நிர்பயா என்கிற ஜோதி சிங்

நிர்பயா பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன் அதைப் பற்றி சில கருத்துகள்…
எந்தப்பெண்ணாவது இதை ஒட்டிய ஒரு சீரியஸான குரலை பதிவு செய்துள்ளாரா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இப்படியான வன்முறைகளை சிறியது முதல் பெரிய அளவில் பெண்கள் அன்றாடம், பல மூலைகளில், பல அளவுகளில் எதிர்கொண்டு தான் வருகிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளதற்கெல்லாம் போகவே வேண்டியதில்லை. தொன்று தொட்டே பெண் மீதான வன்முறை இருந்துகொண்டே தான் வந்துள்ளது. அதற்கு, சமூகத்தின் விளிம்புநிலையிலிருது தான் ஒருவன் வரவேண்டுமென்றில்லை.  அப்படி எத்தனை வகையான துன்பங்களை ஒரு பெண் பாலியல் தொழிலில் சந்திக்கிறாளோ எத்தனை உயர்ந்த இடத்திலிருந்தும் அந்த ஆண் வந்திருக்கலாம்… அல்லது காதல் என்ற போர்வையில் எத்தனை பெண்கள் இப்படியான துன்பத்திற்கு ஆளாகிறார்களோ… உதாரணத்திற்கு பீப் சாங் நல்ல வர்க்கத்திலிருந்து வந்தவரால் எழுதப்பட்டது தானே.. அதுவும் வன்முறையின் ஒருவடிவம் தானே..
மேலும் அவன் கொலைத் தொழில் புரிந்தாலோ, தீவிரவாதியாக மாறினாலோ  வேண்டுமென்றால் கார்ல் மார்க்ஸ் கூறுவது பொருந்தலாம். ஆனால் ஒரு பெண்ணை அப்படி நடத்துவதற்கு அது காரணமாக இருக்கமுடியாது, அல்லது அது மட்டும் காரணமாக இருக்க முடியாது. பெரிய இடத்திலிருந்து, இவன் வரை பெண் மேலான பார்வையை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேணும் அப்படி யோசித்து யாரும் எழுதியது போல் நான் பார்க்கவில்லை.
இப்படியெல்லாம் ”மத்தியதர வர்க்க மனநிலையின் வன்முறை” என்றெல்லாம் பெண்களுக்கு இல்லை(அது வேறு context புரிகிறது), பெண்களுக்கு எல்லா வர்க்கத்திலிருந்தும் அநியாயம் மட்டும் தான் கிடைக்கும். ஒருவேளை துன்பப்படும் பெண்களின் வர்க்கமும் வேண்டுமானால் மாறுபடலாம். அதனால் ”அவனைப்போன்றவர்கள் எங்கிருந்து டெல்லிக்கு வருகிறார்கள்? ” என்று குறிப்பிட்டு அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு எழுதியிருப்பதின் அடிப்படையே பொய்த்துவிடுகிறது, பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதி என்று பார்க்கும் போது.தண்டனை என்று பார்த்தால் அவன் உயர் வர்க்கத்தைச் சேராதவன் என்பதால்  சட்டம் உடனடியாகத் தன் கடமையைச்செய்துள்ளது. ஜெ, சல்மான் மற்றும் பலர் விடுதலை அடைந்ததைப்போல் இதுவும் சட்டத்தின் ஓட்டை. அவ்வளவே… ஆனாலும் அந்த ஓட்டை அடைக்கப்படத்தான் வேண்டும், இன்றைய 12, 13 வயது குழந்தைகள் இவற்றைத்தெரிந்து கொண்டு தர்க்கரீதியாக யோசித்தெல்லாம் குற்றம் புரியப்போவதில்லையென்றாலும், வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்பது போல், அவனைத் தண்டிப்பதால் ஏதும் ஆகப்போவதில்லை என்று பேசுவது அபத்தம்.  எல்லாமே சரியாக இருக்க வேண்டுமென்பது நடைமுறையில் சாத்தியம் ஆகாது என்று அறிந்தும், எல்லாமே சரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் தவறுகளைக்கண்டு கொள்ளக்கூடாது என்று ஆசைப்படுவது தான் பக்கா மத்தியதர வர்க்க நிலை. அதுவும் அது “பிழைப்புவாத மத்தியதர வர்க்க நிலை” என்று தான் நான் கூறுவேன். மேலும் அந்தச் சட்டத்தை ஆழமாகக் கவனித்துவிட்டுப் பேசவேண்டும்.  14 வயது நபர் சாதாரண குற்றம் புரிவதும், இதுவும் ஒன்றில்லை. அது சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதைக்கவனிக்காமல் பேசிக்கொண்டிருப்பது நியாயமில்லை.

இப்படிப் பேசுபவர்களெல்லாம் தனக்கு அதிகம் தெரியும், இத்தனை நடக்குது ஏதும் சரியில்லை, இது மட்டும் சரியாகி என்னாகப்போவது என்று பேசுவது திறமையான புத்திசாலிகளின் பிழைப்புவாதமாகத் தான் நான் பார்க்கிறேன். இவர்கள் ஏதோ ஒரு வகையில் சமாதானப்படுத்திக்கொண்டு வேறு வேறு வழிகளில் சிறிய, மிகச்சிறிய தவறுகளைச் செய்துகொண்டு இப்படி எழுதி தன்னை சமாதானப்படுத்திக்கொள்பவர்களாக இருக்கலாம். ஏன் அப்படிச்சொல்கிறேனென்றால் ஒருவேளை அவர்கள் அப்படிப்பார்க்கவில்லையென்றால் நான் யோசித்ததைப்போல் பெண்ணுக்கு எல்லா பக்கங்களிலும் தானே வன்முறை என்று தான் முதலில் யோசித்திருக்கவேண்டும். எந்த ஆணும் நீங்கள் வரை அப்படி யோசிக்கவில்லை.  அதுவே பெண் எழுத்தின் தேவையை இங்கே உணர்த்துகிறது. இந்த அதிபுத்திசாலிகள் ஒரே டெம்பிளேட்டில் எல்லாவற்றையும் அடைப்பார்கள் ”இந்தியா, ஏற்றத்தாழ்வு, சாதி, ஊழல் அரசியல்வாதிகள்” – இதுதான் அந்த டெம்பிளேட் – எல்லாவற்றையும் பெரும்பாலும் இவர்கள் எழுதும் எல்லாவற்றையும் நான் இந்த டெம்பிளேட்டில் அடைத்துவிடுகிறேன். இதை மேலும் விவரிக்க இயலுமென்றாலும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

மேலும் பெண்களை அபாசமாக எழுதுவதற்கு லைக் போடுபவர்களும், எழுதுபவர்களும் தேவையென்றால் பெண்களை தரக்குறைவாகப் பேச எத்தனிப்பவர்களும் தான் இவற்றை எதிர்க்கிறார்கள். அல்லது அப்படிப் பேசிவிட்டு ஆதரிப்பதிலும் என்ன இருக்கிறது? இப்படியே பேசிக்கொண்டு போனால் எனக்கும் யோசிக்கத்தெரியும், ஆராய்ந்து எழுதத்தெரியும் என்பதை விட பெரும்பாலும் இவர்களிடம் வேறு எந்த அடிப்படையும் இல்லை, உதாரணத்திற்கு கீழ் வருவது.

எல்லாரும் – நீங்கள் உட்பட – இப்போது  வரை மனிதக் கழிவு சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்பவர்கள் இருக்கும் நாடு என்று தொடங்கிவிடுகிறீர்கள். முதலில் எத்தனை ஆண்கள் வீட்டில் கழிவரை சுத்தம் செய்கிறீர்கள் அல்லது குறைந்த பட்சம் குளியலரையை, வீட்டினை சுத்தம் செய்கிறீர்கள் என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். பிறகு இவற்றைப்பேசலாம்.. அல்லது பெண்களுக்கென்று சமையலரையை ஒதுக்கிக்கொடுத்துவிட்டு அழகாக உட்கார்ந்து எந்நேரமும் முகநூலில் இருப்பதை, வலையில் படிப்பதை சுயபரிசோதனை செய்துகொண்டு இவற்றைப்பேசலாம். என் வயது வரை என் குடும்ப ஆண்கள் ஒருவரும் கழிவரை சுத்தம் செய்து நான் பார்த்ததில்லை. முதலில் துவங்குவதை உங்களிலிலிருந்தே துவங்குங்கள்.

அன்புடன்,
லைலா. X
டியர் லைலா. X,
என் மீதான விமர்சனத்துக்கு மட்டும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.  ஒரு பெண்ணை விட அதிகமாக பெண்களின் வேலையைச் செய்து கொண்டிருப்பவன் நான்.  இதுவரை ஒருவேளை கூட என் வீட்டில் நான் சமைக்காமல் சாப்பிட்டதில்லை.  நான் ஒரு மணி நேரம் சமையலறையில் இருப்பேன். வாழைப்பூ போன்ற விஷயங்களில் கை வைத்தால் சில நேரங்களில் இரண்டு மணி நேரம் கூட ஆகி விடும். அவந்திகா அரை மணி நேரம் சமைப்பாள்.  இதுதான் விகிதம்.  கக்கூஸ் கழுவுவது மாற்றி மாற்றி எங்கள் இருவரின் வேலை.  பணிப்பெண்களிடம் அந்த வேலையைச் சொல்வதில்லை.  25 ஆண்டுகளுக்கு முன்பு ரெகுலராக ஒரு பெண்ணின் தூரத்துணியைத் துவைத்துக் காய வைக்கும் வேலை கூட செய்திருக்கிறேன்.  உடல்ரீதியாக ஆண் குழந்தை பெறுவது சாத்தியமில்லை என்பதால் அதை மட்டும்தான் செய்யவில்லை.  மற்றபடி ஒரு பெண் குழந்தையைத் தன்னந்தனியனாக எந்தப் பெண்ணின் துணையும் இன்றி ஆறு மாதத்திலிருந்து எட்டு வயது வரை வளர்த்திருக்கிறேன்.   நான் துவங்கி 25 ஆண்டுகள் ஆகி விட்டது.  இப்போது நான் 63 வயது கிழவி.  இன்னமும் கிழவியால் செய்யக் கூடிய வேலைகளை – கக்கூஸ் கழுவுவது, சமைப்பது, இன்னபிற – செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
சாரு