நிர்பயா (2) – சொர்க்கத்தின் விதிகளை நரகத்தில் பேசாதீர்கள் நண்பர்களே!

நிர்பயா கட்டுரையின் தொடர்ச்சி இது:

இந்தியா ஒரு நரகம்.  துப்புரவு தொழிலாளியின் சம்பளம் இங்கே 7000 ரூ.  என் பகுதியில் 5000 ரூ.  தினமும் அவர்கள் என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்கிறார்கள்.   50 ஆண்டுகளுக்கு முன்பே நாகூரில் நான் வாழ்ந்த சேரியில் சோற்றுப் பிச்சை.  இப்போது நவீன காலம்.  சோற்றுக்குப் பதில் ரூபாய்.  நூறு இருநூறு என்று.  மத்திய வர்க்க மென்பொருள் பொறியாளனின் ஊதியம் ஒன்றரை லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரை.  இதே சென்னையில்.  அதனால்தான் இந்தியா நரகம்.  இப்படிப்பட்ட நரகத்தில் வந்து தூக்குத் தண்டனை வேண்டாம் என்பது போன்ற உங்களின் சொர்க்கத்தின் விதிகளைப் பேசாதீர்கள் புத்திஜீவி, எழுத்தாளர் நண்பர்களே!  ஆறரை அடி உயரமுள்ள, பதினேழரை வயது சிறுவனுக்கு மரண தண்டனை கொடுக்கவில்லையானால் அவன் மேலும் பல ஜோதி சிங்குகளின் ஜனன உறுப்பில் இரும்புத் தடியை நுழைத்துக் குடலை உருவுவான்.  ஒருவேளை அவன் திருந்தி விட்டால் வேறு பல பதினேழரை வயது, ஆறரை அடி உயர கிராமத்துச் சிறார்கள் வந்து வேறு பல ஜோதி சிங்குகளின் ஜனன உறுப்பில் இரும்புத் தடியை நுழைத்துக் குடலை உருவுவார்கள்.

இது நரகம்.  ஒருத்தனுக்கு 5000 ரூபாயும் இன்னொருத்தனுக்கு 3 லட்சமும் சம்பளம் தரும் நரகம்.  இங்கே சொர்க்கத்தின் விதிகளைப் பேசாதீர்கள்.  இங்கே தொடர்ந்து 5000 ரூபாய்க்காரர்கள் தூக்கில் தொங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.  நரகத்தில் பிணங்கள் விழுந்து கொண்டே இருக்க வேண்டும்.  அது நரகத்தின் அடையாளம்.  வேறு வழியே இல்லை.  இதை மாற்ற வேண்டுமானால் தூக்குத் தண்டனை வேண்டுமா வேண்டாமா என்ற வாதத்தை மறந்து விட்டு, இந்தியா நரகத்திலிருந்து சொர்க்கத்தை நோக்கிச் செல்வதற்கான வழிவகைகள் என்ன என்று யோசியுங்கள்.  அதுவரை மனிதனைப் புசிக்கும் மனித மிருகங்கள் கொல்லப்படவே வேண்டும்.