மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு,
வணக்கம், சற்று முன்பு ‘நிர்பயா என்கிற ஜோதிசிங்’ என்ற வலைப்பதிவினைக் கண்டேன். http://charuonline.com/blog/?p=3588
நான் உங்களின் பெரும்பாலான கருத்துகளுக்கு ஒத்துப் போகிறவன். ஆனாலும் உங்களின் இந்தக் கருத்து எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்புடையது அல்ல.
முதலில் ‘பிறக்கும் போது அனைவரும் வெள்ளந்தியாகத்தான் இவ்வுலகைக் காண்கிறார்கள்’ என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒன்று .
அந்தச் சிறுவன் செய்த செயலை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவில் நமக்குத் தெரிந்தது ஒரு நிர்பயா தான். ஆனால் தினமும் ஒரு நிர்பயா பாதிக்கப்படுகிறாள் என்பதை பெரும்பாலோர் அறிவதில்லை.
தண்டனை என்பது செய்த தவறை சரி செய்யவே. அவன் சிறையில் இருப்பதை விட வெளியில் இருப்பதுதான் சிறந்த தண்டனையாக நான் கருதுகிறேன். சமுகத்தின் பார்வையில் அவன் ஒரு காமக்கொடூரன் என்பது படிந்து விட்டது. அவனுக்கு சக மனிதன் என்கிற அங்கீகாரத்தை அளிக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்.
என்னைப் பொறுத்தவரை தண்டிக்கப்பட வேண்டியர்கள் அவனது பெற்றோர் மற்றும் சமூகம். ஒருவன் குற்றவாளி ஆவதற்கு இவர்களே காரணம். கார்ல் மேக்ஸ் சுட்டிக் காட்டிய குற்றங்களுக்கு எவரும் தண்டிக்கப்பட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. கோடி கோடியாக ஊழல் செய்தவர்களால் வாழ்விழந்தவர்கள் பலர் என்பது மறைக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இப்போது அவனுக்குத் தண்டனை கிடைக்க வேண்டுமென்றால் குற்றம் செய்த மற்றவர்களுக்கு?
இன்றைய சிறைச்சாலைகள் சீர்திருத்தப் பள்ளிகளாக இருப்பதில்லை. மாறாக குற்றங்களை கற்றுக்கொள்ளும் பள்ளிகளாகவே இருக்கிறது என்பது நான் அறிந்த ஒன்று. (இதனை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்)
மாறாக சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு விதிகள் தேவையில்லை , நரகத்தில் இருபவர்களுக்குத்தான் விதிகள் தேவை. கார்ல் மேக்ஸ் கருத்து சொர்க்க விதிகள் அல்ல. நரகத்தில் இருந்து விடுபடுவதற்கான விதிகளாக கருதுகிறேன்
தெருநாய்களும் மனிதர்களும் ஒன்றாகிவிட முடியாது. அவன் திருந்த ஒரு வாய்ப்பாக இதை நீங்களும் ஒத்துக் கொண்டால் நான் மனம் மகிழ்வேன்.
உங்கள் கருத்துக்களின் காதலன் என்ற முறையில் இது எனது தனிப்பட்ட கருத்து…
ஸ்ரீநாத்.
டியர் ஸ்ரீநாத்,
லைலா X மற்றும் இது குறித்துக் கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நாவல் தருண் தேஜ்பாலின் The Story of My Assassins. ஜோதியை ஓடும் பஸ்ஸில் வன்கலவி செய்து கொன்றவர்களின் கதைதான் அது.
உங்கள் கடிதத்தில் ஏகப்பட்ட சுய முரண்கள் உள்ளன. நீங்களே படித்துப் பார்க்க வேண்டும். உங்கள் கடிதத்தில் நான் முரண்படும் சிலதை மட்டும் இங்கே மற்றவர்களின் வசதிக்காகவும் சுட்டிக் காட்டுகிறேன். ஆறரை அடி உயரமும் பதினேழே முக்கால் வயசும் கொண்ட ஒரு தடி மாட்டை நான் சிறுவன் என்று சொல்ல மாட்டேன். சிறுவன் என்ற வரம்பை 15 ஆகக் குறைக்க வேண்டும். பிறக்கும் போதே அனைவரும் வெள்ளந்தியாகப் பிறப்பதில்லை. வயிற்றில் கர்ப்பத்தைத் தாங்கிய நிலையிலும் தினமும் ஐந்தாறு பேர்களுக்குத் தொடை விரிக்கக் கட்டாயப்படுத்தப்படும் வேசியின் வயிற்றிலிருந்து பிறக்கும் சிசுவும் பாதாமும் பிஸ்தாவும் சாப்பிடும் கோடீஸ்வரி கர்ப்பிணி ஈனும் சிசுவும் ஒன்றல்ல. இரண்டின் குணநலன்களும் வேறுவேறானவை. பிறந்து ஒரே வயதில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கவனியுங்கள். அவ்வளவு ஏன், பிறந்தவுடனேயே ‘அம்மா’வின் கழுத்தில் கட்டப்பட்ட புடவை ஊஞ்சலில் தொங்கிக் கொண்டு உலகைப் பார்க்கும் குழந்தையும் நம்முடைய குழந்தையும் ஒன்று அல்ல. அம்மாவுக்கு ஏன் குறி போட்டேன் என்று புரிகிறதா? பிரசவ மருத்துவமனையிலிருந்து திருடப்பட்ட குழந்தையாகவும் இருக்கலாம்?
அந்தத் தடிமாட்டின் முகம் யாருக்கும் தெரியாது என்பதால் அவனுக்கு சமூகத்தில் எந்தப் பாதிப்பும் இருக்கப் போவதில்லை. அவனுடைய பெற்றோரைத் தண்டிக்க வேண்டும் என்று சொல்வது உச்சக்கட்ட அராஜகம். அவர்கள் பாவம். கிராமத்தில் வாழும் பஞ்சைப் பராரிகள். இந்தியாவில் தெருநாய்களை விடக் கீழான நிலையில் வாழும் 25 விழுக்காடு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
தெருநாய்களும் மனிதர்களும் ஒன்றாகி விட முடியாது. ஆமாம். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் தெருநாய்களை விடக் கீழான நிலையில் இருக்கிறார்கள். சந்தேகம் இருந்தால் வியாழக்கிழமைகளில் மைலாப்பூர் பாபா கோவில் வாசலில் கிடக்கும் ஆயிரம் பிச்சைக்காரர்களை வந்து பாருங்கள்.
சாரு