இதைப் படிப்பதற்கு முன் இலவசம் (1), இலவசம் (2) ஆகிய கட்டுரைகளைப் படித்து விடவும். அப்போதுதான் தொடர்ச்சி கிடைக்கும். அதைக் கூடத் தேடிப் படிக்க முடியாதவர்கள் இதை மட்டுமே படித்து இன்புறலாம். பின்வருவது ஸாம் தன்னுடைய முகநூலில் எழுதியிருப்பது:
”இலவசம் இலவசம் இலவசம்” – கட்டுரையைக் குறித்து நான் முகநூலில் பகிர்ந்த விஷயத்தை கீழே இணைத்திருக்கிறேன் சாரு.
என்னுடைய அன்பு மகன் ஸாமிடம் பணம் இல்லை. தமிழ் சினிமா நாயகர்கள் அத்தனை பேரையும் விஞ்சக் கூடிய அழகும் உடற்கட்டும் வாய்ந்தவர். சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடுகிறார். இன்னும் கிடைக்கவில்லை. எழுத்தாளரும் கூட. நான் மருத்துவமனையில் படுத்துக் கிடந்த போது ஒரு வார காலமும் என்னை இரவு நேரங்களில் கவனித்துக் கொண்டார். நான் புரண்டு படுத்தால் என்ன சாரு என்று எழுந்து விடுவார். இரவில் கடுமையாகப் பசிக்கும். சாத்துக்குடியை உரித்துப் பிழிந்து கொடுப்பார். ஆப்பிள் நறுக்கித் தருவார். ஸாம், உனக்கு நான் எதையும் தர முடியாது. உன்னுடைய நாவலைக் கூட நன்றாக இல்லை என்று திட்டி விட்டேன். ஆனால் நான் உனக்குத் தரக் கூடியது என் எழுத்து மட்டும்தான். கூட, என் நட்பு. நான் இறந்த பிறகு சாரு என் தந்தை என்று நீ சொல்லிக் கொள்ளலாம். வேறு எதையடா நான் உனக்குத் தர முடியும், சொல்?
– சாரு நிவேதிதா.
2012ல் சாரு நிவேதிதா வாசகர் வட்ட சந்திப்பு சிறுமலையில் நடந்தது. சுமார் 50 நண்பர்கள் கலந்துகொண்ட முக்கியமான சந்திப்பு அது. முதல் முறையாக சாருவை அங்குதான் சந்தித்தேன். வழக்கமான அறிமுகங்களுடன் உற்சாகமான நகர்ந்த சந்திப்பு இரவில் விசேஷமாக களைகட்டியது. ஆட்டம், பாட்டு, குடி, இலக்கியம், கேம்ப் ஃபயர் என்று புதுப் பாணியான இலக்கிய கூட்டத்தை அன்றுதான் தெரிந்துகொண்டேன்.
விடிந்ததும் நான்கைந்து வட்ட நண்பர்கள் வந்து ‘சாம் நீங்கள் சாருவுக்கு ரொம்ப க்ளோசா ! நீங்கல்லாம் அடிக்கடி சந்திப்பீங்களா. சென்னைல எங்க சந்திச்சிக்குறீங்க’ போன்ற புதிரான கேள்விகளைக் கேட்டார்கள். உங்களையும், சாருவையும் சந்திப்பது இதுதான் முதல்முறை என்ற பதில் அவர்களை ஆச்சரியப்படுத்தியது. காரணம் முந்திய இரவில் சபை வட்டமாக அமர்ந்து விவாதம் செய்துகொண்டிருந்தபோது நான் சாருவுக்கு பின்னால் நின்று அவரது விரல்கள் ஒவ்வொன்றையும் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தேன்
பரிசேயன் ஒருவன் வீட்டில் இயேசுக் கிறிஸ்து போஜனம் பண்ணிக்கொண்டிருப்பதை அறிந்த அந்த ஊரின் பாவியான ஒரு ஸ்திரி, ஒரு பரணியில் பரிமளத் தைலத்தைக் கொண்டுவந்து இயேசுவின் பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து தன் தலைமயிரினால் துடைத்து அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து பரிமளத்தைலத்தைப் பூசினாள் – லூக்கா 7:37.
தன் பாவங்களிலிருந்து விடுதலை வேண்டி ஸ்திரியானவள் செய்த பணிவிடைக்கு பிரதிபலனாக இயேசு “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. நீ சமாதானத்தோடே போகலாம்” என்றார் – லூக்கா 7.50.
பாவம் மன்னிக்கப்பட்டதோடு அவள் சமாதானம் அடைந்து விடுவாள் என்ற நம்பிக்கை எனக்குச் சுத்தமாக இல்லை. மனித மனம் பாவம் என்று சமூகம் சொல்பவைகளைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டேயிருக்கும். தற்செயலாக இயேசுவைக் கண்டதால் அதுவரைக்குமான பாவங்களிலிருந்து அவள் விடுதலை பெற்றிருக்கலாம். இயேசு அந்த ஊரை விட்டு வெளியேறியதும் அவள் என்ன செய்வாள் ? அடுத்து செய்யப்போகும் பாவங்களைக் குறித்து யாரிடம் மன்றாடுவாள்! இதைத்தான் எழுத்தாளன் வாசகனுக்குப் புரிய வைக்கிறான். பாவ – புண்ணியங்களைப் புரிந்தறியும் ஞானத்தைக் கொடுப்பவன் எழுத்தாளன். எளிய மனங்களில் இயற்கையாகத் தோன்றும் அலைக்கழிதலை குற்றவுணர்ச்சியாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று தெளிவுபடுத்துபவன் எழுத்தாளன். மதம் என்னை சிறையிட்ட போது அதிலிருந்து விடுதலை வாங்கித் தந்தவன் எழுத்தாளன். நீங்கள் என் மன விடுதலையின் முக்கியஸ்தர் சாரு.
சித்தனாக, ஞானியாக, குழந்தையாக, ஒரு நல்ல மனிதனாக இரு. குடி, கொண்டாடு, வாசி, வாழ் என்று ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் வார்த்தைகள் எனக்கு பைபிளுக்கு நிகரானது. என் அன்பு அந்த ஸ்திரியைக் காட்டிலும் பல மடங்கு பெரியது சாரு. பாவத்திலிருந்து மன்னிப்பு வேண்டாம்; எது பாவம், எது குற்ற உணர்ச்சி என்ற புரிதலே ஞானம். அதை எனக்குத் தரும் எழுத்தாளனுக்கு அவன் இஷ்டப்பட்ட எதையுமே நான் தந்ததில்லை. நீங்கள் என்னை மகன் என்று உரிமையோடு சொல்வதற்கு நிகராக எந்த ஒன்றையும் உங்களூக்குச் செய்ததில்லை.
2013 – உங்கள் பிறந்தநாள் விழாவை மகாபலிபுரத்தில் கொண்டாடிக் கொண்டிருந்தோம். நெருங்கிய நண்பர்கள் மட்டுமே சந்தித்துக் கொண்ட நிகழ்வு அது. மொத்தமாக 15 நண்பர்கள். சிறப்பு விருந்தினராக ஒரு சங்கீத வித்வான். நள்ளிரவில் கர்னாடக சங்கீதத்தை கடல் இரைச்சலைத் தாண்டி எதிரொலிக்கும்படி அசத்திக் கொண்டிருந்தார் வித்வான். நேரம் செல்லச் செல்ல சாருவும் வித்வானும் இசையோடு கலந்து வேறு உலகிற்கு சென்று விட்டார்கள். அலைபாயும் என் மனதிற்கு சர்ச்சைகளும் விவாதங்களும் அவசியமாகப்பட்டது. கர்னாடக இசையை மூன்றுமணி நேரம் கேட்கும் பொறுமையில்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த என்னை ‘சாம் இருடா ஒரு ஆட்டம் ஆடலாம், ஆனா கொஞ்சம் அமைதியா என் பேச்சக் கேளுன்னு’ ஆட்டையைக் கலைக்க என்னை நாண் பூட்டினார் அராத்து.
அடுத்து நடந்த களோபரங்கள் என் விருப்பதிற்குத் தீனி போட்டது. ‘சாரு ஒரு நிமிஷம்…..இசையைப்பத்தி சாம் ஏதோ பேச விரும்புறான், சார்(வித்வான்) இருக்குறப்போ அவன் என்னா பேசுறான்னு பாப்போம்னு’ பச்சை விளக்கை எரியவிட்டார் அராத்து. நடந்தவைகளை அருகிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த நீங்கள் என் இடத்தில் யாராக இருந்தாலும் மோசமாக வினையாற்றி, இடத்தைக் காலி பண்ணச் சொல்லியிருப்பீர்கள் சாரு.
”Michel Jackson, Enrique Iglesias பாடல்கள் எல்லாம் என்ன ராகம். எங்கே இருந்தோ பாடுற அவங்களை எனக்குத் தெரியுது, உங்களைத் தெரியலையே சார்! Bob Marley தெரியுமா”
“Show me the meaning பாட்டைப் பாடி இந்தப் பாட்டு என்ன ராகம். இதுல ஒரு passion இருக்கு, நீங்க பாடினதை ஒரு மணிநேரத்துக்கு மேல ரசிக்க முடியலையே ஏன். ஒரு கர்னாடக சங்கீதம் பாடுங்க, அதே ராகத்துல ஒரு சினிமா பாட்டு பாடுங்க” இதுபோல பல சீண்டல்களை மூட்டி நள்ளிரவு வரைக்கும் அவரை வெறி ஏற்றிக் கொண்டிருந்தோம். அவர் எங்களுடன் பொறுமையாக உரையாடிவிட்டு படுக்கச் செல்லும்போது மணி 4. இத்தனைக்கும் அவர் மது அருந்தவில்லை. காலையில் கண்விழித்தபோது குற்றவுணர்ச்சி பின்னியெடுக்க அவரிடம் மன்னிப்புக் கேட்க ஓடினேன். அதிகாலையில் அறையைக் காலி செய்து கிளம்பிவிட்டார் என்ற செய்தியை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை சாரு. இதையெல்லாம் நீங்கள் சகித்துக்கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது.
உச்சமாக நடந்தது இமையமலை சந்திப்பில் கடைசி நாள் விவாதம். நடந்ததை முழுமையாக நான் எழுத விரும்பவில்லை. சில விஷயங்களை மட்டும் ஞாபகப்படுத்துகிறேன் சாரு. மொத்தம் 13 நண்பர்கள். அமர்ந்திருப்பது லே-லாடக். இந்தியாவில் ராணுவ ஆட்சி நடைபெறுவது போன்ற தோற்றத்தைத் தரும் பாதுகாப்பு ஏற்பாடுகள். 50 அடிக்கு ஒரு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரன். புல்லட்டில் ராணுவ வீரர்கள் நகர எல்லைக்குள் அலைந்து திரிந்தபடி இருப்பார்கள். நகரமே கொள்ளை அழகில் காட்சியளித்தாலும் 11 மணிக்கு மேல் வெளியே செல்வது ஆபத்து. அத்தனைக் கட்டுப்பாடுகள் நிரம்பிய நகரத்தில் அன்றைய விவாதம் முடித்து உறங்கும்போது மணி 5. அறை அதிர சொற்கள் சிதறிக்கொண்டிருக்க, விசில் சத்தமும், ஓயாத சச்சரவும் உங்களை நிலைகுலையச் செய்தது. எத்தனையோ முறை ‘மெதுவாகப் பேசுங்கள், மெதுவாகப் பேசுங்கள்’ என்று எச்சரிக்கை செய்தீர்கள். அராத்து வழக்கம் போல என்னை எரியூட்ட வானுயரத்திற்குப் பற்றி எரிந்து கொண்டிருந்தேன். விவாத இறுதியில் பொது இடத்தில் எல்லை மீறல் குறித்து நீங்கள் மனங்கசந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. ஆனால் மறுநாள் காலையில் ‘என்ன சாம் நல்ல தூக்கமா’ என்று சாதாரணமாக நடந்து கொண்ட அந்த அசாதாரண பாவம் என்னை வியக்க வைத்தது.
நான் உங்களிடம் காட்டுவது மாசற்ற அன்பு சாரு. காதலும், நட்பும் இரண்டறக் கலந்த ஒன்று. அது எப்படிப் புரிய வேண்டுமோ அப்படியே உங்களுக்குப் புரிந்து போனதுதான் மகிழ்ச்சி. பிள்ளையைப் பிள்ளை என்று சொல்லாத நீங்கள் என்னைக் குறித்து உதிர்த்த வார்த்தைகளைப் பொக்கிஷமாக சேகரித்துக் கொள்கிறேன். இதுவரை என் நினைவிலிருந்து எழுத முடிகிற விஷயங்களை எழுதிப் பார்த்தேன். என்னால் ஏற்பட்ட எல்லா கலவரங்களையும், மனக் கசப்புகளையும் மன்னித்ததோடு, just like that என்று கடந்துபோன உங்கள் நட்பைத் தவிர பெரிதானது ஒன்றுமில்லை எனக்கு. நான் வெறுங்கையன் சாரு. உங்கள் மீது வைக்கும் விமர்சனம் எல்லாவற்றிக்கும் நானே சாட்சி. இதுவரை சில்லறைகளைக் கூட உங்கள் நலனுக்காகவோ, சந்தோஷத்துக்காகவோ செலவழித்ததில்லை. ஆனால் நீங்கள் நண்பனாக என்னுடன் செலவளித்த நேரம் அத்தனையும் என் வருங்கால வளத்திற்கான முதலிடுகள் சாரு. எல்லாவற்றிக்கும் மகுடமாக என்னை ’மகன்’ என்று உரிமை கொண்டாடும் என் இலக்கியத் தகப்பனை ஆயுள் முழுவதும் கனம் பண்ண காலம் இருவருக்கும் வாய்ப்பழிக்க வேண்டுமென இயற்கையைப் பிரார்த்திக்கிறேன்.பெரிதினும் பெரிது கேள் என்பார்கள். நான் கேளாமல் பெற்றுக்கொண்டேன். Love u Charu.
***
இனி வருவது அடியேன் சாரு எழுதுவது: ஸாம், இவ்வளவு அழகாகத் தமிழ் எழுதத் தெரிந்த இளைஞர்கள் இன்று கம்மி. அராத்துவின் தமிழைப் படிக்கவே முடியவில்லை. ஆனால் உள்ளடக்கத்தில் ஆள் அசத்தி விடுகிறார். அதனால்தான் திரும்பத் திரும்ப அராத்து எதை எழுதினாலும் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு சுவாரசியமாக எழுதக் கூடிய நீங்கள் நாவலில் ஏன் சொதப்புகிறீர்கள்? உடனே தமிழச்சி பாராட்டினாங்க, அசோகமித்திரன் பாராட்டினாரு, தி. ஜானகிராமன் பாராட்டினாருன்னு சொல்லக் கூடாது. அவர்கள் பாராட்டுவதையெல்லாம் ஆசீர்வாதமாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழச்சி எதையாவது எப்போதாவது விமர்சித்து இருக்கிறாரா? சரி, விடுங்கள். சாரு கம்யுவையே திட்றாரு, என்னையும் திட்றாருன்னு நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். உங்கள் குறிப்பில் இருந்த லகுவான தன்மைதான் இப்படி என்னை ஆதங்கப்பட வைக்கிறது. உங்களிடம் எனக்கு ரொம்பப் பிடித்ததே உங்கள் நாவலை நான் திட்டியும் நீங்கள் அதைப் பொருட்படுத்தாமல் என்னோடு எப்போதும் போல் இருப்பதுதான். உலகில் அராத்துவுக்கு அடுத்து உங்களைத்தான் இப்படிப் பார்க்கிறேன். அராத்துவும் திட்டினால் பொருட்படுத்தமாட்டார்.
சரி ஸாம், ஏதோ “என்னால் ஏற்பட்ட மனக்கசப்பு” என்று எழுதியிருக்கிறீர்கள். அது என்ன என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அப்படி ஒரு மனக்கசப்பும் இல்லை. ஒருநாள் பாத்ரூம் போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு காலையில் ஏழரை மணிக்கு உள்ளே போன கணேஷ் அன்பு ஒன்பது மணிக்கு வெளியே வந்த போதே அவருக்கு மாலை போட்டு வரவேற்றவர்கள் நாம். நமக்கெல்லாம் மனக்கசப்பு எப்படி வரும்?
சமீபத்தில் ஒரே படத்தின் மூலம் ரஜினி ஹைட்டுக்குப் போன ஒரு நடிகர் பழைய நண்பர்கள் போன் செய்தால் போனையே எடுப்பதில்லை என்று ஒரு நண்பர் மூக்கால் அழுதார். உச்ச நடிகர் ஆகி விட்டால் நீங்கள் அப்படி ஆகி விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இப்போதைய நிலவரம் என்னவென்றால், நான் குடியை விட்டதும் நண்பர்கள் யாரும் என்னைத் தொடர்பு கொள்வதில்லை. நானாக ஃபோன் செய்தால் தான் உண்டு. ஆதங்கத்துடன் கேட்டால் எல்லோரும் சொல்லி வைத்துக் கொண்டு ஒரே பதிலையே சொல்கிறார்கள். ”நீங்க பிஸியா இருக்கிறதால எதுக்குத் தொந்தரவு செய்யணும்னுதான்.” ஸ்ரீராம் ஒருவர்தான் விதிவிலக்கு. தினமும் போன் செய்கிறார். என் புத்தகங்களை 25000 பிரதிகள் விற்கும் வரை அவர் ஓய மாட்டார் போலிருக்கிறது. Myth of Sisyphus தான் ஞாபகம் வருகிறது. டாக்டர் அல்லவா, அவருக்கான உடல்/மனப் பயிற்சியாக போகட்டும் என்று விட்டு விட்டேன். அவரும் அமெரிக்கா போய் விட்டால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் ஒரு ஆத்மா இருக்கிறது என்று அங்கே கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம். தொடர்பில் இருந்தால். ஆனால் எனக்காக இதுவரை தன் வாழ்நாளில் அதிக நேரத்தைச் செலவிட்டது என்ற அளவில் கிட்டத்தட்ட ராஜேஷையும் ஷிவாவையும் மிஞ்சி விடுவார் போலிருக்கிறது. எனக்காக அவர் செய்த விக்கிபீடியா Bioவைப் பார்த்தால் அது தெரியும். உலகில் எந்த எழுத்தாளனுக்கும் இப்படி ஒரு விக்கிபீடியா அறிமுகம் கிடையாது. அது டாக்டர் ஸ்ரீராமின் சாதனை.
நீங்கள் நடிகனாகவும் நாவலாசிரியனாகவும் வாழ்த்துக்கள் ஸாம்…
சாரு