முட்டாளின் பதில் தொடர்கிறது… (அநேகமாக இன்றே கடைசி!)

என் நண்பர் கணேஷ் அன்புவுக்கு இன்னும் ஒத்துக் கொள்ள முடியவில்லை போல.  வர்கலா பீச்சில் வைத்து இந்த விஷயத்தைப் பேசுவோம் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.  சென்ற கட்டுரைகளில் அதிகாரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  அதிகாரம் என்றால் என்ன?

நம் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர்.  மிகப் பெரிய பதவி.  நீங்கள் காலையில் வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது ஒரு சிப்பாய் உங்களைப் பார்த்து ஏய் இங்கே வா என்றால் நீங்கள் வாலைக் குழைத்துக் கொண்டு அவனிடம் ஓட வேண்டும்.  இல்லாவிட்டால் செவுளில் அறை விழும்.  நான் ஒரு கம்பெனியில் ஜெனரல் மேனேஜர் என்று சொல்லி உங்கள் பதவிப் பெருமையைச் சொன்னால் இன்னொரு கன்னமும் பழுக்கும்.  டேய் நீ எவனா இருந்தா எனக்கென்னடா, காட்டு உன் ஐடி கார்டை.  கூனிக் குறுகியபடி கார்டை எடுத்துக் காட்ட வேண்டும்.  மீறி ஏதாவது பேசினால் கூண்டு வண்டியில் ஏற்றி உங்கள் கொட்டையில் மின்சாரம் ஏற்றி விடுவார்கள்.  கேட்க ஒரு நாதி கிடையாது.  அதற்குப் பெயர் தான் அதிகாரம்.

போங்க சாரு, ராணுவ ஆட்சி, அது இதுன்னு.  நடக்கிற கதையைப் பேசுங்க என்கிறீர்களா?  நீங்கள் ஒரு பதினெட்டு வயது மாணவன்.  உங்கள் அப்பா சரியான முரடர்.  எப்போதும் அம்மாவை அடித்துக் கொண்டிருப்பார்.  உங்களையும்தான்.  அன்றைக்கு அவர் பார்வை உங்கள் மீது.  அடியோ அடி என்று அடித்து நொறுக்குகிறார்.  தடுக்க வந்த அம்மாவுக்கு பலத்த மாத்து.  ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியாது.  பேசினால் கொன்றே போட்டு விடுவார்.

ராஸ லீலாவிலிருந்து ஒரு உதாரணம் தருகிறேன்.  ஒரு அதிகாரி.  25 வயது.  அவருக்கு 55 வயதான ஸ்டெனோ.  ஸ்டெனோ எந்தத் தப்பும் செய்யவில்லை.  ஆனாலும் அதிகாரிக்கு அந்த ஸ்டெனோ மேல் அன்றைய தினம் கோபம்.  யோவ், உன்னை எனக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை.  நீ கோயம்பத்தூருக்குப் போய் விடு.  இங்கே இருக்காதே.  என் கண் முன்னே நீ வரக் கூடாது இனி.

சென்னை மவ்ண்ட் ரோட்டில் ஒரு மத்திய அரசு அலுவலகம்.  இப்போதும் இதுதான் நிலை.  ஸ்டெனோ அச்சத்துடன் வந்து தன்னுடைய சிறிய அறையில் அமர்ந்து அதிகாரி கொடுத்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்.  எதேச்சையாக வெளியே வந்த அதிகாரி ஸ்டெனோ இன்னும் அங்கேயே இருப்பதைப் பார்த்துக் கோபமடைந்து ஸ்டெனோவின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து வராந்தாவில் விட்டார்.  நடந்தது காலையில்.  மாலை ஐந்து வரை அந்த வராந்தாவிலேயே நின்று கொண்டிருந்தார் ஸ்டெனோ.  ஸ்டெனோவால் ஒரு வார்த்தை பேச முடியாது.  பேசினால் கோயம்பத்தூருக்கு ட்ரான்ஸ்ஃபர்.  ட்ரான்ஸ்ஃபர் என்றால் டிஸ்மிஸ் என்று பொருள்.  இங்கே ஒரு குடும்பம்,  அங்கே ஒரு குடித்தனம்,  எப்படி முடியும்?  காலை நக்கு என்றாலும் நக்க வேண்டியதுதான்.  வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பெண்டாட்டியையே கொண்டு போய் விட்டவர்களையெல்லாம் எனக்குத் தெரியும்.  அந்த அதிகாரி என்னை ஒருநாள் இடியட் என்று திட்டியபோது சிம்புவின் பாஷையில் திட்டி விட்டு ராஜினாமா கடுதாசி கொடுத்து விட்டேன்.  அலுவலகத்தில் என் தீவிர வாசகர் ஒருவர் பெரிய அதிகாரியாக இருந்ததால் அந்த ராஜினாமாவை விருப்ப ஓய்வாக மாற்றி என்னை வழியனுப்பி வைத்தார்.

ஆனால் நானும் அந்த ஸ்டெனோவைப் போல் அந்த அதிகாரியின் காலை நக்கினேன் என்றால் அந்த இடம் அதிகாரம்.  உங்கள் முகத்தில் யாரேனும் அறையும் போது பயத்தினால், கோழைத்தனத்தினால் நீங்கள் வாயை மூடிக் கொண்டிருந்தால் அங்கே நிலவுவது அதிகாரம்.  ஆண்டான் – அடிமை.

இதுவரை என் வாழ்வில் யார் மீதும் நான் அதிகாரத்தைப் பிரயோகித்தது இல்லை.  யார் மீதும்.  யார் மீதும்.  யார் மீதும்.  இதை எனக்குக் கற்பித்தது மிஷல் ஃபூக்கோ.  அப்போது என்னை  ஃபூக்கோவின் பிரேதத்தைத் தமிழ்நாட்டில் இழுத்துக் கொண்டு வரும் பின்நவீனத்துவவாதிகள் என்று என் பெயரைக் கூட குறிப்பிடாமல் எழுதினார் என் சக எழுத்தாள நண்பர்.  மேலும் என்ற சிறு பத்திரிகையில் அந்தக் கட்டுரை வந்திருந்தது.  இப்போது என் எழுத்தைக் கற்கும் என் வாசகர் ஆயிரம் பேராவது என்னைப் போலவே அதிகாரத்தை யார் மீதும் எந்தத் தருணத்திலும் பிரயோகிக்காமல் வாழக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இளையராஜா அந்த இளைஞரை உனக்கு அறிவு இருக்கா என்று கேட்டதுதான் அதிகாரம்.  அங்கே அப்போது அந்த இளைஞர் என்ன செய்தார்.  ராஜா பலமுறை அந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்ட போதும் அவர் வாயைத் திறக்காமல் பிறகுதான் அறிவு இருக்கிறதாலதான் கேட்கிறேன் என்கிறார்.  டேய் முட்டாள் என்று திட்டும் போது என்ன சார் என்னை முட்டாள்ங்கிறீங்க என்று கெஞ்சும் அடிமையின் ’பா’வம் அது.  ஆண்டான் – அடிமை.  அந்த இளைஞரும் பதிலுக்கு யோவ் உனக்கு அறிவு இருக்கா சொல்லுய்யா என்று சொல்லியிருந்தால் அங்கே என்ன நடந்திருக்கும்?  ரகளை ஆகியிருக்கும்.  அந்த இளைஞரைப் பலரும் சேர்ந்து தப்பியிருப்பார்கள்.  இல்லையா?  அந்த இளைஞர் தன் மீது விழுந்த வசையை ஏற்றுக் கொண்டார்.

இப்படிப்பட்ட அதிகாரத்தை, உனக்கு அறிவு இருக்கா?, உங்கள் வீட்டுப் பணிப்பெண் மீது செலுத்தினால் கூட அவர் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வர மாட்டார்.  திரும்பவும் ராஜா செய்ததை நியாயப்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள்.  உங்களைப் பார்த்து ஒருவர் அப்படிச் சொன்னால் எப்படி இருக்கும் என்று மட்டும் யோசித்துப் பாருங்கள்.

அந்த இடத்தில் போய் அப்படிக் கேட்கலாமா?

சரி, கேட்டு விட்டார்.  உங்களுக்குக் கோபம் வருகிறது. அதை எப்படிச் சொல்ல வேண்டும்?  தம்பி, இதுவா அதைக் கேட்கும் இடம்?  நாளைக்கு வாங்க, சொல்கிறேன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.  மாறாக உனக்கு அறிவு இருக்கா என்றால் அது அந்தக் காலத்து நிலப்பிரபுத்துவ பண்ணையார் மனோபாவம் தான்.

பொதுவாக கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும்.  பிடிக்காதவர்களையெல்லாம் உனக்கு அறிவு இருக்கா என்று கேட்டு சுட்டுக் கொன்று விடுவார்கள்.  அல்லது, சைபீரிய குளிர்ப்பாலைவனத்தில் கொண்டு போய் விட்டு விடுவார்கள்.  காரணம் என்னவென்றால், ஒடுக்கப்பட்டவர்கள் பதவியைப் பிடிக்கும் போது இப்படித்தான் அதிகாரம் ஆட்டம் போடும்.  அப்படியானால் நான் ஒடுக்கப்பட்டவர்களின் எதிரியா என்றால் இல்லை.  நானும் ஒடுக்கப்பட்டவன் தான்.  ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரத்துக்கு வரும் போது அதிகாரத்தைத் தங்கள் ரத்தத்திலிருந்து தனியே எடுத்து அகற்றி விட வேண்டும்.  அதற்கு ஒரே வழி, இலக்கிய வாசிப்பு.