நிர்பயா என்கிற ஜோதி சிங்

முகநூலில் நண்பர் கார்ல் மேக்ஸின் பதிவைப் படித்தேன்.  அவரது பதிவுகள் எப்போதுமே எனக்கு அந்தக் காலத்து நிறப்பிரிகை கட்டுரைகளை நினைவுபடுத்துகின்றன.  முதலில் கார்ல் மேக்ஸ்:

நிர்பயா வன்கொலையில் பங்குபெற்ற சிறுவன் மூன்றாண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்படும் நிகழ்வையொட்டி நேற்று சமூகவலைத்தளங்களில் நிலவிய ”மத்தியதர வர்க்க மனநிலையின் வன்முறை” அச்சமூட்டுவதாக இருந்தது. நிர்பயாவின் மரணம் யாரையும் கண்ணீர் சிந்தச்செய்யும் கொடுமைதான். அவள் எதிர்கொண்ட வன்முறையும், அதன் வழியே அடைந்த நிராதரவான மரணமும் எல்லா மனங்களையும் அசைக்கக் கூடியதே. அந்த வன்முறையின் அழுத்தத்தை மனதிற்குள் ஒட்டிப்பார்க்கும் ஒரு பெண் அச்சத்தில் எப்படி நடுங்குவாள் என்பதைப் புரிந்துகொள்கிறேன்.

வயது காரணமாக மூன்றாண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டு அவன் இன்று விடுதலை ஆகிறான். நடந்த குற்றத்தில் ஆகப்பெரிய வன்முறையைச் செய்தவன் அவன். அதனால் உயிரோடு இருக்கத் தகுதியற்றவன்; குறைந்தபட்சம் காலம் முழுதும் சிறையிலாவது இருக்க வேண்டியவன் என்று நினைக்கிறோம். சரி.

அவனுக்கு தண்டனை தரத்துடிக்கும் நமது சமூகம் எது? ஒரு வார மழையில் படிக்க முடியாமல் போனதற்காகவும், தங்களது குழந்தைகளின் புத்தகங்கள் நனைந்துவிட்டதற்காகவும் கண்ணீர் உகுக்கும் மத்தியதர வர்க்க சமூகம்.

ஆனால் அவன் யார்?

டிஜிடல் இந்தியாவின் ஒளிக்கற்றைகள் படாத பகுதியின் பிரதிநிதி அவன். அடுத்த வேளை சோற்றுக்காக டெல்லிக்கு வந்தவன். அவன் இங்கு இருந்த வரையில், மிகவும் நல்லவனாகத்தான் இருந்தான் என்ற அந்த கிராமத்தினரின் குரல் நம்மை எட்டவேப் போவதில்லை. எட்டினாலும் நாம், நம்முடய காதுகளைப் பொத்திக்கொள்வோம். ஏனெனில் இந்த நகரம் நம்முடையது. அவனை ரேப்பிஸ்டாக மாற்றியதில் நமக்கும் பங்கிருக்கிறது. அதை நம்முடைய குழந்தைகளின் முன் நம்மால் ஒத்துக்கொள்ள முடியாது. அதனால் அவனை பலி கொடுப்பதன் வழியாக, ”நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்” என்று நம்முடைய குழந்தைகளிடம் சொல்ல விரும்புகிறோம் .

அவன் நம்மைச் சேர்ந்தவன் இல்லை. நாம் அந்தளவிற்கு வன்முறையாளர்கள் இல்லை. ஆனால், அவன் நிகழ்த்திய வன்முறைக்குப் பின்னால், ”நீ எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவன் இல்லை” என்ற நமது குரல் இருக்கிறது. ஆம்.. “நான் உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவன் இல்லை” என்றுதான் அவன் நினைத்தான். அவன் நிகழ்த்தியது ஒரு பழிவாங்கல்.

எப்போதும் எளிதாக இலக்குகள் நிர்பயாக்கள்தான். அவர்கள் தான் சிக்கிக்கொள்வார்கள். அல்ல… நாம் அவர்களைத்தான் பணயம் வைக்கிறோம். நாம் நிர்பயாவுக்காக உகுக்கும் கண்ணீர் நிஜமென்று நம்பினால் நம்மை இந்த நேரத்திலாவது பரிசீலித்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் நிர்பயாவுக்காக வழியும் நமது கண்ணீருக்குப் பின்னால் அவ்வளவு போலித்தனம் இருக்கிறது. அவ்வளவு கபடம் இருக்கிறது. இது நமது மகளுக்கு நடக்கவில்லை என்ற ஆசுவாசம் இருக்கிறது. உரத்தக் குரலின் மூலம், தவறுகளை மறைத்துக்கொள்ளும் தந்திரம் இருக்கிறது. அவனைக் கொல்லவேண்டும் என்கிற கூச்சலுக்குப் பின்னால், நிஜங்களை எதிர்கொள்ளாத நமது கோழைத்தனம் இருக்கிறது.

மேலே சொல்லப்பட்டுள்ள, ஏதாவது ஒன்றிக்காவது ”இல்லை.. அப்படி இல்லை” என்று சொல்ல விரும்பினால், கீழ்க்கண்ட இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

அவனைப்போன்றவர்கள் எங்கிருந்து டெல்லிக்கு வருகிறார்கள்? இத்தகைய சிறுவர்களை டெல்லி போன்ற நகரங்களுக்கு அனுப்பும் வட இந்திய கிராமங்கள் என்னவாக இருக்கின்றன?

மேல்சாதி பெண்ணைக் காதலித்துவிட்டான் என்பதற்காக, ஒருவனது தாயையும், பதிமூன்றே வயதான அவனது தங்கையையும் கற்பழிக்கச்சொல்லி உத்தரவிடுகிறது கிராமப்பஞ்சாயத்து. ஊரிலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் முன்னால் அவர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இவனைப் போன்ற சிறுவர்களும் அதில் உண்டு. அந்தச் சிறுவர்களின் ஒருவன் நமது நகரத்துக்கு பிழைப்புக்காக வந்தால் அதை எப்படிப் பார்ப்பான்??

பத்து ரூபாயிலிருந்து பன்னிரெண்டு ரூபாய் கூலி உயர்வு கேட்டு, வேலைக்கு வர மறுத்ததற்காக ஒரு கிராமமே நிலச்சுவான்தாரர்களின் கூலிப்படையால் கொல்லப்படுகிறது. “எங்களிடம் இருந்த குறைந்த ஆயுதங்களைக்கொண்டு எவ்வளவு பேரைக்கொல்ல முடியுமோ அவ்வளவு பேரைக் கொன்றோம்” என்கிறான் அந்தக் கொலைகளுக்குத் தலைமைதாங்கியவன். “குழந்தைகளைக் கொன்றிருக்க வேண்டாமில்லையா?” என்ற கேள்விக்கு மீடியாவின் மறைத்துவைக்கப்பட்ட கேமரா முன் அவன் சொல்கிறான்; “அவர்கள் வளர்ந்து வந்து எங்களை எதிர்க்கத்தானே போகிறார்கள், அவர்களை ஏன் விட்டுவைக்க வேண்டும்?”. அந்த கிராமத்தில் இருந்து தப்பிப்பிழைத்த ஒரு சிறுவன் அல்லது தாக்குதலில் பங்கு பெற்ற ஒரு இளைஞன் நமது நகரத்துக்கு வந்தால் ஒரு பெண்ணை எப்படிப் பார்ப்பான்? அன்புடனா??

தங்களது நிலத்தை ஆக்கிரமித்த உயர்சாதிக்காரன் மீது புகார் கொடுத்ததற்காக முதிர்ந்த தாயும் அவளது மகளும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பிறகு கொல்லவும்படுகிறார்கள். ஒரே சாட்சி அந்த வீட்டின் ஆண். “நீங்கள் அப்போது எங்கிருந்தீர்கள் ?” என்று நீதிமன்றம் கேட்கிறது. “அவர்கள் கொல்லப்படுவதை, வீட்டிற்கு அருகில் உள்ள புதரில் மறைந்துகொண்டு நான் பார்த்தேன். நான் என்ன செய்திருக்க முடியும்? நான் தடுக்க முயன்றிருந்தால், நானும் கொல்லப்பட்டிருப்பேன்”என்று பதில் கூறினார் அந்த ஆண். அந்த வன்புணர்வும், கொலையும் மொத்த கிராமத்தின் கண்முன்பு தான் நடந்தது. அங்கு நின்றிருந்த சிறுவர்களில் ஒருவன் பிழைப்புக்காக டெல்லி வந்தால், அந்த நகரத்தை எப்படிப் பார்ப்பான் ? அவனது கண்களில் நகரம் என்பது என்ன? நாம் அவனுக்கு யார்?

மலம் கழிப்பதற்காக இரவில் வீட்டை விட்டு கொஞ்ச தூரம் சென்ற இரண்டு தலித் சிறுமிகள் வல்லுறவு செய்யப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்டார்களே? சூரியன் சுடத் தொடங்கியபிறகும் அந்த மென்கழுத்திலி ருந்து கயிறுகள் நெகிழ்த்தப்படாமல், போலீஸ் வருவதற்காக கிராமமே காத்திருந்ததே, அந்த இடத்தில் காத்திருந்த சில சிறுவர்கள் வளர்ந்து, நகரத்துக்கு வந்தால் அதை எப்படிப் பார்ப்பார்கள்?

மட்டுமல்லாது, விவசாய நிலங்கள் பிடுங்கப்பட்டவர்கள் அணைக்காகவும் அலுமினியத் தாதுக்காகவும் சொந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தபடுகிறவர்கள் என உதிரிகளாக நகரங்களை நோக்கி தினமும் வீசப்படுகிறார்களே சிறுவர்கள் அவர்களுக்கு நமது நகரம் காட்டும் முகம் எது?

நம்முடைய நகரத்துக்கு வெளியே ஒரு இந்திய வாழ்க்கை இருக்கிறது. அது ரத்தமும் வன்முறையுமானது என்பதை எப்போதாவது நாம், நம்முடைய மகளுக்கோ, மகனுக்கோ புரிய வைத்திருக்கிறோமா??? மேற்கூறிய எந்த சம்பவத்திலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவே இல்லை என்பது நம்முடைய குழந்தைகளுக்குத் தெரியுமா?? குறைந்த பட்சம் நமக்கு??

இப்போதும் அவனைக் கொன்றுவிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஏனெனில் இப்போதே அவனது உயிருக்கு ஆபத்து தான். அவனது பாதுகாப்பை ஒரு என்.ஜி.ஓ. தான் ஏற்றெடுத்திருக்கிறது. எவ்வளவு நாட்கள் அவற்றால் முடியும் என்று தெரியவில்லை. ஆனால் அவனைக் கொல்வதற்கு முன்னால், இறுதியாக ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். நான் மேலே சொன்ன எல்லாக் கொலைகளிலும் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் தண்டிக்கப்படவே இல்லை. போதுமான சாட்சிகள் இல்லாமல் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.

இத்தனைக் கூட்டுக் கொலையாளிகளுக்கு மத்தியில் அந்தக் குடும்பங்கள் வாழும்போது நாம் ஏன் இந்த சிறுவனைக் கொல்லாமல் அவனுடன் வாழ முடியாது??

இது கார்ல் மேக்ஸ் எழுதியது.

 

இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் ஒப்புக் கொள்கிறேன்.  ஆனால் எனக்கு இதற்கு மேலும் சொல்ல கொஞ்சம் இருக்கிறது. அதற்கு முன் சென்னையின் துப்புரவுத் தொழிலாளிகள் பற்றி பி.ஏ. கிருஷ்ணன் தன் முகநூல் பதிவில் சொல்லியிருப்பதைப் பார்ப்போம். அது கீழே:

”சென்னையைப் பொறுத்தவரையில் அதன் சாக்கடை களின் நீளம் 2,600 கிலோ மீட்டருக்கும் மேல். பாதாளச் சாக்கடைத் துளைகள் 80,000-க்கும் மேல். இதைத் தவிர 5,000 டன் குப்பைகளை நாம் தினமும் வெளியில் வீசுகிறோம். இதை அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டிய பொறுப்பு சுமார் 10,000 துப்புரவுத் தொழிலாளர்களுடையது. அவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது?

தொழிலாளர்களில் 95 சதவீதம் அருந்ததியர். வெறும் கயிற்றை மட்டும் துணையாகக் கொண்டு, சாக்கடையில் இறங்குபவர்களை உங்களில் பலர் பார்த்திருக்கக் கூடும். வெளியில் வந்தால் குளிப்பதற்கு வெகுதூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம். தமிழ்நாட்டில் மாதம் ஒருவராவது பாதாளச் சாக்கடையில் பாதுகாப்பு இல்லாமல் இறங்கி, இறக்கிறார்.

தூய்மை என்று சொல்லி, இவர்களை அதிக வேலை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் அபாயம் நிச்சயம் இருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்தால் விபத்துகள் அதிகம் நிகழக் கூடும்.

சம்பளம் என்ன?

இவ்வளவு ஆபத்தான தொழில் செய்பவர்களுக்கு நாம் என்ன சம்பளம் கொடுக்கிறோம்? தமிழக அரசின் சமீபத்திய அறிக்கையின் படி இவர்களின் சம்பளம் நாளைக்கு 278 ரூபாய். 25 நாட்கள் வேலை பார்த்தால் மாதம் 7,000 ரூபாய்க்கும் குறைவு.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிக்கை ஒன்றில் 17,000 துப்புரவுத் தொழி லாளர்களைக் கிராமங்களில் பணி நியமனம் செய்யப்போவதாக கூறப்பட்டிருந்தது. அவர்களுக்கு அறிவித்திருந்த சம்பளம் மாதம் 2,000 ரூபாய். 40 ரூபாய் பஞ்சப்படி!

மாறாக, நியூயார்க் நகரில் துப்பரவுத் தொழிலாளர் மாதம் 6,000 டாலர்கள் சம்பளம் வாங்குகிறார். ஓர் ஆரம்ப நிலைக் கல்லூரி ஆசிரியருக்கு அமெரிக்காவில் இதைவிடச் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும். மற்றைய இடங்களிலும் துப்புரவுத் தொழிலாளர்களின் கூலி மணிக்கு 12 டாலர்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

முதலில் சம்பளம் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும்!

இந்தத் தொழில் இயந்திரமயமாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த ஐயமும் நமக்கு இருக்கக் கூடாது. பெருநகரங்களில் வேலை செய்பவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பயிற்சி பெறாத துப்புரவுத் தொழிலாளர்களை எந்த நகரங்களிலும் வேலைக்கு அமர்த்தக் கூடாது.”

இனி என் பதில்: பி.ஏ. கிருஷ்ணன் சொல்வதைத்தான் நான் பலப் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.  நம் தெருவைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளி உண்மையில் ஒரு பிச்சைக்காரனை விட மோசமாக வாழ்கிறார்.  எந்தப் பிச்சைக்காரனுக்கும் இன்று மாதம் 7000 க்கும் மேல் வருமானம் வரும்.  அப்படிப் பிச்சை எடுக்க கௌரவம் இடம் கொடுக்காமல்தான் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கிறார்கள்.  ஆனால் நடுத்தர வர்க்கம் ஒரு சினிமாவுக்குப் போக ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறது.  இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை மனிதனுக்கும் மிருகத்துக்குமான வேறுபாடு ஏழைக்கும் பணக்காரனுக்கும் கிராமத்தானுக்கும் நகரத்தானுக்கும் இருந்து கொண்டேதான் இருக்கும்.  இங்கே மைலாப்பூர் பாபா கோவில் அருகே உள்ள சேரியில் உள்ள மனிதர்களின் வாழ்விடம் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் கக்கூஸ் அளவே இருக்கும்.  சுற்றிலும் செங்கல் அடுக்கப்பட்டு மேலே ஆஸ்பெஸ்டாஸ் பலகைகள்.  இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு.  வீடு கட்டிக் கொடுத்தால் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மீண்டும் புதிய சேரிகளை உருவாக்குகிறார்கள் என்பது மத்திய வர்க்கத்தின் குற்றச்சாட்டு.  அவர்களுக்குப் படிப்பை வழங்காமல், அவர்களையும் மத்தியதர வர்க்கமாக உருவாக்காமல் வீட்டை மட்டும் கட்டிக் கொடுத்தால் அப்படித்தான் அந்த வீட்டை விற்று விட்டுப் புதிய சேரிகளை உருவாக்குவார்கள்.

தெருநாய்களால் மனிதர்கள் கடிபட்டுச் சாகிறார்கள்.  எனவே தெருநாய்கள் கொல்லப்பட வேண்டும்.  இதை என்னிடம் சொன்னவர் ஒரு animal activist.  விலங்குகளின் நலன்விரும்பி.  எந்த ஆரோக்கியமான சமூகத்திலும் தெருநாய்கள் இருக்காது.  தெருநாய்கள் இல்லாத நல்ல சமூகத்தை உருவாக்கும் வரை தெருநாய்கள் கொல்லப்பட வேண்டும்.  நான் மனிதர்களை விட நாய்களை விரும்புகிறேன்.  தெருவில் நான்கு நாய்களுக்கு உணவிடுகிறேன்.  உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பைப் போன்றது அந்த நான்கு தெருநாய்களின் மீதான என் அன்பு.  ஆனாலும் சொல்கிறேன், தெருநாய்கள் கொல்லப்பட வேண்டும்.  ஆனால் வலிக்காமல் கொல்லுங்கள்.

நிர்பயா என்ற பெண்ணின் யோனியில் இரும்புக் குழாயைச் செருகி குடலை உருவியவன் அந்தப் பதினேழரை வயது சிறுவன். சிறுவன் என்றால் அஞ்சு வயது சிறுவன் அல்ல.  ஆறரை அடி இருப்பான். இந்தியா நல்லதொரு சமூகமாக ஆகும் வரை இப்படிப்பட்ட பதினேழரை வயது, ஆறரை அடி சிறார்கள் ஆயுள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டியவர்களே.  அவனைத் தெருவில் வைத்து அடித்துக் கொல்லுங்கள் என்றாள் நிர்பயா, சாகும் தருணத்தில்.   தெருநாயைப் போலவும், பிச்சைக்காரர்களைப் போலவும் 50 சதவிகித மனிதர்களை வைத்துக் கொண்டு என்ன பேசினாலும் அதில் தர்க்கம் இல்லை.  கார்ல் மேக்ஸ் பேசுவதும் நடுத்தர வர்க்க மனிதாபிமானம்தான்.  இந்திய சமூகம் புழுத்துக் கிடக்கிறது.  ஒன்று, எல்லோருக்கும் சம வாய்ப்பு நல்குங்கள்.  பி.ஏ. கிருஷ்ணன் பதிவை மீண்டும் படியுங்கள்.  சம வாய்ப்பு இப்போதைக்குக் கிடைக்காது போல் இருக்கிறது.  அதுவரை வெறிநாய்கள் கொல்லப்பட வேண்டியவையே.  வேறு வழியே இல்லை.  நான் நடுத்தர வர்க்கமாக இருப்பதற்கும் நான் நகரத்தில் வசிப்பதற்கும் என் மகளின் பெயர் ஜோதி சிங்காக இருப்பதற்கும் நான் காரணம் இல்லை.  என் தெருவின் துப்புரவுத் தொழிலாளிக்கு 7000 ரூபாய் ஊதியம் கிடைக்கவும் நான் காரணம் இல்லை.  நான் ஒரு சராசரி நடுத்தர வர்க்கம்.  என் மகளின் பிறப்புறுப்பில் இரும்புத் தடியை விட்டுக் குடலை உருவிய சிறுவன் ஆயுள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டியவனே ஆவான்.