ரசிகனின் கேள்வியும் முட்டாளின் பதிலும்…

கேள்வி:

என்னைப் பொருத்தவரை, இளையராஜாவிடம் அந்த இளைஞர் அதுபோன்ற கேள்வியை எழுப்பியதே மிகப்பெரிய தவறு என்று தோன்றுகிறது. நாம் பொருட்படுத்த வேண்டாத விஷயம் இது என்றும் தோன்றுகிறது. இளையராஜாவிடம் அவர் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை… நாளைக்கு முதல் அமைச்சரின் ப்ரஸ் மீட் நடக்கும். அப்போதும் இதே கேள்வியை எவரேனும் கேட்பார்களா?

கணேஷ் அன்பு.

முட்டாளின் பதில்:

கணேஷ், பொது இடத்தில் ஒரு அந்நிய மனிதரைப் பார்த்து, அதிலும் ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து உனக்கு அறிவு இருக்கா, என்னோடு பேச உனக்கு என்ன தகுதி என்று கேட்பதெல்லாம் மிகக் கொடூரமான வன்முறையாகத் தோன்றுகிறது. நாளைக்கு இன்னொரு ஞானி இன்னொரு பத்திரிகையாளரைக் கன்னத்தில் அறைந்தாலும் அறையலாம். அதுகூட தப்பில்லை தான். இல்லையா? பொது இடத்தில் ஒருவரைப் பார்த்து பத்து தடவை உனக்கு அறிவு இருக்கா என்று கேட்பதுகூட தப்பில்லை என்று நினைக்கும் அளவுக்கு நம் தோல் தடித்துப் போயிருப்பது உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. நான் என்றைக்காவது யாரையாவது நீ போ என்று பேசியிருக்கிறேனா?   என்னை விட 30 வயது குறைவான உங்களையெல்லாம் வா போ என்று குறிப்பிட்டிருக்கிறேனா? பொதுவெளியில் ஒரு நாகரீகம் வேண்டாமா? இது வன்முறைச் சமூகமாக மாறி விட்டது. ஜெயலலிதாவிடம் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. ஆனால் கருணாநிதியிடம் கேட்பார்கள். அவரும் எல்லோரும் சிரிக்கச் சிரிக்க பதில் சொல்வார். சொல்லியிருக்கிறார்…