட்டிகளைக் கட்டச் செய்தார்.  ஒரு லட்சம் ரூபாய் செலவு.  இன்னும் நான் அதற்கு அவருக்கு ஒரு நன்றியோ ஒரே ஒரு பாராட்டு வார்த்தையோ கூட சொல்லவில்லை.  அவர் அதை எதிர்பார்ப்பவரும் அல்ல.  (இன்னும் பல இடங்களில் அந்தத் தட்டிகள் அப்படியே இருக்கின்றன.)  இவ்வளவுக்கும் அவர் செல்வந்தர் அல்ல.  மத்தியதர வர்க்கம்.  விமானத்தில் செல்லாமல் ரயிலில் செல்பவர்.  என்னுடைய அன்பு மகன் ஸாமிடம் பணம் இல்லை.  தமிழ் சினிமா நாயகர்கள் அத்தனை பேரையும் விஞ்சக் கூடிய அழகும் உடற்கட்டும் வாய்ந்தவர்.  சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடுகிறார்.  இன்னும் கிடைக்கவில்லை.  எழுத்தாளரும் கூட.  நான் மருத்துவமனையில் படுத்துக் கிடந்த போது ஒரு வார காலமும் என்னை இரவு நேரங்களில் கவனித்துக் கொண்டார்.   நான் புரண்டு படுத்தால் என்ன சாரு என்று எழுந்து விடுவார்.  இரவில் கடுமையாகப் பசிக்கும்.  சாத்துக்குடியை உரித்துப் பிழிந்து கொடுப்பார்.  ஆப்பிள் நறுக்கித் தருவார்.  ஸாம், உனக்கு நான் எதையும் தர முடியாது.  உன்னுடைய நாவலைக் கூட நன்றாக இல்லை என்று திட்டி விட்டேன்.  ஆனால் நான் உனக்குத் தரக் கூடியது என் எழுத்து மட்டும்தான்.  கூட, என் நட்பு.  நான் இறந்த பிறகு சாரு என் தந்தை என்று நீ சொல்லிக் கொள்ளலாம்.  வேறு எதையடா நான் உனக்குத் தர முடியும், சொல்?

கார்ல் மார்க்ஸ், நிர்மல், ஜெகா, கணேஷ் அன்பு, டாக்டர் ஸ்ரீராம், செல்வகுமார், கருப்பசாமி, அருணாசலம் என்று என் பொருட்டுத் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவு செய்யும் நண்பர்கள் ஏராளம்.  என் அறிமுகமே இல்லாமல் நான் மருத்துவமனையில் இருப்பதை முகநூலில் படித்துத் தெரிந்து கொண்டு மருத்துவமனை வந்து நான்கைந்து நாட்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து   பகலில் என்னோடு தங்கி என்னைக் கவனித்துக் கொண்ட நண்பர் இம்மானுவல்.  ஆனால் ஒன்பதாம் வகுப்பிலிருந்து என்னிடம் கற்றுக் கொண்ட என் நண்பன் என்ன செய்தான் தெரியுமா?  மருத்துவமனைக்கு வந்தார். இரண்டு மணி நேரம் பேசினார்.  போய் விட்டார்.  பெரியார் என்று ஒரு நண்பர் புத்தக வெளியீட்டு விழாவின் போது தெருத் தெருவாக போஸ்டர் ஒட்டியது பற்றியது எழுதியிருக்கிறேன்.  ஆனால் இந்த எழுத்தாளர் என்னிடம் அப்போது கூட உங்களுக்கு உதவி எதுவும் தேவையா என்று கேட்கவில்லை.  அப்போது எனக்கு ஆள் பலம் தேவையாக இருந்தது.  இணையத்தில் கூட எழுதினேன்.  அப்போதும் எழுத்தாளர் அசையவில்லை.  மருத்துவமனைக்கு வந்த போது கையில் ஒரு பழம் கூட வாங்கி வரவில்லை.  பரவாயில்லை.  அது தவறு அல்ல.  ஆனால் என் நாவலைப் படியுங்கள் என்று என்னை வற்புறுத்திக் கொண்டே இருப்பது அயோக்கியத்தனம்.  என்னுடைய நேரத்தைக் கேட்கிறாயே, நீ எனக்கு என்ன செய்தாய்?  தன்னுடைய நாவலை படிக்கத்தானே சொன்னார் என்று நினைத்து அதைக் கூட மன்னித்து விட்டேன்.  ஆனால் அந்த நாவல் வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்ததைத்தான் என்னால் மன்னிக்க முடியவில்லை.  என்னுடைய நேரத்தைக் கேட்கிறாயே, நீ எனக்கு என்ன செய்தாய்?  (இதை வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜி வெள்ளைக்காரனிடம் கேட்கும் தோரணையில் கேட்டுப் பார்க்கவும்.)  நான் இன்னும் என் முன்னோடிகளாக ஹெப்சிபா ஜேசுதாசன், நீல. பத்மநாபன் போன்றவர்களையே படித்ததில்லை; என் சகாவான ராமகிருஷ்ணனின் சஞ்சாரியையே படிக்கவில்லை.  உன்னைப் போல் ஒரு சுண்டைக்காய் எழுதிய குப்பையை எல்லாம் ஏன் படிக்க வேண்டும்?  எனக்காக உன் விரலைக் கூட அசைக்க மாட்டாய், ஆனால் நான் உன் குப்பைகளைப் படிக்க வேண்டும்; உன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர வேண்டும்.  என்னடா லாஜிக் இது?  இந்தத் தம்பியை எனக்கு முதல் சந்திப்பிலேயே பிடிக்காமல் போய் விட்டது.  ஏன் என்றால், அவர் பனிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வாசகர் வட்டச் சந்திப்புக்காக சிறுமலைக்கு வந்தார்.  சரி.  நல்லது.  ஆனால் அங்கே வந்து எல்லோருக்கும் முன்னிலையில் நீங்கள் என் வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார்.  அப்போது நான் சிறுபிள்ளை என்று மன்னித்து விட்டேன்.  ஆனால் இப்போது 24 வயதிலும் அவர் திருந்தவில்லை.  உன் வீட்டுக்கு நான் வர நீ என்ன செய்திருக்கிறாய்?  சாதனையாளனா?  அல்லது, எனக்காக வியர்வை சிந்தினாயா?  எதற்காக நான் உன் வீட்டுக்கு வர வேண்டும்?  என்னைத் தன் வீட்டுக்கு அழைப்பவர்கள் மீது எனக்குக் கொஞ்சம் அலர்ஜி உண்டு.  ஏன் என்னை வீட்டுக்கு அழைக்கிறீர்கள்?  நான் என்ன சினிமா நடிகனா?  உங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கோ, பெண்களுக்கோ இலக்கிய வாசிப்பே இருக்காது.  இந்த நிலையில் நாணிக் கோணிக் கொண்டு ”உங்களை நான் விஜய் டிவியில் பார்த்திருக்கேன்” என்று உங்கள் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் சொல்வதை நான் கேட்டு ஙே என்று விழிக்க வேண்டுமா?

எனவே, என்னைத் திருமணத்துக்கும், காதுகுத்துக்கும், பூணல் கல்யாணத்துக்கும், புத்தக வெளியீட்டு விழாவுக்கும் கோவை, திருநெல்வேலி என்று அழைக்கும் நண்பர்கள் என்னுடைய எழுத்து இயக்கத்துக்கு என்ன அளித்தீர்கள் என்பதைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் – போன்ற அக்காலத்தில் எழுதப்பட்டது termpapermaster.com.

பலமுறை சொல்லியதை இப்போது மீண்டும் சொல்கிறேன்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக மூன்று நண்பர்கள் மாதாமாதம் தலா 200 ரூ, 300 ரூ, 500 ரூ அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.   இதில் இருவரைச் சந்தித்திருக்கிறேன்.  வேண்டாங்க என்று பணிவுடன் சொன்னேன்.  அவர்கள் ஆள் காட்டி விரலை வாயில் வைத்து உஷ் என்றார்கள்.  அவர்களின் மாத ஊதியம் பத்தாயிரத்துக்கும் கீழே.

என் மலேஷியப் பயணம் ரத்தாகி விட்டது.  தென்னமெரிக்கப் பயணத்துக்காகப் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.  “நீங்கள் சிலே செல்லாவிட்டால் அது வரலாற்றுப் பிழை” என்றார் ஜெகா.  சிலே பற்றி அவ்வளவு எழுதியிருக்கிறேன்.  Nicanor Parra, Dr. Allende, Battle of Chile, Isabel Allende, Violeta Parra என்று எக்கச்சக்கமான விஷயங்களையும் ஆளுமைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறேன்.  1980 ஆம் ஆண்டு படிகள் பத்திரிகையில் சே குவேரா பற்றி நானும் ஒரு நண்பரும் இணைந்து எழுதிய நீண்ட கட்டுரையில் தான் முதல் முதலாக சே குவேரா பற்றித் தமிழில் பிரஸ்தாபிக்கப்பட்டது.  அதற்கு முன்னால் சே குவேரா என்ற பெயர் தமிழில் எழுதப்பட்டதே இல்லை.  இதற்காக நான் தில்லி டிஃபென்ஸ் மினிஸ்ட்ரி நூலகத்திலிருந்து கெரில்லா வார்ஃபேர், பொலிவியன் டயரி போன்ற மூல நூல்களை எடுத்துப் படித்தேன்.  ஆண்டு 1980.

இந்த வார விகடனில் நையாண்டிச் சித்திரப் பக்கங்களில் அடியேனைப் பற்றி சில விஷயங்கள் வந்துள்ளது.  ரசித்தேன்.  ஆனால் அதில் உள்ள என்னுடைய வங்கிக் கணக்கு எண் பிழையானது.  சரியான எண்ணைக் கீழே தருகிறேன்.  ஆமாம், லூசுப் பையனுக்கு நான் தாடி வைத்துக் கொண்டது இன்னும் தெரியாதா?  நாலு வருஷம் ஆயிற்றே?

என் பயணத்துக்கும் காமராஜர் அரங்கம் முன்பதிவு செய்யவும் பணம் தேவை.  முடிந்தவர்கள் அனுப்பவும்:

A/c holder Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account Number : 911010057338057

Branch Name: Mylapore

IFSC code : UTIB0000006

***

ICICI account No. 602601 505045

Name : K. Arivazhagan

T. Nagar branch.