கணித மேதை ராமானுஜன் பற்றிய பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை ரொம்ப நன்றாக இருப்பதாக பி.ஏ. கிருஷ்ணன் சொல்லியிருந்ததால் உடனே அந்தக் கட்டுரையைப் படிக்கப் போனேன். ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. தமிழில் எழுதப்பட்ட கட்டுரைதான். சரி, நமக்குத்தான் கணிதம் என்றால் ஒரு எழவும் புரியாதே என்று கீழே கீழே வரிகளைத் தள்ளிக் கொண்டு போனால் கடைசியில் நாகேஸ்வர ராவ் பூங்கா கணக்கு என்று ஒரு தலைப்பு இருந்தது. பூங்கா என்றால் நல்ல வார்த்தைதான். ஆனால் அதோடு கணக்கு என்ற வார்த்தையும் சேர்ந்து இருந்ததால் ஏதாவது மேட்டர் சிக்கியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நான் அறிந்த வரை பத்ரி ரொம்ப நல்லவர் ஆயிற்றே என்றும் சம்சயம் ஆனது. சரி, என்னதான் இருக்கிறது, பார்த்து விடுவோம் என்று போனால் பின்வரும் ஒரு கணிதம் இருந்தது. நூறு முறை படித்தேன். புரியவில்லை. ம்… ஞாபக சக்திக்கு வல்லாரை லேகியம் சாப்பிடலாம். இவ்வளவு எளிமையான கணக்குகள் கூடப் புரியாவிட்டால் என்ன சாப்பிட்டு மூளையை வளர்க்கலாம்? அதற்கு ஏதாவது லேகியம் இருக்கிறதா? சரி, இவ்வளவு கடினமான விஷயங்கள் ஒருவருக்குப் புரிகிறது; இன்னொருவருக்குப் புரியவே இல்லை. இதற்கு என்ன காரணம்? மூளையில் ஏதாவது சில செல்கள் எனக்கு இல்லையா? ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு ஒரு ஞானம் கிடைத்தது. தமிழர்கள் ஏன் இலக்கியம் என்றால் பேய் பிசாசைக் கண்டது போல் ஏன் தெறித்து ஓடுகிறார்கள்? சிலரிடம் வலுக்கட்டாயமாக இலக்கியப் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். மண்டையில் ஆயிரம் தேள் கொட்டுவது போல் உணர்ந்ததாகச் சொன்னார்கள். அதேபோல் தான் பத்ரியின் கணிதமும் என் மண்டையில் கொட்டியது. ஆயிரம் தேள். எனக்கெல்லாம் ஒன்னும் ஒன்னும் ரெண்டு, ரெண்டும் ரெண்டும் நாலு என்பது போன்ற கணிதம்தான் சுலபமாக வருகிறது. இப்போது பத்ரியின் நாகேஸ்வர ராவ் பூங்காவின் கணக்கு:
”ராமுவும் சோமுவும் நண்பர்கள். இருவரும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடை பயிலச் செல்கிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இருவரது நடை வேகமும் வேறு வேறு. ராமு, சோமுவைவிட வேகமாக நடக்கிறான். ராமு ஆறு முறை பூங்காவைச் சுற்றி முடிக்கும்போது சோமு ஐந்து முறைதான் சுற்றி முடிக்கிறான்.
இருவரது வேகமும் ஒரே சீராக இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், ராமு, சோமுவைவிட எவ்வளவு சதவிகிதம் அதிக வேகமாக நடந்தான்?”
ஆயிரம் தேள்கள் கொட்டிக் கொண்டே இருப்பதால் நாளையே யாராவது ஒரு ஸைக்கியாட்ரிஸ்டைப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். இன்று முழித்த நேரம் சரியில்லை.